பயங்கரவாதத்தையும், ஊடுருவலையும் நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

பயங்கரவாதம், எல்லைப் பகுதியில் ஊடுருவல்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு நிறுத்தினாலே

புது தில்லி: பயங்கரவாதம், எல்லைப் பகுதியில் ஊடுருவல்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு நிறுத்தினாலே போதும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதம் உள்பட ஏற்கெனவே போதிய அளவுக்கு ஏராளமானவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ள பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷமீர் மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி வைப்பதாக கோரிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியது என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பி வைப்பதாக, பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை விடுத்த கோரிக்கையை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானிடம் இருந்து கள்ள நோட்டுகள், போதைப் பொருள்கள், ஆயுதங்கள், எல்லை தாண்டிய அத்துமீறல்கள், பயங்கரவாதம் ஆகியவற்றை இந்தியாவும், இந்தப் பகுதியில் உள்ள மற்ற நாடுகளும் ஏற்கெனவே போதிய அளவுக்கு பெற்றுக் கொண்டுவிட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசிடம் இருந்து இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், ஜம்மு-காஷ்மீருக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க விரும்புவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருப்பது, நகைப்புக்குரியது என்றார் அவர்.
ஆதரவு தொடரும்-பாகிஸ்தான்: முன்னதாக, ""ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு தொடரும்'' என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் நிலவரம் கவலையளிப்பதால், பாகிஸ்தானின் இந்த சுதந்திர தினத்தை ஜம்மு-காஷ்மீரின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிக்கிறோம். ஜம்மு-காஷ்மீர் மக்கள் இதுவரை செய்த தியாகங்கள் வீணாகாது என்று உறுதியாக நம்புகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வர வேண்டும்.
ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரையிலும், அவர்களுக்கு பாகிஸ்தான் ராஜாங்க ரீதியிலும், அரசியல் மற்றும் தார்மீக ரீதியிலும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய படைபலத்தை பயன்படுத்தினாலும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார் அவர்.
இதேபோல், இஸ்லாமாபாதில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன், ""ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு அவர்களது சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் ஆதரவு தொடரும்'' என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த மாதம் பாதுகாப்பு படையினருடனான மோதலில் உயிரிழந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் பர்ஹான் வானியை "தியாகி' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியதை அடுத்து இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையே வார்த்தைப் போர் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com