பாகிஸ்தான் தூதர் பேச்சுக்கு பாஜக, சிவசேனை கண்டனம்

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஜம்மு-காஷ்மீர் சுதந்திரத்துக்கு அர்ப்பணிப்பதாக கருத்து

புது தில்லி: பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஜம்மு-காஷ்மீர் சுதந்திரத்துக்கு அர்ப்பணிப்பதாக கருத்து தெரிவித்திருக்கும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு பாஜக, சிவசேனை, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தில்லியில் பாஜக தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பலூசிஸ்தானிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திவரும் அட்டூழியங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசினார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விரக்தியின் காரணமாக காஷ்மீர் மக்களுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவு தொடரும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் செயல்களை சர்வதேச அரங்கில் இந்தியா வெளிப்படுத்தி வருகிறது என்று ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார்.
இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத் சர்மா கூறியபோது, அமைதி நிலவும் ஜம்முவில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் தூதரை வெளியேற்ற சிவசேனை வலியுறுத்தல்: பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஜம்மு-காஷ்மீர் சுதந்திரத்துக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ள இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர் அப்துல் பாசித்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியது.
இதுதொடர்பாக மும்பையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
தில்லியில் இருந்து கொண்டு, நமது நாட்டுக்கு எதிராக விஷத்தை உமிழும் வகையில் அவர் பேசியிருக்கிறார். நமது நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இதுபோன்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். எனவே அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள், இஸ்லாமாபாதுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றார் சஞ்சய் ரௌத்.
காங்கிரஸூம் கண்டனம்: இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "அப்துல் பாசித் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com