தெலுங்குதேச எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்: சில மணி நேரத்திலேயே ஒய்எஸ்ஆர்.காங்கிரஸில் ஐக்கியம்

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மல்லிகார்ஜுன ரெட்டியை, அக்கட்சியின் தலைவர்

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மல்லிகார்ஜுன ரெட்டியை, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 
அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று தனது எம்எல்ஏ பதவியையும் மல்லிகார்ஜுன ரெட்டி ராஜிநாமா செய்தார். தனது, ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் கொடலா சிவபிரசாத ராவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் விலகுவதாக மல்லிகார்ஜுன ரெட்டி கடிதம் அனுப்பி வைத்தார். 
ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் மல்லிகார்ஜுன ரெட்டி இணையும் விழா ஜன.31ஆம் தேதி முறைப்படி நடைபெறும் என ஹைதராபாதில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லிகார்ஜுன ரெட்டி. 
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை ராஜம்பேட்டையில் கட்சி தொண்டர்களை சந்தித்து அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு விவாதித்தார். அதன் பிறகே, மல்லிகார்ஜுன ரெட்டியை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்வதாக சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். 
கட்சியின் தொண்டர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததுடன், கட்சி விரோத செயலிலும் ஈடுபட்டு வந்ததால் கட்சியில் நீடிக்கும் தகுதியை மல்லிகார்ஜுன ரெட்டி இழந்து விட்டதாகவும், இதன் காரணமாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.
ஒய்எஸ்ஆர். காங்கிரஸில் அவர் இணையப்போவதாக வெளியான தகவலையடுத்தே, மல்லிகார்ஜுன ரெட்டியை கட்சியில் இருந்து விலக்கியதாக கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com