ரூ.13 கோடி முடக்கம்: கீழமை நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உத்தரவு

பெங்களூரு சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.13.22 கோடியை மீண்டும் பெற கீழமை நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு


பெங்களூரு சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.13.22 கோடியை மீண்டும் பெற கீழமை நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது நிறுவனத்தின் பெயரில் ரூ.19.21 கோடி கடன் வாங்கினார். கர்நாடக மாநில அரசின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பாலசுப்பிரமணியத்திடம் இருந்து பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் ஏராளமான தொகையைப் பெற்று மோசடி செய்தார். இந்த தொகை பாலசுப்பிரமணியத்தின் வங்கி கணக்கில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்ட பலரது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். மத்திய அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி கிளையில் உள்ள முதலீட்டுத் தொகை ரூ.13 கோடியே 22 லட்சத்து 99 ஆயிரத்தை முடக்கி வைத்து அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் உத்தரவிட்டார்.
கனரா வங்கி மனு: இந்த வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.13.22 கோடியை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரி கனரா வங்கி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேல் முறையீட்டு மனு தாக்கல்: இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.ரமேஷ், இந்தத் தொகை தொடர்பான வழக்கு, அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தொகையை வழங்க வங்கி நிர்வாகம் கோர முடியாது என்றார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார்.
நீதிபதி உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சமீபத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் சட்டப் பிரிவு 8- இல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வங்கியின் மனுவை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறேன். முடக்கி வைக்கப்பட்டுள்ள தொகையை கோரி கீழமை நீதிமன்றத்தை கனரா வங்கி நிர்வாகம் அணுகலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் புதிய மனு மீது, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டப் பிரிவின் கீழ் பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்றார் நீதிபதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com