பயங்கரவாதிகளைக் கண்டறிய ராஜபாதையில் நவீனரக கேமராக்கள்!

தில்லியில் குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதை பகுதியில் முக அடையாளத்தை அங்கீகரிக்கும் நவீன ரக தொழில்நுட்ப வசதியுடைய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
பயங்கரவாதிகளைக் கண்டறிய ராஜபாதையில் நவீனரக கேமராக்கள்!

தில்லியில் குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதை பகுதியில் முக அடையாளத்தை அங்கீகரிக்கும் நவீன ரக தொழில்நுட்ப வசதியுடைய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதல்முறையாக நிறுவப்பட்டுள்ள இந்த கேமராக்களின் மூலம் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

தில்லியின் மையப் பகுதியான ராஜபாதையில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா முப்படைகளின் அணிவகுப்பு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான முக்கியப் பிரமுகர்கள், அரசுப் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பது வழக்கம். குடியரசுத் தலைவர் மாளிகைப் பகுதி அருகே தொடங்கி ராஜபாதை வழியாக முப்படைகளின் ராணுவ பலத்தை பறைசாற்றும் ராணுவ அணிவகுப்பு, பல்வேறு துறைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறும்.

இதையொட்டி, ராஜபாதை பகுதியில் இருந்து செங்கோட்டை வரையிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் பகுதியில் பல அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.  இதனிடையே, குடியரசு தின விழா நடைபெறும் பகுதிக்குள் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் நுழையாமல் தடுக்கும் வகையில், நவீன கண்காணிப்பு சாதனங்களை தில்லி காவல்துறையினர் நிறுவியுள்ளனர். அதன்படி, ராஜபாதை மற்றும் பிரதமர் வந்து செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதியடைய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கேமராக்களில் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் புகைப்படங்கள் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதுகாக்கப்பட்ட பகுதி, விழா நடைபெறும் பகுதி ஆகியவற்றில் தீவிரவாதிகளோ, சமூகவிரோதிகளோ பிரவேசித்தால் ஏற்கெனவே கேமராக்களில் பதிவான புகைப்படக் காட்சிகளின் மூலம் அவர்களின் முகம் சரிபார்க்கப்படும். அவற்றில் 76 சதவீதத்துக்கு மேல் ஒத்துப் போவதாக இருந்தால், அதுகுறித்த விவரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்படும். அங்கு பணியில் உள்ள காவல் துறையின் குற்றப்பிரிவு, உளவுப் பிரிவு போலீஸார் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com