வங்கிகளுக்கு கணினி வரமா?

ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவரைச் சந்திக்க நேர்ந்தது. அச்சிட்டது போன்ற "டெபாசிட்' ரசீதையும், வங்கிக் கணக்கு புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவரைச் சந்திக்க நேர்ந்தது. அச்சிட்டது போன்ற "டெபாசிட்' ரசீதையும், வங்கிக் கணக்கு புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார். என்னை நோக்கி இதுதான் "பாங்கிங்'! நாம் அந்த நாளில் வேலை செய்த வங்கிச் சேவை எல்லாம் ரொம்ப மெருகே இல்லாதது என்று முகம் சுளித்தபடிசொன்னார்.
 ஒரு கோணத்தில் அவர் பார்வைசரிதான். ஏனெனில், அவசர நிலை தீவிரமாக நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், அதிகாரியாகச் சேர்ந்தார். யூனியனின் கேந்திரமாய் விளங்கிய கிளையொன்றில் பணிபுரிந்தபோது ஊழியர்களிடம் வேலை வாங்க சிரமப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் கூடுதல் நேர பணிப்படி கிடையாது. மாதாந்திர கணக்குகளைச் சமனப்படுத்துதல், மூன்று மாதத்துக்கு ஒரு முறை கடனுக்கு வட்டியைக் கணக்கிட்டு கடன் வாங்கியவர் கணக்கில் பற்று வைப்பது போன்ற பணிகள் அப்போது அதிகாரிகளுக்குச் சுமையைத் தந்தன.
 ஆனால் ஒன்று, கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அச்சடிக்கப்பட்ட எழுத்துகளிலும், "ஏடிஎம்' மூலம் பணம் அளிப்பதிலும் மட்டும் வங்கிச் சேவை அடங்கிவிடுமா என்ன? கணினி நுழைவினால் வேறு நல்ல பயன்களும் கிடைத்திருக்கின்றன என்பது உண்மைதான். உள்ளுர், வெளியூர் காசோலைகளை எழுதுவது, பணம் செலுத்தவும் எடுக்கவும் கால் கடுக்க வரிசையில் நிற்பது, "கிளியரிங் செக்'குகளின் வரவுக்காகக் காத்திருப்பது போன்றவை இன்று காணாமல் போய்விட்டன. இவை எல்லாமே தற்கால வங்கிச் சேவையின் பலன்கள்தான்.
 சந்தேகமே இல்லை. இந்தக் காரணத்தினால்தான் தொடர் விடுமுறைகள், திடீர் வேலைநிறுத்தங்கள் போன்றவை வாடிக்கையாளர்களைப் பெருமளவு பாதிப்பதில்லை. இருந்த இடத்திலிருந்தே வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
 ஆனால், எங்கு சிக்கல் முளைக்கிறது தெரியுமா? ஏதாவது ஒரு தவறான பற்று கணக்கில் பதிவானால் அதை மீட்பது மிகக் கடினம். என் போன்ற ஒரு வங்கி ஊழியர் (ஓய்வு) கணக்கில் காசோலை தபாலில் வரும்போதெல்லாம் கட்டணம் பற்று வைக்கப்படுகிறது. வேறொரு நண்பர் "ஓவர் டிராப்டாக' ஐந்து லட்சம் கடன் தன் டெபாசிட்டில் பெற்றார். அதற்கான காசோலையை நேரிலேயே பெற்றுக் கொண்டார். அதற்கும் ரூ.170 பற்று! இருவருமே வங்கி ஊழியர்கள் என்பதால் சிறிய சலுகைகளைப் பெற உரிமை பெற்றவர்கள். பிறகு ஏன் இந்தக் கட்டணம்? கேட்டால், பல காரணங்கள் கூறப்படுகின்றன. "நாங்கள் கட்டணம் எதையும் விதிப்பதில்லை; கம்ப்யூட்டர் சிஸ்டம் செய்கிறது சார்; இதற்கெல்லாம் தீர்வு காண நபரில்லை' போன்ற விளக்கங்கள் நமக்குப் புரிவதில்லை.
