பல்கலைக்கழகங்கள் சீர்பெறுமா?

தமிழகப் பல்கலைக்கழகங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


தமிழகப் பல்கலைக்கழகங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 2016-ஆம் ஆண்டு இறுதியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 
2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் துணைப் பேராசிரியர் இருவரிடம் பணம் வாங்குகின்றபோது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். துணைவேந்தர் ஒருவர் பொறுப்பிலிருக்கும்போதே கையும் களவுமாகப் பிடிபடுகின்ற அவலம் நடந்தேறியது. 
அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்னொரு முன்னாள் துணைவேந்தர் மற்றும் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆகியோர் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளைப் பதிவு செய்தது. அவர்களுக்குத் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்தன. 
2012-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்அப்போதைய துணைவேந்தரின்அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர் ஊழல் வழக்கு போடப்பட்டது. தொடர்ந்து பின் வந்த காலங்களில் அந்த வகையான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. திருவள்ளுவர், பெரியார், பாரதிதாசன், மதுரை காமராசர், அழகப்பா, டாக்டர்எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் ஊழல்களும் விதி மீறல்களும் நடந்துள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன. 
எனவே தவறுகள் ஏதோ ஒரு சில பல்கலைக்கழகங்களில் மட்டும் நடப்பதாகத் தெரியவில்லை. அவை மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்களிலும் பரவியுள்ள நோயாகத் தெரிகிறது. மேலும், இவை புதியதல்ல என்பதும் தெளிவாகிறது. இவை பற்றி கடந்த பல ஆண்டுகளாகவே சில கல்வியாளர்கள் எச்சரிக்கை செய்து வந்துள்ளனர். ஆனால், அப்போதெல்லாம் அவற்றைப் பொருட்படுத்தாததன் விளைவுகளைத் தான் நாம் இப்போது கண்டு கொண்டிருக்கிறோம். 
இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படை துணவேந்தர் நியமனங்களில் ஆரம்பிக்கிறது. சுமார் பதினைந்து வருடங்களாக துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையானதாக இல்லை என்பது கல்வித்துறையில் பரவலாகப் பேசப்படுகின்ற விஷயம். அவர்கள் பதவியேற்ற உடனே தங்களின் முதலீடுகளைப் பல மடங்காகத் திரும்ப எடுப்பதற்காக எல்லா விதமான தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். 
கடந்த பல ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் விதி மீறல்கள், ஊழல்கள், பணப் பரிமாற்றங்கள் என்பதெல்லாம் நடைமுறையாகி விட்டன. அதற்காகப் பல புதிய உத்திகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, அவசியமே இல்லாமல் பல்கலைக்கழகங்களில் புதிய துறைகளை உருவாக்குவது, காரணமே இல்லாமல் ஒரு துறையை இரண்டாகப் பிரிப்பது போன்றவற்றைச் சொல்லலாம். எனவே, மாணவர்கள் போதிய அளவில் இல்லாமல், ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ள துறைகள் பல்கலைக்கழகங்களில் இருப்பதாகத் தெரிகிறது. 
அவற்றுக்கான நோக்கமே புதியதாக பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களைத் தவறுதலாக அதிக அளவில் மேற்கொண்டு தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வது என்பதுதான். அதற்கான விதிமுறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவை முறைப்படி நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதல் கூட இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சட்டம் வரையறை செய்துள்ள இடஒதுக்கீடுகள் கூடமுறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லையெனக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. 
ஆசிரியர்கள் நியமனங்களுக்கு, பதவிக்கு ஏற்ப விலை வைத்து ஏலம் விடப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அதனால் தகுதி வாய்ந்தவர்கள் வாய்ப்புகளை இழந்ததையும், அவர்களில் பலர் வெறுப்படைந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சென்று பணியாற்றி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
தேவைக்கு அதிகமாக நியமனங்கள்செய்வதனால் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க முடியாத நிலை கூட ஏற்படக்கூடும். இவற்றைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தமது பதவிக் காலத்தை முடித்துச் சென்று விட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்னும் தைரியம் மேலோங்கி உள்ளது. அதிகாரத்தில் உள்ள தமது கூட்டாளிகள்எப்படியும் உண்மை வெளிவராமல் தடுப்பார்கள் என்கிற நம்பிக்கையும் வலுவாக உள்ளது.
மேலும் தவறான வழியில் வந்தவர்களேபலபல்கலைக்கழகங்களில்பதிவாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், துறைத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஊழல் புரிபவர்கள் பதிவாளராகவும் துறைத்தலைவர்களாகவும் இருக்கும்போது எப்படி நிர்வாகம் நேர்மையாக நடக்கும்?
