நிகழ்காலத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! வெஸ் ஆண்டர்சன்

காமிக்ஸ் தன்மையில் தனது திரைப்படங்களை கட்டமைக்கின்ற வெஸ் ஆண்டர்சன் சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
நிகழ்காலத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! வெஸ் ஆண்டர்சன்

காமிக்ஸ் தன்மையில் தனது திரைப்படங்களை கட்டமைக்கின்ற வெஸ் ஆண்டர்சன் சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது திரைப்படங்கள் பிரத்யேக கதை விவரிப்பு முறையை கொண்டிருக்கின்றன. நடிகர்களின் விசித்திர பாவனைகள், உடல்மொழி, திரைப்படத்தில் படர்ந்திருக்கும் பகட்டான வண்ணம், துள்ளலான பின்னணி இசை என ஒருங்கே இணைந்த இவருக்கே உரித்தான தனித்துவமான திரையாக்க பாணியொன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்.

பாட்டில் ராக்கெட் எனும் திரைப்படத்தின் வழியாக தனது திரையுலக பயணத்தை துவங்கிய வெஸ் ஆண்டர்சன் இதுவரையிலும் 9 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு திரைப்படமும் மிகுதியான கவனத்தை விருது விழாக்களில் பெற்றிருக்கிறது. பொதுவாக இவரது திரைப்படங்கள் மனித மனதின் விசித்திர போக்குகள் குறித்த விசாரணை செய்வதைப் போலவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக, மனிதர்களின் அர்த்தமற்ற குரோதம், அதிகாரத்துவம், பகையுணர்ச்சியை மையமிட்டே இவரது திரைக்கதைகள் அமைந்திருக்கின்றன. சமீப காலத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட தி கிராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல் சர்வதேச அளவில் பல்வேறு உயரிய விருதுகளை குவித்திருக்கிறது. வெஸ் ஆண்டர்சனிடம் தி கிராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல் குறித்து திரைப்பட விமர்சகர் ஹெலன் பேர்லவ் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.  

ஏன் உங்களது திரைப்படங்களில் நிறைந்துள்ள கதாப்பாத்திரங்கள் எல்லோரும் விசித்திரமான குணவியல்புகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்?

ஒருவேளை எனக்கு அவர்கள் மிக அதிக இயல்புடன் இருப்பவர்களாக தெரிந்திருக்கலாம். The Grand Budapest Hotel-ல் வருகின்ற குஸ்டவ் ஹெ. கதாப்பாத்திரம் உண்மையில் எனக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவரின் சாயலில் படைக்கப்பட்டதுதான். வழக்கமான குணவியல்புகள் உடையவர் என்று அவரைப் பற்றி பொதுவாக குறிப்பிட மாட்டேன். எனினும், வழக்கமான குணவியல்புகளை கொண்ட மனிதர்களுக்கு உங்களது படைப்பாக்க செயல்பாடுகளில் எவ்வித முக்கியத்தையும் அளிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்களது நண்பர் நிகழ்காலத்தை விட கடந்த காலத்தை சேர்ந்த மனிதரென்று நினைக்கிறீர்களா?

ஆமாம். அதிகபடியாகவே. அவர் என்னவிதமான மனிதரென்றால், நீங்கள் அவரை 15 வயதில் (இப்போது அவருக்கு 50 வயது) பார்த்திருந்தாலும், இதே இயல்புகளோடுதான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். சிறுவயதிலேயே, முழுக்க முழுக்க தனது சுய கற்பிதங்களால் உருவான மனிதராக அவர் இருந்திருப்பார். அதிகளவில் சிந்திக்கக் கூடியவராகவும், தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவிப்பவராகவும் அதோடு நற்பண்புகள் நிறைந்த மனிதராகவும் அவர் இருக்கிறார். இளைஞராக அவரிருக்கும் போது, தன்னை விட வயதில் பெரியவர்களுடன்தான் நட்புடன் பழகியிருக்கிறார். தற்போதும் அவர் தன்னை விட 25 வயது அதிகளமுள்ள பெண்ணொருவருடன்தான் வசித்து வருகிறார். முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கையை அணுகும் போக்கு மற்றும் சிந்தனையோட்டத்தின் மீது அவருக்கு பெரியளவில் ஈர்ப்பிருக்கிறது. அவர் ஒரு ஓவிய விற்பனரும்கூட.

