உ.பி.யில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் இணைய தயார்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கவுள்ள மகா கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற சமாஜவாதி
உ.பி.யில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் இணைய தயார்


உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கவுள்ள மகா கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற சமாஜவாதி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் சிவபால் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தான் வசித்து வந்த அரசு இல்லத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, சமாஜவாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரரும், மதச்சார்பற்ற சமாஜவாதி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிவபால் சிங் யாதவ்-க்கு அந்த இல்லத்தை ஒதுக்கியது.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை அரசு இல்லத்துக்குக் குடிபெயர்ந்த சிவபால் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த இல்லத்தை கட்சியின் அலுவலகமாகவும் உபயோகிக்க உள்ளேன். மக்கள் அனைவரும் மாநில அரசின் மீதும், சமாஜவாதி கட்சியின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். சமாஜவாதி கட்சியில் சரியான மரியாதை கிடைக்காதோருக்கு, மோர்ச்சாவின் கதவுகள் என்றும் திறக்கப்பட்டிருக்கும். அவர்கள் எந்நேரமும் கட்சியில் இணைந்துகொள்ளலாம்.
சமாஜவாதி கட்சியை விட்டுப் பிரியும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆனால், அக்கட்சியின் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் என்னை கட்சியினுள் இருக்க விடவில்லை. அவரால் பலர் கட்சியை விட்டு விலகி விட்டனர்.
தேர்தலில் போட்டி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், முலாயம் சிங் போட்டியிடும் தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடும். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்க உள்ள மகா கூட்டணியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டால், அதில் இணைய தயாராக இருக்கிறோம். எனது மகன் அங்குர் யாதவ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த ஆகஸ்டு மாதம் மதச்சார்பற்ற சமாஜவாதி மோர்ச்சா கட்சியை சிவபால் நிறுவினார்.
மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லங்களை ஒதுக்கும், உத்தரப் பிரதேச அரசின் சட்டம் செல்லாது என கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மாயாவதி அரசு இல்லத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்ததையடுத்து, தனக்கு இந்த அரசு இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிவபால் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com