மனோஜ் திவாரி ஆஜராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வட கிழக்கு தில்லி கோகுல்புரி பகுதியில் கிழக்கு தில்லி மாநகராட்சியால் சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த
மனோஜ் திவாரி ஆஜராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


வட கிழக்கு தில்லி கோகுல்புரி பகுதியில் கிழக்கு தில்லி மாநகராட்சியால் சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த விவகாரத்தில், தில்லி பாஜக தலைவரும் வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான மனோஜ் திவாரி ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார், சீலிங் விவாரத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி. லோகுர், எஸ். அப்துல் நஜீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை சமர்ப்பித்தார்.
அறிக்கையில் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தொடர்புடையதாகக் கூறப்படும் விடியோ பதிவையும் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், கிழக்கு தில்லி மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் மனோஜ் திவாரி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த மனோஜ் திவாரிக்கு எதிராக நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மதிக்காமல் இருப்பது முக்கியமாகும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்க முயற்சி செய்திருப்பது துரதிருஷ்டவசமாகும், அவரது செயல்பாடு தொல்லை அளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்ததுடன், மனோஜ் திவாரி உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அவதூறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சீலிங் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என ஏற்கெனவே எச்சரித்திருத்த உச்ச நீதிமன்றம், பாஜக எம்எல்ஏ ஓ.பி. சர்மா, மாநகராட்சி கவுன்சிலர் குஞ்சன் குப்தா ஆகியோருக்கு ஏற்கெனவே அவதூறு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com