செப்டம்பர் சோகம்! மீளுமா காளை-?

இந்திய பங்குச் சந்தைகளைப் பொருத்தமட்டில், முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் மாதம் போதாத காலமாக மாறிவிட்டது எனலாம்.
செப்டம்பர் சோகம்! மீளுமா காளை-?

இந்திய பங்குச் சந்தைகளைப் பொருத்தமட்டில், முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் மாதம் போதாத காலமாக மாறிவிட்டது எனலாம். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரை மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 2,000 புள்ளிகளை இழந்து 36,841.60-இல் நிலைகொண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 600 புள்ளிகளை இழந்து 11,341.10-இல் நிலை கொண்டுள்ளது. அதாவது இந்த மாதத்தில் இதுவரை கிட்டத்தட்ட சுமார் 5 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளன.
 சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி, அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பாதகமான அரசியல் சூழ்நிலைகள், சீன - அமெரிக்க வர்த்தகப் போர் உள்ளிட்டவை பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
 பொதுவாகவே, கடந்த 2008 முதல் இதுவரையிலான 10 ஆண்டு காலத்தில் 5 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்களில் இருந்து தெரிகிறது. 2008 செப்டம்பரில் 11%, 2011-இல் 2.1%, 2014-இல் 1%, 2016, 2017 ஆகிய ஆண்டுகளின் செப்டம்பர் மாதம் 2% வரை சரிவை சந்தித்துள்ளன. அதே சமயம், 2009, 2010 செப்டம்பரில் 10%, 2012-இல் 8% 2013-இல் 3%, 2015 செப்டம்பரில் 2% வரை சென்செக்ஸ் ஏற்றம் கண்டது.
 இந்த ஆண்டில் ஆகஸ்டில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. குறிப்பாக ஜூலை, ஆகஸ்டில்தான் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு புதிய புதிய உச்ச அளவைப் பதிவு செய்தது. இந்நிலையில் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், புரோக்கிங் நிறுவனங்களிடையே ஒருவித அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது. இதனால், இந்த மாதத்தின் இறுதியிலாவது காளை மீண்டு வந்து ஆதிக்கம் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
 ஆனால், இதற்கான சாத்தியக்கூறுகள் மிக, மிகக் குறைவாக உள்ளதாகவே தொழில்நுட்ப ரீதியாலான கணிப்புகள் கூறுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 பங்குச் சந்தைகள் சரிவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் ஒரு காரணம் என பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 6 ஆண்டுகளில் செப்டம்பர் மாதங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், 2008, 2010, 2014, 2017 ஆகிய ஆண்டுகளின் செப்டம்பர் மாதங்களில் அதிக அளவு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.
 அதே சமயம், கடந்த 10 ஆண்டு வரலாற்றில் 5 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளன. 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது புள்ளிவிவரங்களில் இருந்து தெரிய வருகிறது.
 கடந்த ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. அதற்கு சர்வதேச அளவிலான சாதகமான செய்திகள், உள்நாட்டில் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றி உள்ளிட்டவை இதற்குக் காரணமாக அமைந்தன.
 ஆனால், செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு 72.9 வரை வீழ்ச்சி கண்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பணவீக்கம் குறைந்து வந்தாலும், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை.
 இந்த நிலையில்தான், பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதேபோன்று கனரா வங்கி, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றுடன் நலிவடைந்த வங்கிகள் இணைக்கப்படும் என்றும் பங்குச் சந்தையில் செய்திகள் பரவி வருகிறது. இதனால், வங்கிப் பங்குகள் பலத்த அடி வாங்கியுள்ளன.
 மேலும், ஐ.எல். அண்ட் எஃப். எஸ்., டிஹெச்எஃப்எல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் பரவியது. இதன் காரணமாக நிதி நிறுவனப் பங்குகள் கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தன. டிஹெச்எஃப்எல் நிறுவனப் பங்கு 42% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், பஜாஜ் பைனான்ஸ், இந்தியாபுல்ஸ், எம் அண்ட் எம் பைனான்ஸ், ஆர்.இ.சி.பிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 4 முதல் 10% வரை சரிவைக் கண்டது. இதற்கிடையே, பாதகமான செய்திகளின் காரணமாக யெஸ் வங்கியின் பங்கு 29% வீழ்ச்சி கண்டது.
 இதற்கிடையே, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் தொழில்நுட்ப ரீதியிலான கணிப்புகளின்படி முக்கிய ஆதரவு (சப்போர்ட்) இடங்களில் ஆதரவு கிடைக்காமல் போனதும் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. மேலும், யாரும் எதிர்பாராத சூழ்நிலையில், பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை முறியடித்து எழுந்துள்ள கரடி, முழுப் பாய்ச்சலில் உள்ளது எனலாம்.
 இது ஒருபுறம் இருக்க, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், கரடியின் பிடியில் இருந்து காளை மீண்டு வருமா என முதலீட்டாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், சென்செக்ஸ் தனது 52 வார அதிகபட்ச அளவான 38,990 புள்ளிகள், நிஃப்டி தனது 52 வார அதிகபட்ச அளவான 11,760 புள்ளிகள் என்ற நிலையைக் கடந்து, தொடர்ச்சியாக 3 நாள்களுக்கு மேல் நிலைகொண்டால்தான் காளையின் முழுப் பாய்ச்சலை எதிர்பார்க்க முடியும் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஒரே வாரத்தில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு
 இந்திய பங்குச் சந்தை வரலாற்றில், 2018 செப்டம்பர் 21-ஆம் தேதி, அதிகபட்ச நிலையற்ற தன்மையில் வர்த்தகம் அமைந்திருந்த நாளாகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 37,489.24 வரை உயர்ந்திருந்த நிலையில் பிற்பகலில் சுமார் 1,500 புள்ளிகள் சரிந்து 35,993.64 வரை குறைந்தது. பின்னர் சுமார் 1,000 புள்ளிகள் மீண்டு, வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 36,841.60-இல் நிலை பெற்றுள்ளது.
 அதேபோல நிஃப்டியும் கடும் சரிவைச் சந்தித்து இறுதியில் 91 புள்ளிகள் சரிந்து 11,143 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த செவ்வாய், புதன் ஆகிய நாள்களிலும் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. இதனால், கடந்த வாரத்தில் நடைபெற்ற 4 வர்த்தக தினங்களில் ஒட்டுமொத்தமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிஎஸ்இ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1,249 புள்ளிகளையும், நிஃப்டி 400 புள்ளிகளையும் இழந்துள்ளது. இது 3.2% வீழ்ச்சியாகும்.
 
 - மல்லி எம். சடகோபன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com