இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது

"புத்தகம்', "என்னமோ ஏதோ', "தீரன் அதிகாரம் ஒன்று' படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் திடீரென்று
இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது

"புத்தகம்', "என்னமோ ஏதோ', "தீரன் அதிகாரம் ஒன்று' படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் திடீரென்று தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று மளமளவென பட வாய்ப்புகளைக் குவித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும் அவர் 5 படங்களில் நடித்தார். முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த ரகுல் ப்ரீத்துக்கு 2018-ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் இல்லாத ஆண்டாகவே அமைந்தது. தமிழ், தெலுங்கு எதிலும் அவருக்கு ஒரு படம் கூட இந்த ஆண்டில் வெளியாகவில்லை.  

கடந்த 2017-ஆம் ஆண்டு  மகேஷ்பாவுடன், "ஸ்பைடர்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரகுல் அப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார். புதிய வாய்ப்புகளுக்காக காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒரு படம் கூட அவருக்கு கைகூடவில்லை.  வரும் 2019-ஆம் ஆண்டில் சூர்யாவுடன் "என்ஜிகே', சிவகார்த்திகேயனுடன் புதியபடம், கார்த்தியுடன் "தேவ்' என 3 படங்களில் நடித்து வருவதுடன் மறைந்த என்டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

-----------------------

தணிக்கை குழு பற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்தசாமி. இது குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், "தணிக்கை குழு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால் அது எல்லாமும் பொருந்தாத நிலையில் உள்ளது. தமிழ் சினிமாவில் ஆணும், பெண்ணும் முத்தம் கொடுப்பது போல் காட்சி இருந்தாலே "யூ' சான்றிதழ் கிடைக்காது. அது எதற்காக வைக்கப்படுகிறது. அதில் ஆபாசம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அன்பை வெளிப்படுத்தும் முத்தக் காட்சியை கூட அனுமதிப்பதில்லை. அதே போன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறையை காட்டி விட்டுத்தானே, அதற்கு தீர்வு சொல்ல முடியும். அந்த வன்முறைக்கு வக்காலத்து வாங்கவில்லை என்பதை எப்படி புரிய வைப்பது. தணிக்கையில் அரசியல் இருக்கிறது. இங்கே நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது.  நாங்கள் அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்த மாட்டோம். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களைக் காயப்படுத்துவது அல்ல. சிந்திக்க வைப்பது. அது போல சினிமாவின் வேலை போதிப்பது அல்ல. சந்தோஷப்படுத்துவது.  அதில் வருகிற கருத்தும் முக்கியம். இனி சர்ச்சைக்குரிய படங்களில் நடிக்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார் அரவிந்தசாமி.

---------------------
 

"பாகுபலி' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரபாஸ். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் "சாஹு' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபாஸ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  தெலங்கானா மாநிலம் ராயதுர்க பகுதி பன்மக்தா கிராமத்தில் உள்ள 84 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் அரசு நிலம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதேபகுதியில் பிரபாஸின் பண்ணை வீடு உள்ளது. அந்த பங்களாவுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். "வரைமுறைப்படுத்தப்பட்ட  விதிகளின் அடிப்படையில் வாங்கிய அந்த வீட்டை முன் அறிவிப்பு இல்லாமல் சீல் வைத்திருக்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று பிரபாஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வரைமுறைப்படுத்தப்பட்ட விதி என்பது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதியாகும். இதைக் கேட்ட நீதிபதிகள்,'பிரபாஸ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரா?' என்றனர். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், "பிரபாஸ் ஏழை அல்ல, அவர் பாகுபலி' என்றார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.  
---------------------
 

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் "விஸ்வாசம்'.  தொடர்ந்து நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்தப் படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, போஸ் வெங்கட், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. "தூக்கு துரை' என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.  சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி, அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்துக்கு "யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை, நயன்தாராவின் "அறம்' படத்தைத் தயாரித்த கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. அத்துடன், ஏரியா வாரியாக யார் யார் விநியோக உரிமையைப் பெற்றுள்ளனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. "விஸ்வாசம்' படத்துடன், ரஜினி நடித்துள்ள "பேட்ட' படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 
 

---------------------


தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. "பொல்லாதவன்', "ஆடுகளம்', சமீபத்தில் வெளிவந்த "வட சென்னை' என இந்த கூட்டணியில் உருவான அனைத்துப் படங்களுமே விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் தனித்துவம் பெற்றவை. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. படத்துக்கு "அசுரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. "வடசென்னை' படத்தை 2 பாகங்களாக உருவாக்க திட்டமிட்டார் வெற்றிமாறன். அதனை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸிலும் உறுதிப்படுத்தினார். ஆனால், 2-ஆவது பாகத்துக்கு முன்னதாக, மற்றொரு கதையில் வெற்றிமாறனும், தனுஷும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை இருவருமே உறுதி செய்தார்கள். தற்போது தனுஷ் இயக்கத்தில் "மாரி 2' வெளியாகியுள்ள சூழலில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ். "அசுரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னையை பின்னணியாக கொண்ட கதைக்களம் என தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com