மகப்பேறு மசோதாவால் எங்களுக்குப் பயன் கிடைக்குமா? கேள்விகளால் நிரம்பிய மேனகாவின் மின்னஞ்சல் முகவரி

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதாவால்

புது தில்லி:  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதாவால் எங்களுக்கு பயன் கிடைக்குமா? என்று ஆர்வத்துடன் பெற்றோர்கள் பலரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் மின்னஞ்சல் முகவரிக்கு கேள்விகளை அனுப்பியுள்ளனர்.
தனியார் நிறுவன மகளிருக்கு பயனளிக்கும் வகையில் 12 வாரங்களாக இருந்த மகப்பேறு கால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கும், பிறரிடம் இருந்து குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்களுக்கும், குழந்தையைப் பராமரிப்பதற்காக 3 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கும் அந்த சட்டத் திருத்தத்தின்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரசவத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பெற்றோர், வளர்ப்புத் தாய்கள் ஆகியோர் மகப்பேறு விடுப்பு குறித்து தங்கள் நிறுவனங்களில் கேட்டபோது, அந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் பதில் கிடைத்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த மசோதாவால் தங்களுக்குப் பயன் உண்டா? இல்லையா? என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஏராளமானோர் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.
தத்தெடுக்கப்பட்ட குழந்தை, வளர்ப்புத் தாயுடன் பழக சில காலம் பிடிக்கும் என்பதால் 3 மாத விடுப்பை அதிகரிக்க வேண்டும். தத்தெடுக்கும் தாய்க்கும், இயற்கையாக குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு அளிப்பதைப் போல விடுப்பு வழங்க வேண்டும்' என்று ஒரு தாயார் வைத்த கோரிக்கைக்கு, மேனகா காந்தி, அந்த மசோதா என்னுடைய அமைச்சகத்துக்குள்பட்டதல்ல என்பதால் என்னுடைய ஆலோசனையை சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஏற்கவில்லை' என்று மேனகா பதில் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேனகா காந்தி, தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதா இன்னும் மக்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் வரை காத்திருப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com