பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் இணைவதை தடுப்பதே ராணுவத்தின் நோக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைவதை தடுப்பதற்கே ராணுவம் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் இணைவதை தடுப்பதே ராணுவத்தின் நோக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைவதை தடுப்பதற்கே ராணுவம் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.
 இருநாள் பயணமாக பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் பகுதிக்கு வந்துள்ள விபின் ராவத் செய்தியாளர்களிடையே திங்கள்கிழமை கூறியதாவது:
 பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதையும் மீறி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை அழிப்பதற்கும் அரசு தயங்காது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை ஒடுக்கவே ராணுவம் முன்னுரிமை அளித்து வருகிறது.
 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணையாமல் தடுக்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளில் ஏற்கெனவே இணைந்த இளைஞர்களை சரணடைய செய்யுமாறு அவர்களது பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். காஷ்மீர் மக்களும் நம் மக்கள்தான். அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதனால்தான் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்த இளைஞர்களுக்கு திருந்தி வாழ மறுவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதையும் மீறி, வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகளே கொல்லப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
 பழிக்கு பழி வாங்கும் எண்ணத்தில், பாகிஸ்தானிடம் இந்தியா நடந்து கொள்கிறதா? என்ற கேள்விக்கு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.
 ஏதேனும் புதிதாக நாம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எதிரியை விட, நாம் மேலே இருக்க முடியும். பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி காஷ்மீர் மக்களிடையே வன்முறையை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது.
 நாமாக எந்த பிரச்னையையும் ஆரம்பிக்கவில்லை. அவர்களின் செயலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நாம் அனைத்தையும் எதிர்க்கும் வகையில் உறுதியாக உள்ளோம் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
 காஷ்மீர் மக்கள் விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று அங்குள்ள அரசியல்வாதிகள் கூறிவருவது குறித்த கேள்விக்கு, காஷ்மீரில் அரசு சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அனைவருக்கும் பொதுவானவர். யார் வேண்டுமானாலும் அவரை சந்தித்து பேசலாம் என்று கூறினார்.
 இதனிடையே, அருணாசலப் பிரதேசம், பாம்தீலாவில் காவலர் மற்றும் பொதுமக்களிடையே தவறாக நடந்து கொண்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விபின் ராவத் கூறினார்.
 முன்னதாக, பாம்தீலா பகுதியில் நவம்பர் 2-ஆம் தேதி காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே தவறாக நடந்து கொண்டதாக இரு ராணுவ வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதுகுறித்த கேள்விக்கு, ராணுவ வீரர்களின் குற்றங்கள் நிரூபணமானால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com