கேரள வெள்ளத்தில் வீடிழந்த 1,000 பேருக்கு வீடுகள்: சேவாபாரதி திட்டம்

கேரள மாநிலத்தில, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களில் 1,000 பேருக்கு சேவா பாரதி மூலம் வீடு கட்டித் தர திட்டமிட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின்


கேரள மாநிலத்தில, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களில் 1,000 பேருக்கு சேவா பாரதி மூலம் வீடு கட்டித் தர திட்டமிட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சேவாபாரதி தமிழ்நாடு தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சேவா தரிசனம்' என்ற கையேட்டை சேதுமாதவன் வெளியிட்டு பேசியதாவது:
கேரள மாநிலம் இதுவரைக் கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு இயல்பான வாழ்வுக்குத் திரும்ப குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகும். ஆகஸ்ட் 14 முதல் ஆர்எஸ்எஸ் மூலம் கேரளத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த இன்னல்களில் இருந்து இன்னமும் மீளவில்லை. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெண் உறுப்பினர்களைத் திரட்டி, வீடு மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கவுன்சலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம். வரும் அக்டோபர் 4-இல் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சர்வ சாந்தி பூஜை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டுள்ளோம் என்றார் சேது மாதவன். நிகழ்ச்சியில் சேவாபாரதி மாநிலத் தலைவர் பி.ரபு மனோகர், ஆர்எஸ்எஸ் சென்னை மாநகர தலைவர் எஸ்.சந்திரசேகர், சேவாபாரதி சென்னை மாநகர தலைவர் ஜி.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com