சபரிமலை கோயிலில் வரும் 17-ஆம் தேதி தரிசனம்: பாதுகாப்பு வழங்கக்கோரி கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் பெண்ணியவாதி கடிதம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 வயது முதல் 50 வயதுள்ள 6 பெண்களுடன் வரும் 17-ஆம் தேதி தரிசனம் செய்யப்போவதாக பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
சபரிமலை கோயிலில் வரும் 17-ஆம் தேதி தரிசனம்: பாதுகாப்பு வழங்கக்கோரி கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் பெண்ணியவாதி கடிதம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 வயது முதல் 50 வயதுள்ள 6 பெண்களுடன் வரும் 17-ஆம் தேதி தரிசனம் செய்யப்போவதாக பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். 

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக வரும் சனிக்கிழமை முதல் 2 மாதங்கள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் கோயில் நடைதிறப்பு தினத்தன்று தன்னுடன் 10 முதல் 50 வயதுக்கிடையிலான 6 பெண்களுடன் தரிசனம் செய்யப்போவதாக இன்று தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், 

"சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யாமல் நாங்கள் மகாராஷ்டிராவுக்கு திரும்பமாட்டோம். அரசு எங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அரசு மற்றும் போலீஸாரின் பொறுப்பு" என்றார். 

சபரிமலை கோயிலுக்கு வரும் போது எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு த்ருப்தி தேசாய் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, த்ருப்தி தேசாய் அனுப்பிய மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. 

சபரிமலை கோயிலுக்கு செல்லும் போது தனது பாதுகாப்புக்கு உறுதியளிக்கவேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

இதற்கிடையில், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைப்புகளில் ஒன்றான ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறுகையில், "நாங்கள் தரையில் படுத்துவிடுவோம். அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுவதை தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவோம்" என்றார். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசின் முடிவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இதர வலதுசாரி சிந்தனை கொண்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதற்கிடையே, கோயில் நடை கடந்த அக்டோபர் மாதம் 4 நாட்களும், நவம்பர் மாதம் 2 தினங்களும் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது, 10 முதல் 50 வயதுக்கிடையிலான ஒரு சில பெண்கள் கோயிலுக்கு சென்று தரிசிக்க முயற்சித்தனர். ஆனால், போராட்டங்களின் வீரியம் காரணமாக அவர்களால் கோயிலுக்குள் சென்று தரிசனம் மேற்கொள்ள முடியவில்லை.

த்ருப்தி தேசாய் எனும் பெண்ணியவாதி, ஏற்கனவே ஷானி ஷிங்னாபூர் கோயில், ஹஜி அலி தர்கா, மகாலக்ஷ்மி கோயில், த்ரிம்பகேஷ்வர் சிவன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் பெண்களை அனுமதிப்பதற்கான பிரசாரங்களை முன்னின்று வழிநடத்தியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com