ராணுவத்தினருக்கு அசோக சக்ரா உள்பட 82 விருதுகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி வீரமரணமடைந்த ராணுவ வீரர்

புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி வீரமரணமடைந்த ராணுவ வீரர் ஹங்பன் தாதாவுக்கு அசோக சக்ரா விருதையும் மற்ற ராணுவத்தினருக்கு 81 வீரதீர விருதுகளையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
முப்படைகள், துணை ராணுவப் படைகளில் சிறப்பாகப் பணியாற்றும் வீரர்களுக்கு அசோக சக்ரா, செளர்ய சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களில் 82 பேருக்கு விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, கடந்த மே மாதம், ஜம்மு-காஷ்மீருக்கு ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்று வீரமரணமடைந்த அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹங்பன் தாதாவுக்கு இந்த ஆண்டு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 14 செளர்ய சக்ரா விருதுகளும், வீரதீரச் செயல்களுக்காக 63 சேனா பதக்கங்களும், இரு நவ சேனா பதக்கங்களும், இரு வியாஸ் சேனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு அசோக சக்ரா விருதும் (மரணத்துக்குப் பிந்தைய), 11 சூரிய சக்ரா விருதும் (இவற்றில் 6 மரணத்துக்குப் பிந்தைய) கிடைத்துள்ளது. இது தவிர 63 சேனா பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
போர்க் காலம் அல்லாது அமைதிக் காலத்தில் வீரதீரச் செயல்புரியும் ராணுவ வீரர்களுக்கு அசோக சக்ரா விருதை சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் ஹங்பன் தாதா, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள, பொர்துரியா கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த மே மாதம் தனது 37-ஆவது வயதில் வீரமரணமடைந்தார். முன்னதாக, ஹங்பன் தாதா கடந்த 1997-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அவரது மனைவி அரசுப் பணியில் உள்ளார். 11 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வடக்கு காஷ்மீரின் சம்பாசபரி பகுதியில் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவினர்.
இதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹங்பன் உள்ளிட்ட இந்திய ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே சுமார் 24 மணி நேரம் சண்டை நீடித்தது. இந்தச் சண்டையில், 4 பயங்கரவாதிகளையும் ஹங்பன் தாதா சுட்டுக் கொன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் வீரமரணமடைந்தார்.
நிரஞ்சனுக்கு செளர்ய சக்ரா: பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது வீர மரணமடைந்த "லெப்டினன்ட் கர்னல்' நிரஞ்சன், "கார்போரல்' குரு சேவக் சிங் ஆகியோருக்கு செளர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புப் படையின் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் குழுவின் தலைவரான நிரஞ்சன், பதான்கோட்டில் பயங்கரவாதிகள் வீசிய குண்டுகளை செயல் இழக்கச் செய்ய முயற்சித்தபோது வீரமரணமடைந்தார். குரு சேவக் சிங் பதான்கோட்டில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்தார்.
இதுதவிர போலீஸாருக்கும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் போலீஸாருக்கும் 948 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிபிஐ-யைச் சேர்ந்த 31 அதிகாரிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 10 சுதந்திரப் போராட்ட வீரர்களை மத்திய அரசு கெளரவித்துள்ளது. இவர்களில் மூவர் பெண்கள் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com