பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா - சீனா பேச்சு: எல்லையில் அமைதியை கடைப்பிடிக்க ஒப்புதல்

இந்தியா - சீனா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த வருடாந்திர பேச்சுவார்த்தை, பெய்ஜிங் நகரில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது.


இந்தியா - சீனா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த வருடாந்திர பேச்சுவார்த்தை, பெய்ஜிங் நகரில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டுவது என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் வூஹான் நகரில், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துப் பேசியபோது, பாதுகாப்பு தொடர்பாக இருதரப்பிலும் ஏற்பட்ட கருத்தொற்றுமையை செயல்படுத்துவது என்றும் இருநாட்டுக் குழுவினர் தீர்மானித்தனர்.
இரு நாடுகளுக்கு இடையே, டோக்கா லாம் எல்லைப் பிரச்னை நிலவியதால் கடந்த ஆண்டில் வருடாந்திர பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த முறை பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்திய தரப்பில் இருந்து பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். சீன தரப்பில், அந்நாட்டு மத்திய ராணுவ ஆணையத்தில் செயல்படும், கூட்டுப் பணியாளர் துறையின் துணைத் தளபதி சவோ யுவான்மிங் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், இரு நாட்டு ராணுவங்களில் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்றது. 
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய பாதுகாப்புத் துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வே ஃபெங்கேயை சந்தித்துப் பேசினார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டுக் குழுவினர் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து சீனப் பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எல்லையில் அமைதியையும், சுமூகமான நிலையையும் நிலைநாட்டுவது மற்றும் இருநாட்டு உறவுகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக, இருநாடுகளின் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை இருநாட்டுக் குழுவினரும் கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டம்: எல்லை விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெறவுள்ள 21-ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை, சீனாவின் துஜங்யான் நகரில், வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக தற்போது நடைபெற்று முடிந்துள்ள பேச்சுவார்த்தை அமையும் எனக் கருதப்படுகிறது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உள்ளிட்ட சிறப்பு பிரதிநிதிகள் அடங்கிய இருநாட்டுக் குழுவினர், எல்லை விவகாரங்கள் தொடர்பாக பல சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com