எதிர்க்கட்சிகளை அழிக்க மோடி, அமித் ஷா முயற்சி: தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், நாட்டை எதிர்க்கட்சிகள் அல்லாத தேசமாக உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளனர் என்று தெலுங்கு


பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், நாட்டை எதிர்க்கட்சிகள் அல்லாத தேசமாக உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளனர் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்கு தாங்கள் உறுதி பூண்டிருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், ஆந்திர மாநில நிதியமைச்சருமான யானமலா ராமகிருஷ்ணடூ, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பிற கட்சிகளை விழுங்கிவிட வேண்டும் என முயற்சிக்கின்றனர். அதைச் செய்தால்தான், நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்காது என்பது அவர்களது எண்ணம். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தால்தான், ஜனநாயகத்தை வலுவான நிலையில் வைத்திருக்க முடியும்.
ஜனநாயகத்தை காப்பதையே தெலுங்கு தேசம் கட்சி இலக்காகக் கொண்டுள்ளது. அதேபோன்று, 2019-ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் வாக்களிப்பது அனைவருடைய கடமையாகும். நாட்டில் சில நகரங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. அதைப் பார்த்தால் துக்ளக் ஆட்சி நடப்பதைப் போல உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் நடக்கும் ஆந்திர அரசின் செயல்பாடுகளுக்கும், அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையும் முரண்பாடு உடையதாகக் கருதப்படுகிறது. ஊர்களின் பெயர்களை பாஜக அரசு மாற்றுவது குறித்து அக்கட்சி விமர்சித்துள்ளது.
ஆனால், ஆந்திர மாநிலத்தில், ராஜமுந்திரி என்ற ஊரின் பெயர் ராஜமஹேந்திரவரம் என்றும், அனந்த்பூர் என்ற பெயர் அனந்தபுரமு என்றும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பெயர்களையும் ஆந்திர அரசு மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com