எண்ணெய், எரிவாயு விலை நிர்ணயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஒபெக் நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை நிர்ணயத்தில் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) பொறுப்புடன் செயல்பட வேண்டும்


பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை நிர்ணயத்தில் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவில், அண்மை காலமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு பெரும் பிரச்னையாக உள்ளது. 
சர்வதேச அளவில் எண்ணெய் விலை கூடுவது இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டாலும், ஒபெக் நாடுகள் தேவைக்கு ஏற்ப முழுவீச்சில் எண்ணெய் உற்பத்தி செய்யாமல், விலையை உயர்த்தும் நோக்கில் செயல்படுவதும் பிரச்னைக்கு மற்றொரு முக்கியக் காரணமாகும். 
இந்நிலையில், ஒபெக் நாடுகள் கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே வருடாந்திர பேச்சுவார்த்தை தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
வருடாந்திர பேச்சுவார்த்தையில் ஒபெக் பொதுச் செயலர் முகமது சனுசி பர்கின்டோவை சந்தித்தேன். அவரிடம் கச்சா எண்ணெய் விலை உயர்வு விவகாரத்தை எழுப்பினேன். 
கச்சா எண்ணெயை அதிக அளவு ஒபெக் நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்துவரும் இந்தியா போன்ற நாடுகள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டதாகக் கூறினேன். ஏற்றுமதியாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பலனளிக்கும் வகையில் நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இந்தியா மிகவும் முக்கியமான கூட்டாளி என்று கூறிய முகமது சனுசி பர்கின்டோ, இந்தியா-ஒபெக் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
உலகிலேயே அதிக அளவு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடாக திகழ்ந்துவரும் சவூதி அரேபியா, எண்ணெய் துறையில் பற்றாக்குறை நிலவாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார் என்றார் தர்மேந்திர பிரதான்.
இந்தியா தனது உள்நாட்டு தேவைக்காக 83 சதவீதத்துக்கு மேல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதில், சுமார் 85 சதவீதம் வரை ஒபெக் நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com