மியான்மரில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஆதரவளிக்கும்: ராம்நாத் கோவிந்த்

மியான்மர் சவாலான அரசியல் சூழல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டின் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
மியான்மருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, அந்நாட்டு அதிபர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை வரவேற்ற அதிபர் யு வின் மிண்ட்.
மியான்மருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, அந்நாட்டு அதிபர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை வரவேற்ற அதிபர் யு வின் மிண்ட்.


மியான்மர் சவாலான அரசியல் சூழல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டின் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதியளித்தார் . மியான்மர் அதிபர் யு வின் மிண்ட், அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியபோது இந்த வாக்குறுதியை அளித்தார்.
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக மியான்மருக்கு திங்கள்கிழமை சென்ற ராம்நாத் கோவிந்துக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், மியான்மர் அதிபர் யு வின் மிண்ட்டை சந்தித்து ராம்நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதுகுறித்து குடியரசுத்தலைவர் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், மியான்மர் அதிபருடன் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். மியான்மருடனான நட்புறவுகளுக்கு இந்தியா சிறப்புமிக்க முக்கியத்துவத்தை அளித்து வருகிறது என்பதை அந்நாட்டு அதிபரிடம் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். 
இந்தியா கடைப்பிடித்து வரும் கிழக்கு கொள்கை மற்றும் அண்டைநாடுகளுக்கே முதல் முன்னுரிமை ஆகிய கொள்கைகளில் மியான்மர் பிரதான கூட்டு நாடு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நீதித்துறை பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் யு வின் மிண்ட் மற்றும் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் கையெழுத்தாகின.
பிரதமருடன் சந்திப்பு: மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகியையும் குடியரசுத்தலைவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், மியான்மர் பிரதமர் ஆங் சான் சுயூகியை சந்தித்து அந்நாட்டின் நவீன கால வரலாற்றில் அவரது பங்களிப்பு குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்தார். மியான்மரின் வளங்கள் மற்றும் பயணத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் ஒப்படைப்பு: மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது அகதிகளாக வெளியேறிய ரோஹிங்கயாக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக 250 வீடுகள் கட்டித் தரப்படும் என இந்தியா உறுதியளித்திருந்தது. அதன்படி முதல்கட்டமாக 50 வீடுகள் மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 
விசா வசதி: இதற்கிடையே, சுற்றுலாவுக்காக செல்லும் இந்திய மக்கள் மியான்மர் சென்றடைந்த பிறகு விசா பெற்றுக் கொள்ளும் புதிய முறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com