காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்; வெறிச்சோடிய பாஜக அலுவலகம்!

மூன்று மாநில தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை
தில்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மூன்று மாநில பேரவைத் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய அக்கட்சித் தொண்டர்கள்.
தில்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மூன்று மாநில பேரவைத் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய அக்கட்சித் தொண்டர்கள்.

மூன்று மாநில தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர். பட்டாசுகளை வெடித்து, மேள தளாத்துடன் நடனமாடிய அவர்கள், வண்ணப் பொடியை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பது தெரிய வந்ததும் ஏராளமான தொண்டர்கள் காங்கிரஸ் கொடியுடன் கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டும் வகையில், ராகுல் காந்தி வாழ்க என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். அப்பகுதியில் குழுமியிருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். 
ராகுல் காந்தியை வாழ்த்தும் வகையில் ஏராளமான பதாகைகள் அப்பகுதியில் நிறுவப்பட்டன. 
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவ்ஜோத் சிங் சித்து, பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்களும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். 
அப்போது சித்து பேசுகையில், தேர்தலுக்கு தயாரானது, பிரசாரம் செய்வது உள்ளிட்டவற்றில் ஒன்றுபட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனைவருக்கும் உந்து சக்தியாக இருந்தார். அலையில் தத்தளிக்கும் கப்பலை வழிநடத்துவதைப் போல மிக இக்கட்டான சூழலில் வந்தவர் ராகுல் காந்தி என்றார்.
தேர்தல் வெற்றி குறித்து ஜீத்பால் யாதவ் என்ற காங்கிரஸ் தொண்டர் பேசுகையில், மூன்று மாநில தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் அதிகமான கடின உழைப்பு தேவைப்படும் என்ற சூழலில், இந்த வெற்றியை அளவுக்கு மீறி கொண்டாடக் கூடாது. சில மாநிலங்களில் வெற்றி பெறுவது என்பது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அறிகுறி அல்ல என்று தெரிவித்தார்.
களையிழந்த பாஜக அலுவலகம்: தில்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. முன்னதாக, தேர்தல் முடிவுகளையொட்டி ஏராளமான தொண்டர்கள் குவியக் கூடும் என்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த, காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், வந்திருந்த தொண்டர்களும் கலைந்து சென்றதால் அப்பகுதி அமைதியாக காணப்பட்டது.

வெறிச்சோடிக் காணப்பட்ட, தில்லி தீன்தயாள் உபாத்யாய மார்கில் உள்ள பாஜக தலைமையகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com