மேலும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பலவித தவறுகள் நடக்கின்றன. துணைவேந்தர்கள் தமக்கு இணக்கமானவர்களையே பொறுப்புகளில் நியமிக்க உதவி செய்கிறார்கள். இல்லையெனில் அந்த வகை நியமனங்களை மேற்கொள்வதே இல்லை. ஏனெனில் அந்த நியமனங்கள் மூலம் சில நேர்மையானவர்கள் வந்து விடக்கூடும். வந்தால் அவர்கள் தவறுகள்செய்யமுடியாது. 
எனவே, நியமனங்களை முறைப்படி மேற்கொள்ளாமல் பல்கலைக்கழகத்தில் உள்ள தமது நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் பேராசிரியர்களை வைத்தே நிர்வாகத்தை நடத்துகிறார்கள். ஆட்சிமன்றக் குழுக்களுக்களுக்குக்கூட அப்படிப்பட்ட நபர்களையே பரிந்துரைத்து தேர்ந்தெடுக்கின்றனர். அதன் மூலம் எல்லாவிதமான தவறுகளும் நடக்கின்றன. 
சில நேரம் தற்காலிகப் பொறுப்பு என்ற பெயரில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். விதிமுறைகளுக்கு மாறாக அவர்களில் திறமைசாலிகள்' தொடர்ந்து பல துணைவேந்தர்கள் வந்த போதும் அதே பதவிகளில் நீடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையாகப் பணியாற்ற வேண்டிய துறைகளில் வேலை செய்வதில்லை. அதனால் மாணவர்களின் படிப்பும், ஆராய்ச்சியும் பாதிக்கப்படுகின்றன.
மேலும், தவறான முறையில் பணிக்கு வரும் துணைவேந்தர் தனது சொந்த லாபங்களுக்காக கட்டடங்கள் கட்டுவது, வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். மூன்றாண்டுகளுக்கொருமுறை புதியதாக வாகனங்களை அதிக விலை கொடுத்து வாங்குவது என்பது வாடிக்கையாக நடைபெறுகிறது. இதற்காக பல்கலைக்கழகங்களில் உள்ள குழுக்களை எல்லாம் துணைவேந்தர்கள் தம் வயப்படுத்திவிடுகின்றனர். பணி அனுபவம் உள்ள நேர்மையாளர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
பதவியேற்ற உடனே தனது பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் உறுப்புக் கல்லூரிகள் குறிப்பிட்ட தொகையைக் கொண்டு வந்து கொடுக்குமாறு ஒரு முன்னாள் துணைவேந்தர் சொல்லியதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. பின்னர் தொடர்ந்து பல சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை துணைவேந்தர் வசூல் செய்வது வாடிக்கையாகி விட்டதாகக் கூறப்படப்டது.
ஒரு ஊழல் துணைவேந்தர் பதவிக்கு வந்தபின்னர் அவர் மட்டும் ஊழல் செய்வதில்லை. அதற்குப் பலரை உடந்தையாக்குகிறார். அதனால் நிர்வாகம் சீரழிந்து, கல்வி வளர்ச்சி தடைப்பட்டு பல்கலைக்கழகமே பாதிப்புக்குள்ளாகிறது.
அதிர்ஷ்டவசமாக தமிழகப் பல்கலைக்கழகங்களில் இப்போதும் நேர்மையான பேராசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். அதனால்தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் இடையிலும் தமிழகப் பல்கலைக்கழகங்கள் முடிந்தவரை செயல்பட்டு வருகின்றன.
அதே சமயம், தவறு செய்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதால், நேர்மையாளர்களின் செயல்பாடுகள் தடைபடுகின்றன. நல்ல தலைமை இல்லாத போது மாணவர்கள் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். ஆய்வு மாணவர்களில் பலர், ஆய்வுகளை முடித்துப் பட்டம் பெறுவதற்குள் பலவித நெருக்கடிகளுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ் நாடு' என்று பாரதி பாடிய தமிழகத்தில் உயர்கல்வித்துறை ஏராளமான சிக்கல்களில் சிக்கியுள்ளது. குழந்தைகளைப் படிக்க வைக்க எல்லாத் தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ள பெற்றோர்கள் நம் மாநிலத்தில் உள்ளனர். நல்ல முறையில் படித்துசாதனைகள்செய்யத் துடிக்கும் மாணவர்களும் இங்குள்ளனர். இந்தச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி நமது கல்வித்துறையை மேலெடுத்துச் செல்ல வேண்டியது கல்வியாளர்களின் கடமை. 
தமிழகத்தின் உயர்கல்வித் துறையில் நேர்மையும், திறமையும் அடிப்படையான தகுதிகளாக்கப்பட வேண்டும். அதன்மூலம் தமிழகம் இந்திய அளவில் முதல் நிலையை எட்ட வேண்டும்.
கட்டுரையாளர்: 
பேராசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com