உயரச் சிலை; உயர்ந்ததா நிலை?

அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவியின் சிலையைவிட அளவில் பெரிய சிலையை, சர்தார் வல்லபபாய் படேலுக்கு, சர்தார் சரோவர் அணைக்கட்டின் அருகே திறந்துள்ளது மத்திய அரசு.

அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவியின் சிலையைவிட அளவில் பெரிய சிலையை, சர்தார் வல்லபபாய் படேலுக்கு, சர்தார் சரோவர் அணைக்கட்டின் அருகே திறந்துள்ளது மத்திய அரசு. இதை ஒரு சாதனையாக அவரைச் சார்ந்தவர்கள் அறிவித்துக் கொள்கின்றனர்.
 அமெரிக்காவின் சிலையை விஞ்சுவது முக்கியமா? அல்லது அமெரிக்காவின் நிலையை விஞ்சுவது முக்கியமா என்ற விமர்சகர்களின் வினாக் கணைகள் தவிர்க்க முடியாதவை. நமது ரூபாய் மதிப்பைவிட, அமெரிக்க டாலர் மதிப்பு 74 மடங்கு அதிகமாக உள்ளது. விடுதலை அடைந்த இந்தியாவில் ஒரு டாலருக்கு நிகர் ஒரு ரூபாய்தான்.
 சிலைகளை உயரமாக அமைப்பது செம்மாந்தத் திறமாகுமோ என்ற கேள்வி ஒருபுறம் உறங்கட்டும். தேசப்பிதா காந்தி பிறந்த மாநிலத்தில் காந்திக்கே இல்லாத அளவுக்கு, காந்தியாரின் உண்மைத் தொண்டருக்கு, இவ்வளவு பெரிய சிலை வைப்பதன் பின்னணி அரசியலும் விவாதத்திற்குரியது.
 அதேநேரத்தில், ஒரு பேராளுமையை கெüரவிக்க வேண்டும் என்பது அவர் தனது வாழ்வில் அடியொற்றி நடந்த விழுமியங்களுக்கு விரோதமில்லாத வகையில் அமைய வேண்டும். மகாத்மா காந்தியின் புகழை மது விருந்தால் கொண்டாட முடியுமா? புத்தபிரானின் புகழைப் போர் வெற்றியால் போற்ற முடியுமா? முஹம்மது நபிகளின் புகழை மூடத்தனங்களால் முழங்க முடியுமா? ஏசுபிரானின் புகழை எளியோரை வஞ்சித்துக் கொண்டாட முடியுமா?
 அவ்வாறு செய்ததைப் போன்றாகி விட்டது வல்லபபாய் படேலுக்கு வைக்கப்பட்ட மூவாயிரம் கோடி செலவிடப்பட்ட சிலையின் நிலையும்.
 1918-ஆம் ஆண்டில் விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசு விதித்த கடுமையான நிலவரியைத் தள்ளுபடி செய்ய, வல்லபபாய் படேல் நடத்திய மாபெரும் போராட்டம், அண்ணல் காந்தியின் கவனத்தை அவர்பால் ஈர்த்தது.
 இந்திய சுதந்திரப் போரில் படேல் காந்தியடிகளோடு கரம் கோத்துக் களமிறங்கினார். "பாரிஸ்டர்' பட்டம் பெற்றவர் என்றாலும் எளிமையையே தனது இயல்பாக்கிக் கொண்டார். "வேளாண் பண்பாடே நமது பண்பாடு' ("அவர் கல்ச்சர் ஈஸ் அக்ரிகல்ச்சர்') என்பது அவரது புகழ்பெற்ற வாசகம்.
 "எனக்கு ஒரே ஆசைதான். அது, விடுதலை அடைந்த இந்தியா உற்பத்தியில் முதலிடம் வகிக்க வேண்டும். இங்கு யாரும் பஞ்சத்தால் பசித்திருக்கக் கூடாது. உணவில்லாமல் யாரும் ஒரு துளி கண்ணீரும் வடிக்கக் கூடாது' என்று வல்லபபாய் படேல் கூறினார்.
 சிலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர விடுதி, பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு அதி சொகுசு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாம். பன்னாட்டு சுற்றுலாப் பயணியர்க்கு பட்டுக்கம்பளம் விரிப்பதுதான், இவர்களுக்குப் படேல் கற்றுத்தந்த பாடமா?
