முறியக்கூடாத உறவுகள்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். இன்று மின்னணு காலத்தில் திருமணம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து, அதே வேகத்தில் முறிந்தும் விடுகிறது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். இன்று மின்னணு காலத்தில் திருமணம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து, அதே வேகத்தில் முறிந்தும் விடுகிறது. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் பொறுமை என்பது மருந்துக்கும் கிடையாது. திருமணம் நடந்த வீடுகளுக்கென்றே உரித்தான மலர்கள் மற்றும் சாப்பாடு வகைகளின் மணம் மறைவதற்குள், சில திருமண உறவுகள் தடயம் இன்றி அழிந்து விடுகின்றன.
திருமணங்கள் முறிக்கப்படுவதற்குப் பெரிதான காரணங்கள் என்னென்ன என்று பார்த்தால், ஓரிரண்டு தம்பதிகளைத் தவிர மற்றவர்களுக்கு உருப்படியாக ஒரு காரணமும் இருப்பதில்லை. நான், இது போன்ற காரணங்களுக்குத் தீர்வுகாண முற்படும் சமயங்களில், சேர்ந்து வாழ்வதே நல்லது என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட பெண்களுடன் பேசும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு.
இரண்டு, மூன்று சந்திப்புகள், ஆலோசனைகளுக்குப் பிறகு அவர்கள் முடிவில் சிறிது தளர்வு இருப்பது போல் தோன்றினாலும், அவர்களுடைய பெற்றோர் பிடிவாதமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 
இரு தரப்பிலும் சிறு, சிறு குறைகள் இருக்கும். ஒருவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலே பிரிவு வரை போவதற்கு அவசியம் இருக்காது. குறைகளைக் காரணமாகக் கூறி பிரிவு கோரும் தம்பதிகள், ஒருவருக்கொருவர் இருக்கும் நிறைகளை எண்ணிப்பார்ப்பதில்லை. யாரிடம்தான் குறைகள் இல்லை. மனிதர்கள் குறைகளும், நிறைகளும் கலந்த கலப்பினம்தான். 
வெளிப்பார்வைக்குப் பெண்களுக்குதான் ஏதோ அநீதி இழைக்கப்படுவதாகத் தோன்றினாலும், பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைப் பார்க்க நேரிடுகிறது.
அதே நேரத்தில் திருமண வாழ்க்கைக்குத் தகுதியில்லாத ஆண்களை, தெரியாமல் மணந்துகொண்டு, அதனால், மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் தங்கள் மகள்களின், மறுமணத்திற்காக விண்ணப்பம் அளிக்க வரும் பெற்றோரின்எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திருமணத் தகவல் மையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
அப்படிப்பட்ட ஆண்கள் அல்லது மகனின் குறை பற்றித் தெரியும் பெற்றோர், பெண்களின் வாழ்க்கையை வீணடித்து விடக்கூடாது என்பது பெண்களைப் பெற்றவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. 
பொதுவாகக் கணவன் குடித்தாலும், அடித்தாலும் பொறுத்துக் கொள்ளும் பெண்களுக்குத் தவறான தொடர்பில் இருக்கும் கணவனை சகித்துக் கொள்வது மட்டும் முடியாத காரியம். அத்துடன் தங்கள் பிள்ளைகளும் கெட்டுப் போகலாம் என்று கூறி மணவிலக்கு கோரும் பெண்களும் உண்டு.
இதே காரணத்தைக் கூறும் ஆண்களும் உண்டு. குடும்பம், பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் சட்டத்திற்குப் பயந்தாவது தவறான தொடர்பினைப் பற்றி சிந்திக்காமல் இருந்தார்கள். சட்டமே இப்போது அனுமதி அளித்துவிட்டதால் கணவனோ, மனைவியோ சட்டத்தைக் காட்டி ஒருவரையொருவர் மிரட்ட முடியாத சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது. 
என்ன காரணத்திற்காகப் பிரிந்தாலும் குடும்ப அமைப்பே சிதைந்து போய் விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குழந்தை(களைப்) பெற்றவர்கள், கணவருடன்/ மனைவியுடன் இல்லை; பிரிந்து விட்டோம் என்று சொல்வது அவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், தாயுடனோ அல்லது தந்தையுடனோ மட்டும் வாழும் குழந்தைகள் அதனை வெளியுலகில் சொல்வதற்கு மிகவும் வேதனைப்படுவார்கள். 
தங்கள் வயதையொத்த குழந்தைகள் தாய் - தந்தையருடன் வசிப்பதைப் பார்க்கும்போது அவர்களின் கண்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவதை அவர்களின் ஆசிரியர்கள் புரிந்து கொள்கிறார்கள். உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் உனக்கு ஏன் அப்பா / அம்மா மட்டும் இருக்கிறார்கள்? என்ற கேள்வியை அவர்களைக் காயப்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இதனால் நொந்து போகும் பிஞ்சுகளின் மனதை, பிரிந்து வாழும் தாயாலோ, தந்தையாலோ புரிந்துகொள்ள முடியாது. சட்ட ரீதியாக மணவிலக்கு பெறாதவர்கள் தங்களின் வறட்டுப் பிடிவாதத்தால், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அவர்களுக்குத் தர மறுக்கிறார்கள்.
ஒரு சில தம்பதிகள் சட்டப்படி பிரிந்த பின், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறி, தாங்கள் எடுத்த முடிவு தவறானதோ என்று கூட வருத்தப்படுகின்றனர். 
பிரிவது என்று முடிவெடுக்கும் தம்பதிகள் ஏதோ அவர்களுக்கு மட்டும்தான் பிரச்னைகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இணைந்து வாழும் ஒவ்வொரு வரும் சண்டை, சச்சரவுகள், மனஸ்தாபங்களைப் பொறுமையுடன் இருந்து கடந்து வந்ததால்தான் இன்று பெயரன், பெயர்த்திகள் எடுத்து நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாததால்தான் இன்றைய காலத்தில் கால்களில் சக்கரங்கள் இல்லாமல் ஓடும் இயந்திரங்கள் போல் ஆகிவிட்ட மனிதர்களுக்கு எல்லாப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. 
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை, எந்தச் சிரமமும் கொடுக்காமல் வளர்ப்பதால், புகுந்த வீட்டிலும் தங்கள் பிள்ளைகள் சொகுசாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் தங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். 
எத்தனை காலம் அப்படி அவர்களைப் பராமரிக்க முடியும் என்பதையும், தங்கள் மறைவிற்குப் பிறகு அவர்களின் கதி என்னவாகும் என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
எனவே, திருமண ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் திருமணத்திற்கு முன், பெண்பிள்ளைகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் வழங்குவதால் திருமண முறிவுகளைக் குறைக்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com