எப்படி இந்த திரைக்கதை உருவானது?

எட்டு வருடங்களுக்கு முன்னதாக நானும், எனது நண்பரான ஹுகோ கின்னஸும் இணைந்து எங்கள் இருவருக்குமிடையில் பொது நண்பராக இருந்த மற்றொரு நண்பரை பற்றிய கதை எழுதுவதென்று தீர்மானித்து, எழுத்துப் பணியை துவங்கினோம். அது திட்டமிடப்பிட்டு துவங்கப்பட்ட பணியல்ல. வெகு தற்செயலாக அதன் எழுத்துப் பணியை ஆரம்பித்திருந்தோம். கதையை முதல் 20 நிமிடங்களுக்கு வளர்த்தெடுத்து பிரான்ஸுக்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கதை நகர்வது வரை எழுதியதற்கு பிறகு, அடுத்து கதையில் இயல்பாக என்ன நிகழ வேண்டுமென்பது எங்களுக்கு புரிபடவில்லை. அதனால், அதனை ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட்டோம். அதன்பிறகு, அடுத்த சில வருடங்களில் ஆஸ்திரிய எழுத்தாளரான ஸ்டீபன் ஸ்விக்கின் படைப்புகளை தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அவர் 1920 மற்றும் 1930ஆம் வருட நினைவுகளைப் பற்றி தனது படைப்பாக்கங்களில் எழுதியிருந்தார். அதோடு, அவரைப் பற்றி மிக குறைவான அளவிலேயே இங்கிலாந்தில் அறிந்து வைத்திருந்தார்கள். உடனடியாக, இவ்விரு விஷயங்களையும் பிணைத்து திரைக்கதையை உருவாக்கலாம் என்கின்ற எண்ணம் உருவாகியது. நாங்கள் கதையை 30-களில் நிகழ்வதாக அமைத்துவிட்டு, எங்களது நண்பரை விடுதி வரவேற்பு பணியாளராக மாற்றி எழுதினோம். ஏனெனில், அவரால் உலகத்தின் மிகச் சிறந்த வரவேற்பாளராக பணியாற்ற முடியும். அதன்பிறகு, நாங்கள் கிழக்கு ஐரோப்பிய பகுதிகள் மற்றும் ஜெர்மனியிலும் முழுமையாக கதைக்கு தேவையான தங்கும் விடுதியை தேடி அலைந்தோம். ஆனால், அனைத்து தங்கும் விடுதிகளும் காலத்தில் மாற்றமடைந்திருந்தன. இந்த சுற்றுப் பயணத்தில் ஒருபுறம் திரைக்கதையும் நன்கு வளர்ந்துக் கொண்டிருந்தது. பல புதிய திறப்புகளை இந்த பயணம் எங்களுக்கு அளித்திருந்தது. இறுதியில், போலந்து எல்லைக்கு அருகிலிருந்த கோர்லிட்ஸ் எனுமிடத்தில் இருந்த பல்பொருள் அங்காடியை கண்டடைந்தோம். அது நாங்கள் தேடியலைந்து கொண்டிருந்த அமைவிடத்திற்கு மிகச் சரியாக பொருந்துவதாக இருந்தது.

உங்களது திரைப்படங்களில் பல உருக்கமான தருணங்கள் இருக்கின்றன. அதோடு, கைப்பேசியை உங்களது திரைப்படங்களில் பார்க்கவே முடிவதில்லை. மனிதகுலம் தனது மதிப்பீடுகளை இழந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? நாம் கடந்த காலத்தினுள் ஊடுருவி பயணிக்கும் போது அதனை மீண்டும் கண்டுபிடிக்க இயலும் என கருதுகிறீர்களா?

