விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ 

பொதுவாகவே விளக்கெண்ணெய் என்றால் ஒரு மட்டமான வஸ்து என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ 


                
பொதுவாகவே விளக்கெண்ணெய் என்றால் ஒரு மட்டமான வஸ்து என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ஒருவர் வழவழா கொழகொழா என்று தெளிவு இல்லாமல் பேசினால், 'போடா விளக்கெண்ணெய்' என்று கூறுவார்கள். மேலும் ஒருவர்  முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால், 'ஏண்டா விளக்கெண்ணையை குடிச்ச மூஞ்சியா இருக்கே? 'என்று கிண்டல் செய்வார்கள்.

ஆனால், விளக்கெண்ணெய் ஒரு மாமருந்து. பல குறைகளையும், ரோகங்களையும் களையும் அற்புத சக்தி அதற்கு உண்டு என்று எத்தனை பேர் அறிவார்கள்? முந்திய தலைமுறையில், மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. பாட்டிமார்கள்/தாய்மார்கள், குழந்தைகளுக்கு காலை வேளையில், வெறும் வயிற்றில், விளக்கெண்ணையை பாலுடன் கலந்து கொடுப்பார்கள். அப்பொழுது ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நடக்கும். குழந்தைகளை விரட்டிப் பிடித்து, மடியில் கிடத்தி அமுக்கி, வாயில் விளக்கெண்ணையை புகட்டி விடுவார்கள். குடித்தவர்கள், சொம்பும் கையுமாக அலைந்து வயிறு சுத்தமான பின்தான், வீட்டார், அவர்களுக்கு பத்திய சாப்பாட்டினை கண்ணிலே காட்டுவார்கள். வயிற்றினுள் மஷ்டு இல்லாமல் இருந்ததால், வியாதியும் குறைவாக இருந்தது.

இப்பொழுது விளக்கெண்ணெய்க்கு குட் பை சொல்லி விட்டு, வியாதிகளை வரவேற்க வெல்கம் போர்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு அலைகிறோம் .இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. விளக்கெண்ணையால் எத்தனையோ உபயோகங்கள் உள்ளன. அவைகளை பார்ப்போம். இதில் வைட்டமின் E, ப்ரோடீன், மினரல்கள் அடங்கியுள்ளன. 

ஆர்த்தரைடீஸ் பிரச்சனையா? கொஞ்சம் எண்ணையுடன், சிறிது மஞ்சள் பொடியைச் சேர்த்து, பேஸ்ட் போல குழைத்து, மூட்டு வலி இருக்கும் இடத்தில் நன்றாகத் தடவவும். உருவிவிட வேண்டும்.காய்ந்தபின், மிதமான வெந்நீரில் கழுவவும்.

தலையில் சிறிய அளவில் சொட்டை போல் வழுக்கை இருந்தால், விரல் நுனியில்  சிறிது எண்ணையை எடுத்துக் கொண்டு வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு  ஐந்து நிமிடங்கள் தடவி வந்தால் வழுக்கையில் கறுப்போடுவதை கண்கூடாகக் காணலாம்.அதே போல் கண் புருவங்கள் அடர்த்தியாக இருக்க எண்ணையை புருவங்களின் மேல் ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள் தடவி வந்தால், கரிய அடர்ந்த புருவங்கள் உண்டாகும்.

ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு தம்பளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எண்ணையைக்  கலந்து குடித்து வர மலச்சிக்கலே இருக்காது. மலச்சிக்கலினால் உண்டாகும் ரோகமும் அண்டாது.

பாலுண்ணி, மரு, பரு வந்த இடங்களில் அந்தத் தழும்பு நீங்க, எண்ணையை தழும்பு உள்ள இடத்தில் சில வாரங்கள் தடவி வர நல்ல குணம் தெரியும்.

தாவரங்கள் பசுமை இழந்து சாம்பல் பூத்தாற்போல இருக்கிறதா? கவலையை விடுங்கள். நான்கு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் , ஒரு தேக்கரண்டி பேபி ஷாம்பு கலந்து செடியை சுற்றி விட்டுவிட்டு, பிறகு நீர் பாய்ச்சுங்கள். சில நாட்களில், பச்சக் கலரு ஜிங்கு ஜா என நீங்களே பாடுவீர்கள். 

சிலருக்கு, முழங்கை முழங்கால் போன்ற இடங்களில் காய்ப்பு இருக்கும் .சில சொட்டு எண்ணையை காய்ப்பு, ஆணி இருக்கும் இடங்களில் தடவி வந்தால், ஆணியினால் ஏற்படும் வீக்கம்,காய்ப்பு ஆகியவை விரை காணாமல் போய் விடும். 

கருவுற்ற பெண்கள் வயிற்றில் இந்த எண்ணையைத்  தடவி வர, வயிற்றுப பகுதி தோலுக்கு மீள் திறன் [எலாஸ்டிசிடி] அதிகமாகும். பிள்ளை பெற்றவர்களுக்கு,வயிற்றினில் தழும்புகள் காணப்படும். எண்ணையை அப்பகுதிகளில் தடவி வந்தால் தழும்புகள் மறைந்து போகும்.

சுளுக்கு விழுந்த இடத்தினில் எண்ணையைத் தடவி, அழுத்தம் இல்லாமல் நீவி கொடுக்க சுளுக்கு விட்டு விடும். காலில் வெடிப்புக்கள் இருந்தால், வெடித்த பாகத்தில் எண்ணையைத் தடவவும். இரவு நேரத்தில் தடவிக்கொண்டு படுத்தால் நல்லது. ஏனென்றால் நடக்கும் பொழுது வழுக்காமல் இருக்கும். நடக்க வேண்டிய அவசியம் வந்தால், காலைத் துடைத்துக் கொண்டு நடக்கவும்.

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர மறுக்கிறதா? கண் இமைகளில் லேசாக எண்ணையைத் தடவிக் கொள்ளுங்கள். கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நித்ரா தேவி ஓடோடி வந்து உங்களை அணைத்துக் கொள்வாள். கண்ணைச் சுற்றி உள்ள கருப்பு நீங்க, நிறம் மாறிய இடங்களில், எண்ணையைத் தடவுங்கள். பிறகு சில நாட்களில் கருப்பு நிறம் மறைந்த அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.

என்ன ? டாட் காம் வாசகர்களே,  சந்தோஷம்தானே . விளக்கெண்ணெயில் எத்தனை மருத்துவக் குணங்கள் அறிந்து கொண்டீர்களா? சுலபமாக, சகாயமான விலையில் கிடைக்கும் விளக்கெண்ணையை விட்டுவிட்டு என்ன செய்வது என்று வினாவிற்கு விடை தெரியாமல் முழிப்பானேன்.? என்ன விளக்கெண்ணெய் வாங்க கிளம்பிட்டீங்களா? நானும் கிளம்பிட்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com