இறக்குமதி வரி அதிகரிப்பு: உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா முறையீடு

உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்திருப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு செய்துள்ளது.


உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்திருப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு உருக்கு, அலுமினியம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு 1.6 பில்லியன் டாலர் மதிப்புக்கு அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து உருக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்படுவதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை முறையே 25 சதவீதமாகவும், 10 சதவீதமாகவும் அமெரிக்கா அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட், பருப்பு வகைகள், இரும்பு, உருக்கு பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, வரும் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், உருக்கு, அலுமினியம் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்திருப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கும்படி இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் முதல் வழியாகும். இதில் தீர்வு எட்டப்படாதபோது, சம்பந்தப்பட்ட நாடு, உலக வர்த்தக அமைப்பின் பிரச்னை தீர்வு குழுவிடம் ஆய்வு செய்ய முறையீடு செய்யும். அதேபோல், இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் வர்த்தக விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படவில்லை. இதனாலேயே, உலக வர்த்தக அமைப்பிடம் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஒட்டுமொத்தமாக கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 48 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 26.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே இறக்குமதி நடைபெற்றுள்ளது. அதாவது, இருநாடுகளிடையேயான வர்த்தகமானது, இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் இருநாடுகளும் ஒன்றின் மீது ஒன்று புகார் 
தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com