உங்களது கேள்விக்கு என்னிடம் நேரடியான பதிலிருப்பதாக கருதவில்லை. திரையாக்க செயல்பாடுகளில் நான் ஈடுபட்டிருக்கும் போது நினைத்து கொள்கின்ற ஒரு விஷயம் என்னவெனில், எனது கதை நிகழ்வதற்கான பிரத்யேகமான உலகமொன்றை உருவாக்க வேண்டுமென்பதுதான். எங்களது கதாப்பாத்திரங்களுக்காக நானும் எனது குழுவினரும் இணைந்து உருவாக்க முயலுகின்ற தனித்துவமான வெளியை குறித்தும் மட்டும்தான் நாங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருப்போம்.

புற உலகத்தில் உங்களால் ஒருபோதும் அவ்வகையிலான நிலவெளியை பார்க்கவோ, பயணம் செய்யவோ முடியாது. தகவல் தொழிற்நுட்பங்கள் மிகுந்திருக்கும் நம் பார்வையிலிருக்கும் உலத்திலிருந்து நெருங்கவியலாத உலகமொன்றை கட்டமைப்பதுதான் எனது நோக்கம். ஸ்பைக் ஜோன்ஸ் தனது திரைப்படங்களில் முற்றிலும் தெளிவுற கட்டியெழுப்பப்பட்ட உலகமொன்றை உருவாக்குகிறார். அதுவொரு பரிணாம வளர்ச்சியின் நீட்சியைப் போன்றது. அது அடுத்த நிலை. இது எனக்கும் பொருந்துமென்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் நிகழ சாத்தியமிருக்கும் சம்பவங்கள் குறித்து எனது படைப்பாக்கங்களில் ஏதேனும் செயல்படுத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.

நிகழ்காலத்தின் மீது எனக்கு விருப்பமில்லை. அல்லது அதனோடு எப்படி பொருந்திப் போவதென்று என்று இன்னமும் புரியவில்லை. ஆனால், எனது எதிர்கால படைப்புகள் எந்த திசையில் பயணிக்கும் என்று இப்போதே முன் அனுமானித்து சொல்வது கடினமானது.

The Grand Budapest Hotel திரைப்படத்தில் ஹாலிவுட் திரையுலகின் பொன்விழா காலத்தின் தாக்கம் இருப்பதைப்போல தோன்றுகிறது. அக்காலங்களில், ஐரோப்பிய நிலவமைப்புகள் கலிபோர்னியா நகரத்திலேயே உருவாக்கப்பட்டிருந்தன?

30களில் வெளியான அத்திரைப்படங்கள் எப்போதுமே என்னை தாக்கத்திற்குள்ளாக்குபவையாக தான் இருக்கின்றன. ஐரோப்பிய நிலக்காட்சிகளை அமெரிக்காவில் அவை உருவாக்கியிருந்த பாணியும், வடிவமைப்பும் பெரிதும் பாதித்திருக்கிறது. நாங்கள் எல்லோரும் இணைந்து பல திரைப்படங்களை கோர்லிட்ஸில் இருந்த தினங்களில் பார்த்தோம். ஜெர்மானிய இயக்குனரான லுபிட்ச்சின் திரைப்படங்களை பார்த்தோம். Grand Hotel, To be or not to be, மார்க்ரெட் சுலீவன் நடித்திருந்த The good fairy, Love me tonight, The rouben mamoulian, மிகச் சிறந்த நடிகரான பிராங்க் மோர்கன் நடித்த The Mortal Storm மற்றும் ஸ்விடீஸ் திரைப்படமான The Silence ஆகியவைகளை பார்த்தோம். இத்திரைப்படங்களில் இருந்த விடுதியறை காட்சிகள் குறித்து நிறைய விவாதித்தோம்.

நீங்கள் முன்காலத்திய ஹாலிவுட் சினிமாக்களின் திரை விகிதத்தைக்கூட உங்களது திரைப்படத்தில் உபயோகித்திருக்கிறீர்கள்?

ரால்ஃபின் கதை 30களில் நிகழ்கிறது என்பதால், அந்த திரை விகிதம் அக்காட்சிகளுக்கு சரியாக பொருந்துவதாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரையில் இயக்கப்பட்டிருந்த திரைப்படங்கள் கொண்டிருந்த சதுர வடிவத்திலான திரை அமைப்பை எனது திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டுமென்று விரும்பினேன். அவைகளை உருவாக்குவதில் இருந்துவந்த கடினத்தன்மை இன்றைய டிஜிட்டல் யுகத்தில் விலகியிருக்கிறது. இப்போது டிஜிட்டல் தொழிற்நுட்பத்தின் மூலமாக அதனை மீளுருவாக்கம் செய்ய முடிகிறது. 

