கட்சிகளுக்குத் தேவை தரக்கட்டுப்பாடு

நாம் ஒரு பொருளை நம் சொந்த உபயோகத்திற்கு வாங்க எண்ணும்போது, அந்தப் பொருள் எங்கு தரமானதாக வாங்க முடியும் என்று யோசிக்கின்றோம், அப்படி யோசிக்கும்போது

நாம் ஒரு பொருளை நம் சொந்த உபயோகத்திற்கு வாங்க எண்ணும்போது, அந்தப் பொருள் எங்கு தரமானதாக வாங்க முடியும் என்று யோசிக்கின்றோம், அப்படி யோசிக்கும்போது தரமான பொருளை எவ்வளவு குறைவான விலையில் வாங்க முடியும் எனவும் கவனமாகச் செயல்படுகிறோம். அதேபோல் நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும்போது, எந்தப் பள்ளி அல்லது கல்லூரி நம் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை கற்றுக் கொடுக்கும் என ஆய்வு செய்து அலைந்து திரிந்து, பலரிடம் கேட்டு ஆலோசித்து பள்ளியையோ கல்லூரியையோ தேர்வு செய்கின்றோம். நீண்டநாள் கனவான ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படும்போது தரமான கட்டடத்தைக் கட்டித்தரும் ஒரு நிறுவனத்தைச் தேடிச் செல்கிறோம்.
 இப்படியெல்லாம் தரம் பார்த்து நிதானித்து ஆழ்ந்து யோசித்து செயல்படும் நாம், நம் வாழ்க்கையே மாற்றியமைக்கும் சக்தி கொண்ட அரசாங்கத்தையும், அந்த அரசாங்கத்தை உருவாக்கும் அரசியல் கட்சிகளின் தரத்தையும் மட்டும் ஏன் பார்ப்பதில்லை? இந்தக் கேள்விக்கு விடையை யோசிக்கும்போது, நமக்குப் பல கேள்விகள் எழுகின்றன.
 இப்படி ஒரு பார்வை யாரிடமாவது இருக்கிறதா? இதைப்பற்றிப் பொதுவெளியில் ஏதாவது விவாதம் நடைபெறுகிறதா? அப்படித் தர நிர்ணயம் செய்ய ஏதாவது அமைப்போ அல்லது நிறுவனமோ இருக்கிறதா நம் நாட்டில்? இவையெல்லாம்தான் அந்தக் கேள்விகள்.
 பொதுவாக நம் நாட்டில் பொருள்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு, நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு தரச்சான்று வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதேபோன்று, தரத்தை நிர்ணயம் செய்ய குறியீடுகளும் மதிப்பீட்டு முறைகளும் இருக்கின்றன. ஆனால் நம் அரசியல் கட்சிகளை மதிப்பீடு செய்து தரம் பிரித்துப் பார்க்க நம்மிடம் அமைப்பு எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். அந்த அமைப்பை நம்மால் உருவாக்க முடியாதா? இது அடுத்த கேள்வி.
 ஏன் நம் அரசியல் கட்சிகளின் தரத்தை மதிப்பிட்டு தரத்திற்கு சான்று வழங்கக் கூடாது? இதை ஏன் நாம் இன்று சிந்திக்கின்றோம் என்றால் இன்றைய அரசியல் கலாசாரம் என்பது தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிட்டது என்பதால்தான். தரமற்ற அரசியல் ஒருபோதும் தரமான சேவையை மக்களுக்குத் தராது என்பது நிரூபணமான கோட்பாடு.
 அரசியலில் ஊழல் என்பது புரையோடிவிட்ட நிலையில்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் வெடித்து "லோக்பால்' சட்டம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவே இல்லை. அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து, அரசியல் நாகரிகம், மக்களாட்சியின் மாண்பு எல்லாம் தகர்க்கப்பட்டு வருவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்தச் சூழலை "வோரா கமிட்டி' அறிக்கை படம் பிடித்துச் காட்டியது. அதைப் படிப்பவர்களுக்கு "அரசாங்கம் என்னதான் செய்கிறது?' என்ற எண்ணம் தோன்றும்.
 இன்று பலர் அந்த அறிக்கையை மறந்திருப்பார்கள். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றில், இன்றைய அரசியல் சூழல் எப்படி இருக்கும் என்பதை மூதறிஞர் ராஜாஜி அன்றே அவரின் சிறை டைரிக் குறிப்பில் கூறியுள்ளதை மேற்கோள் காட்டியுள்ளனர் நீதிபதிகள். இந்தச் சூழல் குறித்து உச்சநீதிமன்றம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. அரசியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது உயர்நீதிமன்றங்களும் மாநில அரசை கேள்வி கேட்டு வெட்கப்பட வைக்கின்றன. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இப்படி ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் கண்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாலும், இந்தச் சூழலை மாற்றியமைக்க வேண்டிய பணியையும் அவர்களிடமே தந்துள்ளது. ஏனென்றால், இதற்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அவர்களிடம்தான் இருக்கின்றது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் சரியான ஒரு சட்டத்தை உருவாக்குங்கள் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
 இது ஒரு வகையில் நன்மை பயக்கும் என்றாலும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தரம் பிரித்து மக்களுக்குக் காட்டுவது, தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவெடுக்க உதவியாக இருக்கும் என்பதால் இதைப்பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. இதேபோன்று, உயர்கல்வியின் தரம் தாழ்ந்து போனபோது அகில இந்திய அளவில் தர நிர்ணய அமைப்பை உருவாக்கி எல்லாக் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தரச்சான்றிதழ் பெற வற்புறுத்தியது பல்கலைக்கழக மானியக் குழு. அதுபோல, அரசியல் கட்சிகளை தர நிர்ணயம் செய்வது மிகவும் இன்றியமையாதது என்பதை பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும். அடுத்து இதை யார் செய்வது என்ற கேள்வி எழும்.
