மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரண்தீப் சுர்ஜேவாலா,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரண்தீப் சுர்ஜேவாலா,

ஜனநாயகத்தை பலவீனமாக்கியதே மோடி அரசின் சாதனை: மன்மோகன் சிங்

நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கியதும், நாடாளுமன்றம், சிபிஐ உள்ளிட்டவை மீதான நம்பகத்தன்மையை


நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கியதும், நாடாளுமன்றம், சிபிஐ உள்ளிட்டவை மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்ததும்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனைகள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங் கூறியதாவது:
நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளமாக நாடாளுமன்றம் இருந்தது. விசாரணை அமைப்புகளில் நேர்மையானதாக சிபிஐ விளங்கியது. 
ஆனால், அவை இரண்டின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்து, நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்கியுள்ளது இப்போதைய அரசு. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலை இன்றைய ஆட்சியாளர்கள் மீறியுள்ளனர். நாட்டில் இப்போது நிலவி வரும் சூழ்நிலையை நாம் உடனடியாக மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. மோடி அரசின் ஊழல் உச்சத்தை எட்டியுள்ளது. அரசு மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
நாட்டின் ஜனநாயகத்தை பலவீனமாக்க வேண்டும் என்பதை இந்த அரசு மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது. இந்த அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட பெரும் பிழை. அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் மிக அதிகம். அதைத் தொடர்ந்து சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) தவறான முறையில் செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்தனர். இவற்றால் அமைப்பு சாரா துறையினரும், சிறு, குறு தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நாட்டை அழிவுப் பாதையில் இருந்து மீட்க வேண்டும் என்றால் இப்போதைய அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி தனது பதவியை பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் முறை பிரதமர் பதவிக்கு பொருத்தமானதாக இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வருகிறார். 
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதார, நிதி நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் இந்த இரு தரப்பும் ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட்டால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் தனித்தனியாக சுதந்திரமான உரிமைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும்.ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
நாட்டை பொருளாதாரரீதியாக மேம்படுத்த உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தேசிய சேமிப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.

பாஜக பதிலடி
பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில்தான் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் அனைத்து உயர் அமைப்புகளுக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க அனைத்து தரப்புக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com