8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா... மோடிக்கு ராகுல் கடிதம்! 

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா... மோடிக்கு ராகுல் கடிதம்! 

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவானது மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் தான் உள்ளது. 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?

சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். 

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியதாவது, 

"பிரதமர் அவர்களே, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பொது வாழ்க்கையில் அவர்களை ஈடுபட வைத்து அர்த்தமளிப்பதில் தங்களுக்கு ஆர்வம் உள்ளதாக நிறைய பொதுக்கூட்டங்களில் கூறியிருக்கிறீர்கள். அதன்படி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்துக்கு தங்களது முழு ஆதரவளியுங்கள். 

பெண்கள் முன்னேற்றத்துக்கு நீங்கள் காட்டும் ஈடுபாட்டை செயல்படுத்துவதற்கு இதைவிட சிறந்த வழி ஏதேனும் உள்ளதா? மேலும், இதை நிறைவேற்றுவதற்கு வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரைவிட சிறந்த தருணம் ஏதும் இருக்கிறதா? 

இதனை மேலும் இழுத்தடித்தால் பிறகு அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்த மசோதாவை செயல்படுத்த முடியாமல் போகும். 

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த விவகாரத்தில், நாம் அனைவரும் கட்சி அரசியலை புறம் தள்ளி, ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். அதன் மூலம் நாட்டுக்கு, மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டதாக  உணர்த்துவோம்.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்கள் பாதாளத்தில் உள்ளனர். அதனால், இந்த மசோதா மூலம் அவர்கள் தங்களுக்கான தகுந்த இடத்தை அடையட்டும். 

தங்களது கட்சியில் இந்த மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம், இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக செயல்படுவதை சுட்டிக்காட்டுங்கள். 

அதனால் தான் இந்த மசோதா அரசு நிர்வாகத்தை மாற்றக்கூடும் திறன் உள்ளது.

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கே மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால், இந்த மசோதா நிறைவேறுவதற்கு பிரதமரின் ஆதரவு மட்டுமே தேவை.

இந்த மசோதா நிறுத்திவைக்கப்படாது என்று உறுதியாக நம்புகிறேன்.

மேலும், இந்த மசோதா நிறைவேறுவதற்கு ஆதரவு சேகரிக்கும் வகையில் 32 லட்ச இந்திய ஆண் மற்றும் பெண்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. பிரதமரின் ஆதரவுக்காக அதனை சமர்பிக்கிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com