இந்தியா - பாகிஸ்தான் இடையே ரூ.2.7 லட்சம் கோடிக்கு வர்த்தக வாய்ப்பு: உலக வங்கி அறிக்கையில் தகவல்

இந்தியாவும், பாகிஸ்தானுக்கும் தங்களுக்குள் உள்ள மோதல் போக்கை கைவிட்டு நேரடியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டால் இரு நாடுகள் இடையே


இந்தியாவும், பாகிஸ்தானுக்கும் தங்களுக்குள் உள்ள மோதல் போக்கை கைவிட்டு நேரடியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டால் இரு நாடுகள் இடையே ரூ.2.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே இப்போது முறையாக வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாததால் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் மூன்றாவது நாடு வழியாக, முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம் மூலமாகவே பல பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.
தெற்காசிய நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தகம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் பெரிதாக உள்ளது. இரு நாடுகள் இடையே முறையான வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லை. அதனை மேற்கொள்ளவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. இரு நாடுகள் இடையே அரசியல்ரீதியாக நிலவி வரும் மோதல்போக்கும், எல்லையில் நீடித்து வரும் பதற்றமும்தான் இதற்கு காரணம்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து 963 பொருள்களை இறக்குமதி செய்ய 17.9 சதவீத வரியை பாகிஸ்தான் விதிக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் இருந்து 64 பொருள்களுக்கு 11.7 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. எனினும், இந்தியா- இலங்கை இடையே தனிப்பட்ட முறையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், இரு நாடுகளின் வர்த்தக உறவில் பெரிய பாதிப்பு இல்லை.
உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்த பிறகு கடந்த 1996-ஆம் ஆண்டில், வர்த்தகம் செய்ய உகந்த நாடு என்ற தகுதியை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. இதன் மூலம் இந்தியாவிடம் இருந்து சில பொருள்களை குறைந்த வரியில் இறக்குமதி செய்து கொள்ள பாகிஸ்தானுக்கு வழி ஏற்பட்டது. அதே நேரத்தில் வர்த்தகம் செய்ய உகந்த நாடு எந்த அந்தஸ்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளிக்கவில்லை.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக 138 பொருள்களை மட்டும் தரை வழியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள பாகிஸ்தான் அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் 1,209 பொருள்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. எனினும், இதில் பல பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மூன்றாவது நாடுகள் மூலம் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் மறைமுகமாக இறக்குமதி செய்து கொள்கிறது. இந்தப் பிரச்னைகள் அனைத்தும் நீக்கப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் இடையே ரூ.2.7 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தக வாய்ப்புகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com