சென்ற ஆகஸ்ட் மாதத்துக்கான டாப் 10 பயணிகள் கார் விற்பனையில் முதல் ஆறு இடங்களை மாருதி சுஸுகியின் 6 மாடல்கள் பிடித்து அசத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஆகஸ்ட் மாதத்துக்கான டாப் 10 கார் விற்பனையில் முதல் ஆறு இடங்களை மாருதி சுஸுகியின் 6 மாடல்கள் ஆக்கிரமித்து கொண்டுள்ளன. இப்பட்டியலில்,22,237 விற்பனை எண்ணிக்கையுடன் ஆல்ட்டோ முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டிஸையர் உள்ளது. இம்மாடல் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 21,990-ஆக இருந்தது.
இவற்றையடுத்து, மூன்றாவது இடத்தில் ஸ்விஃப்ட் (19,115), நான்காவது இடத்தில் பலேனோ (17,713), ஐந்தாவதுஇடத்தில் வேகன் ஆர் (13,658),ஆறாவது இடத்தில் விட்டாரா பிரெஸ்ஸா (13,271) ஆகிய மாருதியின் ஆறு மாடல்கள் உள்ளன.
இதையடுத்து அடுத்தடுத்த இடங்களில், ஹுண்டாயின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, கிரெட்டா, ஹோண்டாவின் அமேஸ் மாடல்கள் உள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.