செந்தமிழின் புதிய மகள் சிந்தி!

சிந்தி மொழி மிகவும் பழைமையான மொழிகளுள் ஒன்று. இது இலக்கிய வளம் இலங்கும் மொழி. நாட்டுப்புற இலக்கியம்


சிந்தி மொழி மிகவும் பழைமையான மொழிகளுள் ஒன்று. இது இலக்கிய வளம் இலங்கும் மொழி. நாட்டுப்புற இலக்கியம் மேம்பட்ட மேன்மை மொழி. இந்தியாவின் அங்கீகாரப் பட்டியலில் இடம்பெற்ற இனிய மொழி. பாகிஸ்தான் நாட்டின் அலுவல் மொழிகளுள் இதுவும் ஒன்று. அங்கு சிந்தி மாநிலம், சிந்து என்ற நகரம், சிந்தி பல்கலைக்கழகம் முதலியவை உள்ளன. அங்கு சிந்தி மொழி பேசுவோரின் எண்ணிக்கை இரண்டு கோடி.
உகாண்டா, காங்கோ, கென்யா, தான்சானியா, தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை முதலிய பல நாடுகளில் சிந்தி மொழியாளர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் குஜராத், கச், மகாராஷ்டிரம் முதலிய பகுதிகளில் சிந்திக்காரர்கள் இருக்கிறார்கள். சென்னையிலும் சிந்தி குடும்பங்கள் உள்ளன. 
சம்ஸ்கிருதத்திலிருந்து சிந்தி பிறந்தது என்று முதன்முதலாக ஏர்னெஸ்ட்டிரம்ப் என்ற ஆய்வாளர் அறிவித்தார். என்.எ.பலோச் இந்தக் கருத்தை மறுத்தார். சிந்தி, திராவிட மொழிகளுள் ஒன்று. மொகஞ்சதாரோ நாகரிகத்தில் இதன் வேர் உள்ளது என்றார் அவர். மொகஞ்சதாரோ, தொல் தமிழினத்துக்கு உரியது என்ற உண்மையை ஐராவதம் மகாதேவன், மதிவாணன், பூரணசந்திர ஜுவா, பர்ப்போலா முதலிய அறிஞர்கள் அறிவித்துள்ளனர். 
தமிழகம், பல்வேறு அயல் மொழியினரின் ஆட்சிக்கு உட்பட்டது. அதன் காரணமாகப் பல அயற்சொற்கள் தமிழில் கலந்தன. சிந்தி மொழியினரும் வேறுசில அயல் மொழியினரின் ஆதிக்கத்துக்கு அடங்கிக் கிடந்தனர். அதன் விளைவாக, அரபுச் சொற்களும் பெர்சியச் சொற்களும் சிந்தி மொழியில் நுழைந்தன. சம்ஸ்கிருதச் சொற்களும் காலப்போக்கில் அதில் கலந்தன. பலமொழிக் கலப்பால், பல்வேறு எழுத்து முறைகள் சிந்தி மொழியில் உருவாயின. அரபு, தட்ட, குடுவடி, லுஹங்கி, கோஜ்சி, தேவநாகரி, குருமுகி முதலிய எழுத்துமுறைகள் தோன்றின. இவற்றில் தேவநாகரி, அரபி எழுத்து முறைகளே முதன்மை பெற்றன.
தமிழில் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் தனித்தனியாக உள்ளன. உயிரெழுத்துகளில் குறிலும், அதை அடுத்து நெடிலும் அமைந்துள்ளன. இந்தச் சிறப்பு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. 
சிந்தி மொழியில் இந்த அடிப்படை எழுத்து முறை இருக்கிறது. இம்மொழியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்று எழுத்துகள் தேவநாகரி வடிவத்திலும், அரபு வடிவத்திலும் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த ஒரு செய்தியே, சிந்தி மொழி தமிழின் மகள் என்பதை அறிவிக்கின்ற சான்றாக அமையும். 
சிந்தி மொழியின் தோற்றம், தொன்மை முதலியவை பற்றி, இரண்டு அறிஞர்கள் ஆய்வு செய்தார்கள். குலாம் அலி அல்லானா, பர்சோஜெஸ்ஸ ராம் கித்வானி என்ற இந்த அறிஞர்களுக்குத் தமிழ் பற்றித் தெரியாது. பர்ரோவும் எமனோவும் இணைந்து தயாரித்த அகராதி இவர்களுக்குப் பெருந்துணை புரிந்தது. 
