46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துதான் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்: சொல்கிறது ஆய்வு

தில்லியில், பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக சென்ற காவலர், அங்கிருந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விஷயம் வெளியாகியிருப்பது 
46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துதான் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்: சொல்கிறது ஆய்வு


புதிதாக பாஸ்போர்ட் பெறுவதாக இருந்தாலும் சரி, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதாக இருந்தாலும் சரி 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தே காரியத்தை சாதித்திருப்பதாக ஆய்வு முடிவு சொல்கிறது.

லோகல் சர்கிள் எனப்படும் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில், 36 சதவீதம் பேர், காவல்துறையினர் வீட்டிற்கு வந்து வெரிஃபிகேஷன் செய்த போது லஞ்சம் கொடுத்ததாகவும், 4 சதவீதம் பேர் தபால்காரருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், தரகர் மூலமாக பாஸ்போர்ட் பெற்றபோது லஞ்சம் கொடுத்ததாக 5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தில்லியில், பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக சென்ற காவலர், அங்கிருந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விஷயம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை பாஸ்போர்ட் பெறுவது என்பது எப்போதுமே மிகக் கடினமான வேலைதான். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பல சிக்கல்கள் எளிமையாக்கப்பட்ட பின்னரும் கூட அதே நிலைதான் நீடிக்கிறது. 

தனிநபர் ஒருவர் பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க முயலும் போது பல பிரச்னைகளை சந்தித்ததாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். காவல்துறை வெரிஃபிகேஷனுக்கு அதிக நாட்கள் ஆனதாகவும், அதற்காக லஞ்சம் கொடுத்ததாகவும் சிலர் கூறியுள்ளனர்.

பாஸ்போர்ட்டை புதிதாக பெறுவது, புதுப்பிப்பது, மறு பாஸ்போர்ட் கோருவது என எல்லாவற்றுக்கும் ஒரே விதமான சிக்கல்களே இன்னமும் தொடர்கின்றன. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏராளமான ஆவணங்கள் கோரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

இது குறித்துக் கருத்துக் கூறிய பொதுமக்கள், அதிகமான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் வழங்குவது அதிகரிக்கப்பட வேண்டும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது செல்போன் செயலி வாயிலாகவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதிகள் வந்துவிட்டன என்றாலும் இன்னமும் இதில் இத்தனை குறைபாடுகள் நீடிப்பது சற்று சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com