வளர் பருவத்தில் நீங்கள் பழைய திரைப்படங்களைதான் தொடர்ச்சியாக பார்த்து வளர்ந்தீர்களா?

இல்லை. திரையரங்கம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட எதுவொன்றையும் விரும்பக் கூடிய நிலையிலேயே நான் வளர்ந்தேன். அக்காலத்தில் ஸ்டார் வார்ஸ் திரைப்படம் மிகப் பெரிய கிளர்ச்சியை உருவாக்கியிருந்தது. டிஸ்னி தயாரித்த திரைப்படங்களை நேசித்தபடியே நாங்கள் வளர்ந்தோம். அதோடு, ஜான் ஹுக்ஸின் திரைப்படங்களும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தன.

ஐம்பது வயதை கடந்துவிட்ட பின்பும், அதே 15 வயது சிறுவனின் மனநிலையை கொண்டிருக்கும் மனிதர் நீங்கள் இல்லை அல்லவா?

இல்லை. மிக மந்தமாகவும், நிதானமாகவும் வளரக் கூடிய மனிதன் நான் என்றே கருதுகிறேன்.

திரைப்படங்களில் நேர்த்தியை அடைவது வரம் என்று கருதுகிறீர்களா அல்லது அவை அதிக அக நெருக்கடி அளிக்கக் கூடிய செயல்பாடா?

அத்தகைய நேர்த்தியை திரைப்படம் உருவாக்கும்போது நான் உணருவதில்லை. பொதுவாக, நான் என்ன செய்ய முயலுகின்றேன் என்றால், ஒரு காட்சியை உருவாக்குகின்ற போது, அதன் அமைப்பில் எதனை சேர்க்க வேண்டுமென்றும், நான் நினைத்த வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்றும் அதோடு கூடுதல் கேளிக்கை மிகுந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் காட்சியை உருவாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் பற்றிதான் அதிகளவில் சிந்தித்துக் கொண்டிருப்பேன். ஒரு வகைமாதிரியில் சிக்கிக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லை. இவ்வகையில்தான் செய்ய வேண்டும், காட்சி வடிவமைப்புக்கு என்று சில விதிகள் இருக்கின்றன, அவைகளில் மீறல் இருக்கக் கூடாது என்பதில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. என்னால் இயன்றவரையில் காட்சிகளில் ஆன்மாவை கொண்டு வர முயற்சிக்கிறேன். சில நுணுக்க தகவல்களை காட்சியில் புகுத்துவதன் மூலமாக நான் இதனை அடைய முயற்சி செய்கிறேன்.

விடுதி வரவேற்பாளர் கதாப்பாத்திரத்திற்கு ஜானி டெப்பை நீங்கள் அணுகியதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்படுகிறதே?

நாங்கள் சில தருணங்களில் சந்தித்து உரையாடியிருக்கிறோம் என்றாலும், இத்திரைப்படம் குறிப்பாக ரால்ஃபுக்கு உரியதுதான். ரால்ஃப் ஒரு ஆங்கிலேயர். படத்தில் அவர் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஸுப்ரோவ்கா குடியரசை சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு எழுதப்பட்ட வசனங்கள் யாவும் ஒரு ஆங்கிலேயனின் உச்சரிப்பிலேயே அமைந்திருந்தன. அதோடு, அந்த பாத்திர உருவாக்கமும் பெரிதும் ஆங்கிலேயனையே ஒத்திருந்தது. எனக்கும் ரால்ஃபுக்கும் பல வருடங்களாக தொடர்பு இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். அவரால் நீண்ட வாக்கியங்களை துலக்கமாக எவ்வித தடையும் இல்லாமல் உச்சரிக்க முடியுமென்பது எனக்கு தெரியும்.

டோனி ரிவோலோரியை ஸீரோ கதாப்பாத்திரத்துக்கு எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?