 வல்லபபாய் படேலும் ஜவாஹர்லால் நேருவும் காந்தியின் இரு கரங்களாய்த் திகழ்ந்தவர்கள். இரு கரங்களுமே இருவேறு தன்மை கொண்டவைதான்.
 வல்லபபாய் படேல் வலுவான வலதுசாரிப் பார்வை உடையவர் என்றால், ஜவாஹர்லால் நேருவோ இம்மியும் பிசகாத இடதுசாரித்தன்மை கொண்டவர்.
 வல்லபபாய் படேலின் வலதுசாரி வன்மையோ, நேருவின் இடதுசாரித் தன்மையோ காந்தியம் கிழித்தக் கோட்டைக் கடைசி வரைத் தாண்டாமல், கட்டுப்பட்டு நின்றிருந்தது நமது கவனத்திற்குரியது.
 சுதந்திர இந்தியாவில், காந்தியின் நினைவுச் சின்னங்களைவிட, தனக்கு உயரமான நினைவுச் சின்னம் அமைய வேண்டும் என்று வல்லபபாய் படேல் கடுகளவும் விரும்பியிருக்க மாட்டார். படேலின் மண்ணில் அவர் பெயரால் நடக்கும் இந்த அலங்கோலத்தை காணும் வாய்ப்பு அவருக்கிருந்திருந்தால், தனது கொள்கையைக் கொலைசெய்த கொடுமையை மன்னித்திருக்கவே மாட்டார்.
 இந்தியாவில் விவசாயிகளின் நிலை எத்தகைய அவலத்தில் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் அறிந்திருக்கவில்லையா? 2015-ஆம் ஆண்டில் மட்டும் 12,602 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக "என்சிஆர்பி' என்னும் "தேசியக் குற்றப்பதிவு ஆணையம்' புள்ளிவிவரம் தந்துள்ளது. 2014-ஐ விட 2015-இல் 42 விழுக்காடு விவசாயிகள் தற்கொலை கூடி இருப்பதாகவும், விவசாயத்தால் ஏற்பட்ட கடன் சுமையே இதற்குக் காரணம் என்றும் இவ்வாணையம் குறிப்பிட்டுள்ளது.
 தமிழக விவசாயிகள், தலைநகர் தில்லியில் நூறு நாள்களுக்கும் மேலாகத் தங்கி, நாளுமொரு நூதனப்போராட்டம் நடத்தி, பிரதமரின் கடைக்கண் பார்வைத் தங்கள்மீது விழும் என்று எதிர்பார்த்தனர். கடைசி வரை அவர்களுக்கு தரிசனம் தராமல் தட்டிக்கழித்தார் நமது பிரதமர்.
 ரஷியத் தலைவர் லெனினை சந்திக்க, வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவர் வந்தாராம். அவரது அலுவலகத்தில், முக்கியப் பிரமுகரோடு அதிபர் லெனின் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறி காத்திருக்கச் சொன்னார்களாம். நீண்ட நேரம் காத்திருந்த அந்த வெளிநாட்டுப் பிரமுகர், தன்னைவிட முக்கியமான அந்தப் பிரமுகர் யாரென அறிய ஆர்வம் கொண்டிருக்கிறார். வெளியில் வந்த அவரை விசாரித்தபோது, அவர் ஒரு விவசாயி என்பது தெரிந்திருக்கிறது.
 வெளிநாட்டுப் பிரமுகரை விட, உள்நாட்டு உழவருடன், வேளாண்மை வளர்ச்சி குறித்து பேசுவது முக்கியம் என்று லெனின் நினைத்திருக்கிறார். திரிபுராவில் லெனின் சிலையை அடியோடு தகர்த்தவர்கள் அவ்வாறு சிந்திப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
 விவசாயிகள் வேதனையின் உச்சத்தில்... சிறு வியாபாரிகளின் வாழ்வோ சித்திரவதைப் படலத்தில்... தொழிலாளர் வர்க்கத்துக்கோ தொடர்ச்சியான நெருக்கடிகள் என தேசத்தின் பிரச்னைகள் நீண்டிருக்க, உயரச் சிலையே தமது உன்னத சாதனை என்று எண்ணி மகிழ்வதை என்னென்று சொல்வது?
 ஒரு குடியரசு தினத்தன்று, உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் 75 குழந்தைகள், ஆக்சிஜன் உருளைப் பற்றாக்குறையால் பரிதாபமாக இறந்தன.
