மீனவர்களுக்கு வழிகாட்டும் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

மீனவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
சென்னை மகாஜன சபையின் சார்பில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு காமராஜர் விருது வழங்கும் சபையின் துணைத் தலைவர்கள் எம்.எஸ்.நேதாஜிகணேசன்
சென்னை மகாஜன சபையின் சார்பில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு காமராஜர் விருது வழங்கும் சபையின் துணைத் தலைவர்கள் எம்.எஸ்.நேதாஜிகணேசன்


மீனவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
சென்னை மகாஜன சபை சார்பில் முப்பெரும் விழா ( 135-ஆவது ஆண்டு விழா, காமராஜர் விழா, மகாகவி பாரதியார் விழா ) மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சா.பாஸ்கரன் வழங்கிப் பாராட்டினார். விருதைப் பெற்றுக் கொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதற்கு காரணம் கூட்டு முயற்சிதான். கடந்த புதன்கிழமை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதேபோல் அடுத்தடுத்து விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
வரும் டிசம்பர் 4-ஆம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டமும், வரும் ஜனவரி மாதத்தில் சந்திராயன் - 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டமும் உள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஜி சாட் செயற்கைக்கோள் மூலம் கிராமங்களில் அதிவேக இணையதள வசதி மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்தப்படும். மீனவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு தற்போது அனுப்பப்படும் ஜி சாட் செயற்கைக்கோள்கள் பெரிதும் பயன்படும்.
இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதை கைவிட வேண்டும். இந்தியாவில் பணியாற்றி நம் நாட்டை உயர்த்த முன்வர வேண்டும். நாங்கள் செய்து வரும் பணிகளை இன்றைய இளம் தலைமுறையினர் தொடர வேண்டும். இந்திய மாணவர்களின் அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்தினால் நம் நாடு உலகத்தரத்துக்கு விரைவில் உயரும். மாணவர்கள் தங்களுக்கென தனி பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் கே.சிவன்.
நீதிபதி எஸ். பாஸ்கரன்: முன்னதாக நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசியது: மாணவர்கள் தங்கள் திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவை. அப்போதுதான் அவர்கள் விரும்பும் இலக்கை எளிதில் அடைய முடியும். விடாமுயற்சியுடன் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர் இஸ்ரோ தலைவர் சிவன். குறிப்பாக கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்கிய பெருமை சிவனையே சாரும் என்றார்.
நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மகாஜனசபை தலைவர் ஜி.செல்வகுமார், பொதுச் செயலாளர் ஜே.ஜே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com