நிறைய நடிகர்களை அக்கதாப்பாத்திரத்திற்கு பரிசீலனை செய்துப் பார்த்தோம். எனினும், நடிப்பு தேர்வின்போது டோனி சுவாரஸ்யமான மனிதராக எனக்கு தோன்றினார். எங்கள் கதாப்பாத்திரத்துக்கு தேவையான வசீகரமான தோற்றமும், நகைச்சுவை உணர்வை கிளர்த்தும் வகையிலான உருவ அமைப்பும் அவரிடம் இயல்பாகவே இருந்தது. அதோடு, படத்தில் பங்கு பெற்றிருந்த அனைத்து நடிகர்களும் அவர்களுக்கே உரித்தான பிரத்யேக உச்சரிப்பில்தான் படத்தில் வசனங்களை பேசியிருக்கிறார்கள். அதனால், ஸீரோவின் கதாப்பாத்திரம் கலீபோர்னியாவின் அனெஹெய்ம் பகுதியை பின்புலமாக கொண்டிருக்கலாம் என்பது நல்லதொரு தேர்வாக எங்களுக்குப்பட்டது. டோனி அந்த கதாப்பாத்திரத்திற்கு மிக அதிக பொருத்தமான மனிதராக இருந்தார்.

ஹார்வி கெய்ட்டில் தனது 74 வயதிலும் திரைப்படத்தில் வலுவான கவர்ச்சிக்குரிய மனிதராக காட்சியளித்தார். அவரது உடலில் பச்சைக் குத்தப்பட்டிருந்ததும் வசீகரமாக இருந்தது.

ஆமாம். அவர் வலிமையான மனிதர்தான்.

மீண்டும் திருடன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் ஏதேனும் தயக்கத்தை வெளிப்படுத்தினாரா?

இல்லை. ஹார்வி கெய்ட்டில் மிக அற்புதமான மனிதர்.  நாங்கள் நியூ யார்க்கில்தான் முதல் முதலாக சந்தித்தோம் என்றாலும், பல வருடங்களாகவே ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருந்தோம். அவர் எனது விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர்.

உங்களது திரைப்படங்களிலேயே The Grand Budapest Hotel -ல் மட்டும்தான் ஓவன் வில்சன் மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த கதாப்பாத்திரத்தில் ஓவன் நடித்திருக்க வேண்டும் என்கின்ற அவசியம் எதுவும் நிலவியிருக்கவில்லை. அதுவொரு மிகச் சிறிய கதாப்பாத்திரம். அதனால், அவரை இதில் பங்கேற்க வைக்கலாம் என்ற முடிவை எடுக்க சில காலம் தேவைப்பட்டது. ஆனால், ஓவன் வில்சன், ஜேசன் ஸ்கார்ட்ஸ்மேன் போன்ற நடிகர்கள் எனது திரைப்படத்தில் இருப்பதை நான் விரும்புகிறேன். சாத்தியமிருக்கும்போதெல்லாம் அவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது எனது பெரு விருப்பம். எனது மூன்ரைஸ் கிங்டம் திரைப்படத்தில் மட்டும்தான் ஓவன் நடிக்கவில்லை. நடிகர்களுடன் குடும்பம் போன்றதொரு உறவினை வளர்த்துகொள்ள விரும்புகிறேன். நாங்கள் விரும்பும்போதெல்லாம் ஒன்றிணைய வாய்ப்பிருக்கும் மனிதர்களை சம்பாதிக்க விழைகிறேன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிது புதிதான பல உறவுகள் எனக்கு கிடைக்கின்றன. கடந்த திரைப்படத்தில் டில்டா ஸ்விண்டனும், எட் நோர்டன் எங்கள் குடும்பத்தில் புதிதாக சேர்ந்திருந்தார்கள். அந்த தொடர் பட்டியல் இப்போதைய புதிய வரவுகள் ரால்ஃப்பும், ஜூடும்.

நீங்கள் விரும்பிய எல்லோரும் The Grand Budapest Hotel திரைப்படத்தில் நடித்திருக்கிறார்களா?