 மேலே கூறியவை சொற்பத் தொகைகள். ஆனால், கடனுக்காகவோ, வேறு எதற்காகவோ வங்கிக்கு அறிவுறுத்தலை ("ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்') வாடிக்கையாளர் அளித்திருந்தால், "கண்கொத்திப் பாம்பு' போன்று கண்காணிக்க வேண்டும்; விடுமுறை நாள்களில் ஆணைத் தேதி வந்தால், சில சமயம் முந்தின நாளே தொகையை எடுத்து விடுகிறார்கள். உதாரணமாக, சென்னை அண்ணா நகரில் தன்னுடைய அரையாண்டு ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கு ஒருவர் "பாலிசி பிரிமீயம்' தொகையை உரிய காலத்தில் செலுத்துமாறு அறிவுறுத்தல் ("ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்') அளித்திருந்தார். அதை வங்கி செயல்படுத்தத் துவறிவிட்டது. அலுவலகப் பணி நிமித்தம் வெளிநாட்டில் சில காலம் இருந்த அவர், அதைக் கவனிக்கவில்லை. விளைவு, "பாலிஸி' காலாவதியாகிவிட்டது. பின்னர், இந்தியா திரும்பியவுடன், வங்கி, காப்பீட்டுநிறுவனம் இரண்டுக்கும் அலைந்து சரி செய்தார்.
 ஒரு வங்கியின் ஏடிஎம் அட்டையை வேறு வங்கிக் கிளையில் பயன்படுத்துகையில், தொகை குறைவாக வரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இதற்காக யாரிடம் செல்ல வேண்டும் என்பது ஒரு புதிர்; அட்டை உள்ள வங்கியிலா? தொகை எடுத்த வங்கியிலா? இது குறித்தும் பல புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
 வங்கி-வாடிக்கையாளர் உறவு கிட்டத்தட்ட மருத்துவர்-நோயாளி தொடர்பு போன்றதுதான். நோயாளியிடம் இதமானஅனுசரணையான வார்த்தைகள் பேசினாலே பாதி நோய் குணமாகி விடும். இது வங்கிகளுக்கும் பொருந்தும். ஒருசில தவறுகள் ஏற்படும்போதுஅதிகாரிகள் அமைதியாக விளக்கம் தந்து, தீர்வும் கூறினாலே போதும். பெரும்பாலும் பல கிளைகளில் இதுபோன்று நிகழ்வதில்லை. காரணம்,
 பணிச் சுமை!
 வங்கிகளில் பணியிட மாற்றம், ஓய்வு பெறுவதால், பதவி உயர்வால் மாற்றம் போன்ற பல இயல்பான நிகழ்வில்கூட, வேறு பதிலி நபர்நியமிப்பது கிடையாது என்பது கண்கூடு. போதாக்குறைக்கு பல மைய அரசு வேலைகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன என்ற காரணியும் உண்டு. மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், வருமான வரி வசூலித்தல் போன்ற பல கூடுதல் பணிகளை தற்போது வங்கி ஊழியர்கள் செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய பணிகளை முன்பெல்லாம் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மட்டுமே செய்து வந்தனர்.
 மேலும், அவ்வப்போது வரும்அரசு அறிக்கைகள் வங்கிகளைக் குழப்புகின்றன. உதாரணமாக, வாராக் கடனுக்கான விதிமுறைகள்,சில பிரிவினருக்கு உத்தரவாதமில்லாத கடன்; கடன், டெபாசிட் ஏற்படும் வட்டி விகித மாறுதல் போன்றவற்றை அதிகாரிகளே சரியாகப் புரிந்து கொள்ளாதபோது, வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு விளக்குவது?
 ஆக "எல்லாம் கணினிமயம்'என்ற நவீன மாறுதல்களை முழுமையாக மகிழ்ச்சியோடு ஏற்கமுடியாது என்பதுநிதர்சனம். இன்னும் ஐந்தே மாதங்களில் அரசு வங்கிகளுக்கு 50-ஆவது ஆண்டு (பொன்விழா) நிறைவு வரப் போகிறது. கணினி வழிச் சேவையில் உள்ள
 குறைகளைச் சீர்படுத்தி, வங்கிகள் நற்பெயர் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com