இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.


இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் கூறியதாவது:
இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஏதுவாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடிதம் எழுதினார். அதை இந்தியா ஒரு நாள் ஏற்றது; மற்றொரு நாள் நிராகரித்தது. பாகிஸ்தான் தொடர்பாக இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை. இருதரப்பு உறவுகள் தொடர்பாக தெளிவில்லாத கொள்கையும், குழப்பமுமே இந்தியாவிடம் உள்ளது. ஆதலால் பேச்சுவார்த்தை குறித்து இந்தியாதான் இனிமேல் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், அந்நாடுதான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
அதேநேரத்தில், இந்தியா தொடர்பாக பாகிஸ்தானிடம் தெளிவான கொள்கை உள்ளது. அதைத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் தரப்பில் கர்தார்பூர் திட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராவி நதி மீது பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி, அடிப்படை முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளின்கீழ் அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டார். பிறகு கட்டாயப்படுத்தி அவரிடம் இந்திய அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த திரையுலக நட்சத்திரங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் கலாசார மற்றும் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பும் இந்திய பிரஜைகளுக்கு எங்கள் நாடு தொடர்ந்து விசா அளித்து வருகிறது.
இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு கடினமாக உள்ளது. ஆதலால் இந்தியாவுடனான பல்வேறு பிரச்னைகளுக்கும் விரைந்து தீர்வு காண முடிவதில்லை. இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து தனது முயற்சிகளை செய்து வருகிறது என்றார் முகம்மது பைசல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com