ஒவ்வொரு திரைப்படத்திலும் நான் அணுகுகின்ற எண்ணிக்கையில் பாதி நபர்களாவது வெவ்வேறு காரணங்களால் எனது திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுத்து விடுவார்கள். அதனால் பெரும்பாலானோர் இரண்டாம் நிலை தேர்வில் அணுகப்படுவர்தான் நடித்திருக்கிறார்கள்.  ஆனால், இந்த திரைப்படத்தில்தான் எனது விருப்பத்திற்குரிய அனைவரும் மறுப்பு தெரிவிக்காமல் பங்கேற்றிருக்கிறார்கள். டில்டா கதாப்பாத்திரம் மட்டும் முன்னதாக, ஏஞ்சலா லான்ஸ்பரி நடிப்பதாக இருந்தது. அவருக்கு இப்போது எண்பது வயதாகிறது. ஆனால் ஏஞ்சலாவால் நடிக்க இயலவில்லை என்பதை உணர்ந்ததும், உடனடியாக எனக்கு டில்டாவின் நினைவுதான் வந்தது. எனினும், டில்டாவை நான் ஏதேனுமொரு வகையில் படத்தில் பங்கேற்க செய்யவேண்டுமென்று விரும்பியிருந்தேன். அதனால், படத்தில் ஏஞ்சலா மறுத்திருந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கச் செய்தோம். 85 வயது முதியவளாக தோன்றும்படி டில்டாவுக்கு ஒப்பனை செய்திருந்தோம்.

ஏன் நடிகர்கள் உங்களது அழைப்பை மறுக்கிறார்கள்? எல்லோரும் உங்களுடன் இணைந்து பணியாற்றதானே விரும்புவார்கள்?

ஆஹா. நீங்கள் அப்படி சொல்வது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. ஆனால், உண்மை வேறுவிதமானது.

சம்பள விவகாரமாக இருக்கலாம். அல்லவா?

ஆமாம்.

ஒருவேளை நீங்கள் மிக அதிக சுறுசுறுப்புடன் துரிதமாக செயல்படுகிறீர்கள் என்பதாலும் இருக்கலாம். இல்லையா? வூட்டி ஆலன் மிக விரைவாக செயல்படக்கூடியவர். அதற்காகவே பல நடிகர்கள் அவருடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள்.

ஆமாம். ஆமாம் (விரலை சுண்டுகிறார்). அவர் ஒவ்வொன்றாக செயல்படுத்துகிறார். ஆனால், பணம் இதில் மிகப் பெரிய காரணமாக இருக்கிறது. அதோடு, சிலருக்கு நாம் அணுகுகின்ற திரைப்படமோ அல்லது அவர்களது கதாப்பாத்திரமோ பிடிக்கவில்லை என்றாலும்கூட படத்தில் நடிக்க மறுக்க தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.

ஐரோப்பியா மீது நீங்கள் கொண்டிருக்கும் அதீதமான நேசம் எந்த தருணத்தில் இருந்து உண்டாகியது?

கடந்த 10 வருடங்களில், மிகுதியான காலத்தை நான் ஐரோப்பியாவில் செலவிட்டு வருகிறேன். இதற்கு முன்பு, என் வாழ்நாளில் இவ்வளவு காலம் நான் ஐரோப்பியாவில் கழித்ததில்லை. உலகம் சார்ந்த எனது கண்ணோட்டத்தையே இங்கிருந்த காலவெளி பாதித்து, முற்றிலுமாக மாற்றி இருக்கிறது என்று கருதுகின்றேன். ஐரோப்பியாவில் பயணிக்கும்போது என்னை பெரிதும் ஒரு அயல் தேசத்தவனாகவே உணருகிறேன். அதேப்போல, இங்கிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும்போது, அமெரிக்காவும் எனக்கு அந்நிய நிலவெளிப்போலவே தோன்றுகிறது. இந்த உணர்வு முன்பெல்லாம் எனக்கு உருவானதில்லை. நான் மிக விரைவாக ஐரோப்பியாவை மையப்படுத்தி மற்றொரு திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறேன்.

அப்படியானால் நீங்கள் நியூயார்க்குக்கும், பாரீஸுக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?

