பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை

பணமதிப்பிழப்புக்கு பிறகு, சுமார் 80,000 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத நிலையில், இதுதொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரித்து வருவதாக மத்திய நேரடி வரிகள்


பணமதிப்பிழப்புக்கு பிறகு, சுமார் 80,000 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத நிலையில், இதுதொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரித்து வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறினார்.
தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், வருமான வரித் துறை சார்பிலான அரங்கை புதன்கிழமை திறந்துவைத்து அவர் பேசியதாவது:
மத்திய அரசு கடந்த 2016, நவம்பரில் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், நேரடி வரிகளின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது.
மறைமுக வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைவிட நேரடி வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த ஆண்டில் அதிகரித்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, சுமார் 3 லட்சம் பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. சுமார் 2.2 லட்சம் பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துவிட்ட நிலையில், சுமார் 80,000 பேர் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணமதிப்பிழப்புக்கு முன்புவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல், கடந்த 3 ஆண்டுகளாக 80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டு மொத்தம் 6.02 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கலாகியுள்ளன என்றார் சுஷில் சந்திரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com