தோல்வி தந்த படிப்பினைகள்

எந்த ஒரு விளையாட்டிலும் ஓர் அணி தோற்கும் போது அது தொடர்பான விமரிசனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும், உலகின் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் அணியாக விளங்கிவரும்

எந்த ஒரு விளையாட்டிலும் ஓர் அணி தோற்கும் போது அது தொடர்பான விமரிசனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும், உலகின் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் அணியாக விளங்கிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியிடம் 4 : 1 என்ற கணக்கில் தோற்றுள்ள நிலையில், விமரிசனங்களைச் சந்திப்பதுடன், சில படிப்பினைகளையும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
 இங்கிலாந்துப் பயணத்தின் ஆரம்பத்தில் "இருபது - இருபது' தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. அப்போது கூட, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலியின் தலைமை மற்றும் இந்திய அணியின் திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்தனர்.
 ஆனால், ஐந்து பந்தயங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் ஆரம்பம் முதற்கொண்டே ஒன்றன் பின் ஒன்றாக பல தவறுகளைச் செய்து வந்த இந்திய அணி, இறுதியில் மோசமான ஒரு தோல்விக்கணக்குடன் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
 அணியின் இங்கிலாந்துப் பயணம் தொடங்கும் முன்பே அணித் தேர்வு பற்றிய விமரிசனங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. குறிப்பாக, முதலில் அணி தேர்வு செய்யப்பட்டு அதன் பின்னர் "யோ-யோ' என்னும் உடற்தகுதித் தேர்வை வைத்ததும், அம்பட்டி ராயுடு என்ற வீரர் இதன் அடிப்படையில் அணியிலிருந்து நீக்கப்பட்டதும் பலரது புருவங்களை உயர்த்தின. வீரர்களின் தேர்வுக்கு விளையாட்டுத் திறமைக்கும் மேலாக "யோ-யோ' உடற்தகுதி வேண்டும் என்ற விதியை உருவாக்கியது யார்? தேர்வுக் குழுவுக்கும் அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளருக்கும் இடையே ஒருங்கிணைப்பும் புரிதலும் இருக்கின்றனவா என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கின.
 இங்கிலாந்து அணியுடனான "இருபது - இருபது' ஓவர் தொடரை இந்திய அணி வென்றதும் சற்றே அடங்கிய விமரிசனக் குரல்கள், ஒருநாள் பந்தயத் தொடர் தோல்வியை அடுத்து மீண்டும் ஒலிக்கத் தொடங்கின. தற்போது டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்து நிற்கும் நிலையில், அணித்தலைவர் விராட் கோலியும், அணி நிர்வாகமும் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
 துடிப்பும், திறமையும் உள்ள இளம் வீரராக இந்திய அணியில் நுழைந்த விராட் கோலி, தனது மட்டை வீசும் திறமையினால் உலக அளவில் தலைசிறந்த வீரராக அறியப்படுகின்றார். மூத்த வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்டதாலும், மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதாலும் இந்திய அணியின் தலைமை விராட் கோலியின் வசமானது.
 கோலி, எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வருகிறார். ஆனாலும், தேர்வுக் குழுவினர் கொடுக்கின்ற 16 வீரர்களில், எந்த 11 வீரர்களை எடுத்துக்கொள்வது என்பதில் சரியான முடிவெடுக்க இயலாமல் கோலி திணறுவது போலத் தெரிகிறது.
 மேலும், தனக்கு வேண்டிய, வேண்டாத வீரர்கள் என்ற வகையில் தனது இறுதி அணியைத் தேர்வு செய்கிறாரோ என்ற ஐயமும் எழுகிறது.
 உதாரணத்திற்கு, ஒருநாள் மற்றும் "இருபது - இருபது' ஓவர் பந்தயங்களுக்கு ஏற்ற தவன், பாண்டியா ஆகிய வீரர்களைத் தொடர்ந்து டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்வது அறிவார்ந்த செயல்தானா என்று எண்ணத்தோன்றுகின்றது. புஜாரா, ரஹானே, முரளி விஜய், அஸ்வின் ஆகிய திறமைசாலிகளை அவ்வப்போது புறக்கணிப்பது சரியான செயல் அல்ல. தொடக்க நிலை மட்டையாளர்களாக முரளி விஜய், கே.எல். ராஹுல் ஆகியோர் தொடர்ந்து ஆடுவதற்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்கப்படுத்துவது டெஸ்ட் அணிக்கு நன்மை செய்யும். இதை விடுத்து, தடுப்பாட்டத்தில் ஆர்வம் இல்லாத தவனைத் தொடர்ந்து முதல் நிலை மட்டையாளராகக் களம் இறக்குவது சரியாகாது.
 மேலும், ஹார்திக் பாண்டியா திறமையுள்ள ஆல்-ரவுண்டர் எனினும், அவர் டெஸ்ட் பந்தயங்களை விட, ஒருநாள் பந்தயங்களில்தான் அதிகம் சோபிக்கக் கூடியவர் என்பதை கோலி உணராதது ஏனோ? பாண்டியாவுக்கு பதிலாக ஜடேஜா, அஸ்வின் இருவரையும் அணியில் சேர்ப்பது நமது டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சை வலிமைப்படுத்தும்.
 நான்காவது டெஸ்ட் பந்தயத்தின் ஆடுகளம் (பிட்ச்) வெகு விரைவிலேயே சுழற்பந்துக்கு சாதகமாக மாறியும், அஸ்வின் ஒருவரால் மட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. ஜடேஜாவும் இருந்திருந்தால் நம்மால் வெற்றி பெற்றிருக்க முடியும். கடைசி டெஸ்டில், அஸ்வினை நீக்கி விட்டு ஜடேஜாவை மட்டும் சுழற்பந்து வீச்சாளராக சேர்த்துக் கொண்டதும் முதிர்ச்சியற்ற முடிவாகும்.
 மேலும், இதற்கு முன்னர் டெஸ்ட் பந்தயத்தில் 300 ரன்கள் அடித்துச் சாதனை செய்திருந்த கருண் நாயரை இத்தொடரின் இறுதிவரை ஆடுகின்ற அணியில் (பதினோரு பேரில் ஒருவராக) சேர்க்காததை முன்னாள் வீரரும் விமரிசகருமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்.
 தனிப்பட்ட முறையில் (கடைசி டெஸ்டைத் தவிர) எல்லாப் பந்தயங்களிலும் சிறப்பாக மட்டை வீசிய விராட் கோலி, இந்திய அணிக்கு மகத்தான பங்களிப்புச் செய்தது உண்மைதான்.
 ஆனால், விருப்பு, வெறுப்பு இல்லாத அணித்தேர்வு, களவியூகங்களை வகுத்தல், ஆடுகளத்தின் தன்மையை சரியாகக் கணித்தல், இந்திய அணியின் பாரம்பரிய பலமான சுழற்பந்து வீச்சிற்கு ஆதரவளித்தல் ஆகிய விஷயங்களில் அவர் தமது தலைமைப் பண்பினை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
 இளம் வயதிலேயே திறமையுடன் அனுபவமும் கொண்டிருக்கும் விராட் கோலி, இங்கிலாந்தில் பெற்ற தோல்வி கொடுத்துள்ள படிப்பினைகளை நன்கு ஆராய்ந்து, தவறுகளை திருத்திக் கொள்வது நமது இந்திய அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com