நியூயார்க்குக்கு சென்றே சில காலம் ஆகிறது. அதோடு பாரீஸில் எனக்கு ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் நாங்கள் The Grand Budapest Hotel திரைப்படத்தின் இறுதி நிலை தயாரிப்புகள் பணிகளை மேற்கொண்டோம். எனினும், கடந்த சில வருடங்களில் எனது மிகுதியான நேரத்தை நான் ஜெர்மனியில்தான் செலவிட்டு வருகிறேன். 

இந்த உலகத்திலேயே உங்களுக்கு மிகவும் விருப்பமான தங்கும் விடுதி எது?

இதுவொரு நல்ல கேள்வி. வியன்னாவில் இருக்கின்ற இம்பீரியல் விடுதி மிக அற்புதமானது. உலகத்தில் உள்ள அனைத்து தங்கும்விடுதிகளை விடவும், இந்த விடுதிதான் நமது கதாப்பாத்திரங்களுடன் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிகின்ற விடுதி. நமது மைய கதாப்பாத்திரத்தின் உலகம் அத்தனை பெரியது. அதோடு, வியன்னா நாவலாசிரியரான ஸ்வெக்கின் நகரமும்கூட. அதனால் எனக்கு பெரிதும் விருப்பமான விடுதியாக இம்பீரியலை முன்னிருத்துகின்றேன்.

மக்கள் கருதுவதைப்போல, எப்படி ஐரோப்பியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தீர்கள்?

திரைப்படம் எடுக்க எனக்கு உந்துதல் அளித்த திரைப்படங்கள் யாவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உருவாக்கப்பட்டவை. இரண்டும் சரிநிகராக என்னை கவர்ந்திருக்கிறது. நான் கல்லூரியில் பயின்றுவந்த தினங்களில், நூலக்கத்தில் அமர்ந்து திரைப்படம் தொடர்பான அனைத்தும் நூல்களையும் வாசித்துக் கொண்டிருப்பேன். அறுபதுகளில் உருவாக்கப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை பற்றி நான் அந்த நூலகத்தில் அறிந்து கொண்டேன். உலகளவில் பிரபலமாகியிருந்த ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய திரைப்படங்கள். அதோடு, அக்காலத்திய ஆட்டியர் வகை இயக்குனர்கள் குறித்தெல்லாம் அறிந்து கொண்டேன். அமெரிக்க இயக்குனர்களான மார்டின் ஸ்கார்ஸஸி, பீட்டர் பொக்டானோவேச், கப்பாலோ, மைக் நிக்கோல்ஸ் என்மீது எவ்வகையிலான தாக்கத்தை உருவாக்கினார்களோ அதே அளவில் த்ரூபாவும், கொடார்ட்டும், பெர்க்மேனும், பெலினியும், குரோசாவாவும், அதோடு ஜெர்மானிய புதிய அலை படைப்பாக்கங்களும் என்னை வெகுவாக பாதித்திருக்கின்றன.

எட்டு சிறுகதைகளை அடிப்பையாக கொண்டு நீங்கள் திரைப்படம் உருவாக்கி வருகிறீர்கள் எனும் செய்தி உண்மையானதா?

இருக்கலாம். என்னிடம் ஏராளமான சிறுசிறு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் முழுயொரு திரைப்படமாக உருவாக்க சாத்தியமில்லாதவைகளாக இருக்கின்றன. அதனால், அனைத்தும் பிணைத்து ஒரு கதை உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.

படைப்பாக்கம் சார்ந்த குழப்பங்கள் உங்களுக்கு இருக்கின்றனவா?

ஒவ்வொருமுறை ஒரு திரைப்படத்தை துவங்கும்போதும், என்னையே நான் புதுப்பித்துக் கொண்டுதான் அந்த பணியில் ஈடுபடுகிறேன். முழுமையடைந்த திரைப்படத்தை பார்வையிடும் மக்கள் நான் ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் இயக்கிக் கொண்டிருப்பதாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனினும், என்னைப் பொருத்தளவில் அது முற்றிலுமாக புதியதொரு படைப்பாக்கம்தான் என்பதில் சந்தேகமே எனக்கு இருப்பதில்லை.   

தமிழில்: ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com