உடல் உறுப்புகளின் பெயர்கள் முக்கியமானவை. மொழிக்கு அடிப்படையானவை, என்றும் மாறாதவை. தமிழில் வாய் என்ற உறுப்புச் சொல் உள்ளது. இது சிந்தி மொழியில் வாயி என்று வழக்கில் உள்ளது. தமிழில் சடை (மயிர்), சிந்தி மொழியில், சோடீ என்று வழங்கப்படுகிறது.
உறவு முறைச் சொற்களும் சிறப்புக்குரியவை. அம்மா என்பது தமிழிலுள்ள அருமையான சொல். மொழிச் சொல்லின் பிறப்புக்கு வழிகாட்டும் சொல். ஒட்டியிருக்கும் வாயின் இதழ்களை மென்மையாகத் திறந்து ஒலியை வெளிப்படுத்தினால் அம்மா என்ற சொல் தோன்றும். இதழ்களைஅழுத்தமாகத் திறந்தால் அப்பா என்ற சொல் பிறக்கும். சிந்தியின் கிளை மொழிகளில், அம்மா என்பதற்குப் பல சொற்கள் உள்ளன.
அம்மாவின் உடன்பிறப்பு மாமன். (இங்கும் மா என்ற எழுத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது). மாமா என்ற தமிழ்ச்சொல், சிந்தி மொழியில் உருமாறாமல் அப்படியே திகழ்கிறது. பெண் என்ற தமிழ்ச் சொல் மெல்லொலி ப என்ற எழுத்துடைய பென் என்று சிந்தி மொழியில் வழங்கப்படுகிறது. இச்சொல் அம்மொழியில் தங்கையைக் குறிக்கிறது.
தமிழில் அன் என்ற விகுதி ஆண்பாலுக்கு உரியது. சிவன், முருகன் முதலிய பெயர்ச் சொற்களிலும் அன் என்ற முடிபு உள்ளது. வடபுலத்தில் இந்த அன் முடிபு நிலை இருக்காது. சிவன் என்பது சிவ் என்றும் ராமன் என்பது ராம் என்றும் கூறப்படும். ஆனால், தமிழிலுள்ளதைப் போலவே சிந்தியில் அன் என்னும் முடிபுநிலை நிலவுகிறது என்று அவர்ஆய்ந்துரைத்தார்.
தமிழில் வல் என்பது பலத்தைக் குறிக்கும். சிந்தி மொழியில் இச்சொல் வலன் என்றும் வலங்கான் என்றும் இருப்பதாக அவர்அறிவித்துள்ளார். இடப்பெயர்கள் மூலமும் தமிழ்-சிந்தி உறவு நிலை தெரிகிறது.
கோட்டை என்பது தமிழ்ச் சொல். இது சிந்தி மொழியில் கோட் என்ற சுருங்கிய நிலை கொண்டுள்ளது. கோட் என்பதை முடிபுச் சொல்லாகக் கொண்டு சிந்தி மொழிப் பகுதியிலும், வடநாட்டின் பிற பகுதிகளிலும் ஊர்கள் சில அமைந்துள்ளன (எ.கா. அமர்கோட், பதான்கோட்).
எண்ணிக்கைப் பெயர்களிலும், தமிழ்-சிந்தி உறவு தெரிகிறது. இரண்டு என்பது ரென்ட் என்றும், மூன்று என்பது மூன் என்றும் நாலூ (நான்கு) என்பது நாரு என்றும், அஞ்சு (ஐந்து) என்பது அஞ்சு என்றும், ஆறு சிதைவுறாமல் ஆறு என்றும் சிந்தி மொழியில் உள்ளன. இலக்கண மொழியியல் துறையிலும் தமிழுக்கும் சிந்திக்கும் ஒற்றுமைகள் உள்ளன. 
மேற்கூறிய சில சான்றுகளால், செந்தமிழின் புதிய மகள் சிந்தி மொழி என்பதை அறியலாம். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணப் பெருநூலின் பின்னிணைப்பாக இந்த உண்மையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com