 ஆக்சிஜன் உருளை நிறுவனத்திற்கு அம்மாநில அரசு, அதிகமான கடன் பாக்கி வைத்ததால், அந்நிறுவனம் விநியோகத்தை நிறுத்தியது. இதனால், ஏதுமறியா இளம்பிஞ்சுகள் உயிரிழந்தன.
 இந்தியாவின் இரும்பு மனிதருக்கு, சீன இரும்பில் சிலை செய்ய சுமார் மூவாயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி, பொதுத்துறை நிறுவனங்கள், சமூக நலனுக்காக ஒதுக்கும் "கார்ப்பரேட் சோஷியோ ரெஸ்பான்ஸிபிலிடி' ("சிஎஸ்ஆர்') என்ற நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 இந்தச் சிலையை நிறுவ, "இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' 900 கோடி, "ஓஎன்ஜிசி' 500 கோடி, "பாரத் பெட்ரோலியம்' 250 கோடி, "ஆயில் இந்தியா கார்ப்பரேஷன்' 250 கோடி, "கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா' 250 கோடி, "பவர் கிரிட்' 125 கோடி, "குஜராத் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்' 100 கோடி, "எஞ்சினியர்ஸ் இந்தியா' 50 கோடி, "பெட்ரோனெட் இந்தியா' 50 கோடி ரூபாய் நிதி வழங்கிய செய்தி சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
 நலத்திட்டங்களுக்கான, பொதுத்துறை நிறுவன நிதிகளை சிலைத் திட்டத்திற்கு மடைமாற்றியது நியாயமாகுமா?
 எரிபொருள்களின் விலை விண்ணைத்தொடும் வேளையில், "குறையுங்கள் எரிபொருள் விலையை' என்ற மக்களின் கூக்குரலைக் கொஞ்சமும் கருதாமல், பொதுத்துறை நிறுவன லாப நிதிகளை நாட்டு மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல், இரும்புச் சிலைக்கும், நட்சத்திர விடுதிக்கும் செலவிடுவது மக்களாட்சிக்கு மகத்துவம் சேர்க்குமா?
 படேல் சிலைக்கு "ஒருமைப்பாட்டுச் சிலை' என்று பொருள்படும் "ஸ்டேட்யூ ஆஃப் யூனிட்டி' என்று பெயரிட்டு, அதன் காலடியில் இருக்கும் கல்வெட்டில், "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என்று எழுதி, தமிழைச் சிறுமைப்படுத்தலாமா?
 பாகிஸ்தான் வங்க மொழியைச் சிறுமைப்படுத்தியதன் விளைவாக, பங்களாதேஷ் என்ற புதிய நாடு உதயமானது. அதற்கு மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்த்தது நமது நாடு.
 பிரிவுபடாத பாகிஸ்தானில் இருந்த மக்களின் மொழியுணர்வை மதித்த தேசம், தனது மாநில மக்களின் மொழியுணர்வை சிலையடிவாரத்தில் சிறுமை செய்வது எவ்வகையில் நியாயம்? வல்லமை மிக்க நடுவணரசுக்கு சொல்லின் பொருளை சரிபார்க்கக் கூடவா இயலாமல் போனது?
 கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
 உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி
 என்கிறது குறள்.
 கொடை குணமும், அருள் மனமும், செங்கோன்மையும், தளர்ந்த குடிகளைத் தாங்குவதும், ஆகிய நாற்பண்புகள் இருக்கும் ஆட்சியாளன் ஒளி விளக்கு போன்றவன் என்கிறார் வள்ளுவர்.
 சிலைகளும், சின்னங்களும் மட்டுமே செங்கோன்மையின் அளவுகோல்கள் அல்ல. அறநெறியும், மக்களின் மகிழ்வான வாழ்த்துமே நல்லரசின் அளவுகோல்கள்.
 பரந்த உலகில் பறந்து திரியும் நமது பிரதமரிடம், "உயரச் சிலையை திறக்கும் திருப்பணியை விட, மக்களின் துயர நிலையை துறக்கும் அறப்பணிகளே அரசின் முதற்கடன்' என்று எடுத்துரைப்போர் எவரும் அருகில் இல்லையா?
 "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படவேண்டிய நேரம் இது!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com