பேறுகால விடுப்பில், பெண் ஊழியர்களுக்கு 7 வார ஊதியம் வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

பேறுகாலங்களில் பெண் ஊழியர்களுக்கான 26 வாரகால விடுப்பில், 7 வாரங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாதந்தோறும்


பேறுகாலங்களில் பெண் ஊழியர்களுக்கான 26 வாரகால விடுப்பில், 7 வாரங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாதந்தோறும் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
பேறுகால விடுப்பை 12 வாரங்களில் (3 மாதம்) இருந்து 26 வாரங்களாக (6 1/2 மாதம்) மத்திய அரசு அதிகரித்த பின்னர், கர்ப்பிணியாக உள்ள பெண் ஊழியர்களை பணியில் சேர்ப்பதற்கு சில தனியார் நிறுவனங்கள் தயங்கவதாகவும், சில சமயங்களில் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து 7 வார ஊதியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகச் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தொழிலாளர் நலனுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரித் தொகையை, மாநில அரசுகள் மிகக் குறைவாகவே பயன்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், பேறுகால விடுப்பில் செல்லும், அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு, 7 வார கால ஊதியத்தை, தொழிலாளர் நல நிதியில் இருந்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறுவோர் இதில் பயனடையலாம்.
பேறுகால விடுப்பை அரசு அதிகரித்ததால், பணிநீக்க நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதாக புகார்கள் வந்தன. இதனால், கூடுதல் விடுப்பு காலமான 14 வாரங்களில், 7 வார காலத்துக்கான ஊதியத்தை பெண் ஊழியர்களுக்கு தொழிலாளர் நல நிதியில் இருந்து வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, மொத்தம் ரூ.32,632 கோடியாக உள்ள தொழிலாளர் நல நிதியில் ரூ.7,500 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிதியில் இருந்து 7 வார ஊதியத்தை பெண்களுக்கு நாங்கள் வழங்கவுள்ளதால், அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும்போது பிரச்னைகள் ஏற்படாது. 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அந்த அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் விவரங்களுடன் அறிவிக்கை வெளியிடப்படும் என்றார் அவர்.
பேறுகால விடுப்பை 12 வாரங்களில் 26 வாரங்களாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com