நேபாளத்தில் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சிக்குத் தடை

நேபாளத்தில் ரூ.2,000, ரூ.500, ரூ.200 ஆகிய மதிப்பிலான இந்திய கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு மத்திய


நேபாளத்தில் ரூ.2,000, ரூ.500, ரூ.200 ஆகிய மதிப்பிலான இந்திய கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி தடை விதித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கியின் இந்த தடை உத்தரவு, இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுதொடர்பாக, காத்மாண்டு போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளும், வர்த்தகர்களும், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சி நோட்டுகளை வைத்திருக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் நேபாள ராஷ்டிர வங்கி தடை விதித்துள்ளது. இதனால், அவர்கள், ரூ.200, ரூ.500, ரூ.2,000 ஆகிய மதிப்பிலான இந்திய கரன்சிகளைப் பயன்படுத்த முடியாது. இந்த புதிய கட்டுப்பாட்டின்படி, நேபாள குடிமக்களும் இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியாவைத் தவிர வேறு நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாது. எனினும், ரூ.100 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள இந்திய கரன்சிகளை பொதுமக்களும், வர்த்தகர்களும் பயன்படுத்தலாம் என்று அந்த வங்கி ஞாயிற்றுக்கிழமை சுற்றறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடுவதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அந்த நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தடை உத்தரவுக்கு பயண ஏற்பாட்டாளர்களும், வர்த்தகர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வரும் 2020-ஆம் ஆண்டில் சுமார் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக, நேபாளத்துக்கு வாருங்கள் என்ற தலைப்பில் நேபாள அரசு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்திருப்பது, சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயண ஏற்பாட்டாளர்களும், வர்த்தகர்களும் கூறியுள்ளனர். மேலும், இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் இருந்து நேபாளத்துக்கு வருவோர், இந்திய கரன்சிகளை டாலர் அல்லது யூரோவாக மாற்றுவதற்கு சிரமப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com