 எப்படி உயர்கல்வி நிலையங்களை தர நிர்ணயம் செய்வதற்கு தரக் கட்டுபாட்டு அமைப்பை அரசு உருவாக்கியதோ, அதே போல ஒரு நிறுவனத்தை மத்திய அரசே உருவாக்க வேண்டும். அந்த நிறுவனம், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தர நிர்யணத்துக்கான கூறுகள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேண்டும். அவை குறித்து அனைத்துக் கட்சி கூட்டங்களிலும், அறிவு ஜீவிகளின் மேடைகளிலும் விவாதம் செய்ய வேண்டும். அது மட்டும் போதாது, இவை பொதுமக்கள் மத்தியிலும் விவாதிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் கூறும் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 மக்களாட்சி நடைபெறுகின்ற ஒரு நாட்டில், அரசியல் கட்சிகள் மக்களாட்சிக் கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படுகின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். பொதுத் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகள் பலவும், தங்கள் கட்சிகளில் தேர்தலே நடத்தாமல் காலந்தாழ்த்தியதை நாம் பார்த்திருக்கின்றோம். உள்கட்சியில் தேர்தல் நடத்தி மக்களாட்சி நடைமுறையைக் கொண்டு வர வேண்டாமா?
 நம் கட்சிகள் மக்கள் பிரதிநிதிச் சட்டத்தை நடைமுறையில் கடைப்பிடித்துநடந்து கொள்கின்றனவா? மக்களாட்சியின் அடிப்படை விழுமியங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதைப் பரிசீலனை செய்ய வேண்டும். கட்சியில் முறையாக தேர்தல் நடத்தி கட்சியின் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனவா? அந்தத் தேர்தல்கள் முறையாக நடைபெறுகின்றனவா? கட்சிப் பதவிகள் அனைத்தும் சுழற்சி முறையில் பலருக்கும் கிடைக்க வாய்ப்பளிக்கப்படுகின்றதா? கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகின்றதா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.
 இவற்றையெல்லாம்விட மிக முக்கியம், கட்சிகள் எப்படி நிதி திரட்டுகின்றன? யாரிடமிருந்து நிதியைப் பெறுகின்றன என்பதை ஆய்வு செய்வது. பொதுமக்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்டப்படுகிறது? கட்சிக்காரர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்டப்படுகிறது? வெளிநாட்டிலுள்ளவர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்டப்படுகிறது? வியாபாரிகளிடமிருந்து எவ்வளவு நிதி திரட்டப்படுகிறது? பெருநிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்டப்படுகிறது? இவற்றை ஆய்வு செய்து பார்த்தால், அந்தக் கட்சியின் பின்புலம் மக்களுக்குத் தெரிந்து விடும்.
 கட்சியில் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்பதனை ஆய்வு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரும் கட்சிகள், முதலில் தங்கள் கட்சியில் பெண்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளனவா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மதிப்பீட்டில், சட்டப்பேரவைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வேட்பாளர்களாக எத்தனை பெண்களுக்கு மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்சிகள் வாய்ப்பளிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
 அதேபோல் கட்சிக்கான செலவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். கட்சிச் செயல்பாடுகளில் மாநாட்டுச் செலவு, கட்சி நடைமுறைச் செலவு, தேர்தல் செலவு என எல்லாவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வேட்பாளர்களை நிறுத்தும்போது குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை எந்தக் கட்சி அதிகமாக நிறுத்துகின்றது என்பதையும் கணக்கிட்டு ஆய்வு செய்திடல் வேண்டும்.
 கட்சிகளின் செயல்பாடுகளிலும் சரி, தேர்தல் செயல்பாடுகளிலும் சரி அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு சட்டத்தின்படி நடந்து கொள்கின்றன என்பதையும் கணக்கிலெடுத்து, நன்கு ஆய்வு செய்து தரம் பிரித்து கட்சிகளின் நிலையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.
 மேலே கூறியிருக்கும் கருத்துக்கள் ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான். இதுபற்றி அறிவுத் தளத்தில் ஒரு விவாதம் நடைபெற வேண்டும். குறிப்பாக, அரசியலில் தூய்மை வேண்டும் என்று பேசும் கட்சிகள் இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மக்களாட்சியில் உள்ள அழுக்குகளைப் போக்க மக்களாட்சி முறையின் மூலம்தான் தீர்வுகளை கொண்டுவர முடியும்.
 இப்படித் தர நிர்ணய ஆய்வு நடத்தும்போது, கட்சிகளின் தரம் எந்த அளவு உள்ளது? ஒழுக்கத்தையும் நேர்மையையும் கடைப்பிடிக்கும் கட்சிகள் எவையெவை என்று மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடலாம். மக்கள் அதை மனத்தில் வைத்து தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள். இன்றைய தேவை இதற்கான பொது விவாதமே.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com