நிதி மோசடியாளர்கள் பட்டியல்: பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் மீண்டும் உத்தரவு

வேண்டுமென்று நிதி மோசடியில் ஈடுபட்டோர் குறித்த பட்டியலை வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடியாளர்கள் பட்டியல்: பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் மீண்டும் உத்தரவு

வேண்டுமென்று நிதி மோசடியில் ஈடுபட்டோர் குறித்த பட்டியலை வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளில் ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் கடன்வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் வேண்டுமென்று மோசடி செய்த நபர்களின் பட்டியலை அளிக்கக்கோரி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சந்தீப் சிங் என்ற ஆர்டிஐ ஆர்வலர் மனு அளித்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பதில் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்திடம் சந்தீப் சிங் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையம், மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் அமைச்சகம் ஆகியவற்றுக்கு சந்தீப் சிங் கோரும் தகவலை அளிக்க வேண்டும் அல்லது அந்த தகவலை அளிக்க முடியவில்லை எனில், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், சந்தீப் சிங் கோரிய தகவல்கள் அளிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்திடம் சந்தீப் சிங் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணைய ஆணையர் எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், இந்த விவகாரத்தில் ஏன் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று கேள்வியெழுப்பியதுடன், இதற்காக ஏன் அதிகப்பட்ச தொகையை அபராதமாக விதிக்கக் கூடாது என்பது குறித்து 16ஆம் தேதிக்கு முன்பு விளக்கம் அளிக்கக்கோரி, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். 
வாராக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை வெளியிடும்படி பிரதமர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சந்தீப் சிங்கின் மனு, மத்திய தகவல் ஆணையத்தில் ஸ்ரீதர் ஆச்சார்யலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 66 பக்க உத்தரவை ஆச்சார்யலு பிறப்பித்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நிதி மோசடியாளர்கள் குறித்த விவரங்கள், நிதி மோசடியாளர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க வங்கிகள் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது, பிரதமர் அலுவலகத்துக்கு இருக்கும் அரசியலமைப்பு, தார்மீக ரீதியிலான கடமையாகும். இந்த விவகாரத்தில் வாரா கடன் குறித்த ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை பிரதமர் அலுவலகம் வெளியிடாதது கண்டிக்கத்தக்கது. இதற்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள காரணம், சட்டரீதியில் ஏற்க முடியாது; துரதிருஷ்டவசமானது. அந்த கடிதத்தை வெளியிடுவதற்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கலாம்.
இதேபோல், ரிசர்வ் வங்கியும் நிதிமோசடியாளர்கள் பட்டியல், ரகுராம் ராஜனின் கடிதம் ஆகியவற்றை வெளியிட மறுத்திருப்பது மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், அலுவல் குறிப்பாணைகளுக்கு முரண்பாடாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கவில்லை என்றாலோ, மக்களுக்கு இருக்கும் தகவல் அறியும் உரிமையை மறுத்தாலோ, அது மோசடிக்கு வழிவகுக்கும். வசதிபடைத்த மற்றும் செல்வாக்கு பெற்ற நிதிமோசடியாளர்கள், நாட்டை விட்டு தப்பியோடவும் வழிவகுக்கும்.
ஆதலால், வேண்டுமென்று நிதிமோசடியில் ஈடுபட்ட நபர்களின் பட்டியலையும், ரகுராம் ராஜனின் கடிதம் மற்றும் கொள்கையின்படி மோசடியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிதி மோசடியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொகை ஆகிய தகவல்களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. பொது கணக்கு குழு, நிதி விவகார நாடாளுமன்ற நிலைக்குழு, மதிப்பீட்டு குழு ஆகியவையும் தங்களிடம் இருக்கும் தகவல்களை அளிக்க வேண்டும். இதேபோல், ரிசர்வ் வங்கியும் நிதி மோசடியாளர்கள் பட்டியல், வாராக் கடன் குறித்த ரகுராம் ராஜன் கடிதம் ஆகியவற்றை வெளியிடும்படி உத்தரவிடப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com