இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: சீன பாதுகாப்புத் துறை அமைச்சர்

ராணுவத்துக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது, வேறுபாடுகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளை இந்தியாவும்


ராணுவத்துக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது, வேறுபாடுகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளை இந்தியாவும், சீனாவும் மேற்கொள்ள வேண்டும் என்று சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வே ஃபெங்கே வலியுறுத்தியுள்ளார். இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் சஞ்சய் மித்ராவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசியபோது அவர் இவ்வாறு வலியுறுத்தியதாக சீன அரசுப் பத்திரிகையான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பாதுகாப்பு உறவுகள் குறித்து சீனவுக் குழுவினருடன் வருடாந்திர பேச்சுவார்த்தையை நடத்தி முடித்ததை தொடர்ந்து, அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சரை சஞ்சய் மித்ரா சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவும், சீனாவும் வேறுபாடுகளைக் களைந்து வெகுவான பொதுநலன் குறித்து சிந்தித்து வருகின்றன என்று சஞ்சய் மித்ராவிடம், வே ஃபெங்கே தெரிவித்தார். மேலும், பாதுகாப்புத் துறையில் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஃபெங்கே வலியுறுத்தினார்.
இதேபோன்று, அயல் நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகளில் சீனாவுடனான நட்பு இந்தியாவுக்கு மிக முக்கியமானது என்றும், அந்த நட்புறவையும், இருநாட்டு ராணுவத்துக்கு இடையிலான ஒத்துழைப்பையும் மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என சஞ்சய் மித்ரா தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 9-ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை பெய்ஜிங் நகரில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள், சஞ்சய் மித்ரா தலைமையில் அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சீன தரப்பில், அந்நாட்டு மத்திய ராணுவ ஆணையத்தில் செயல்படும், கூட்டுப் பணியாளர் துறையின் துணைத் தளபதி சவோ யுவான்மிங் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அப்போது, எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டுவது என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
அஜீத் தோவல் பங்கேற்கும் பேச்சுவார்த்தை: எல்லை விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெறவுள்ள 21-ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை, சீனாவின் துஜங்யான் நகரில், வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உள்ளிட்ட சிறப்பு பிரதிநிதிகள் அடங்கிய இருநாட்டுக் குழுவினர், எல்லை விவகாரங்கள் தொடர்பாக பல சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com