கொலீஜியம் அமைப்பில் மாற்றம் தேவை: ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுர் கருத்து

நீதிபதிகளை நியமனம் செய்யும் நீதிபதிகள் தேர்வுக் குழு அமைப்பில் (கொலீஜியம்) மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகுர் கூறியுள்ளார்.
கொலீஜியம் அமைப்பில் மாற்றம் தேவை: ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுர் கருத்து


நீதிபதிகளை நியமனம் செய்யும் நீதிபதிகள் தேர்வுக் குழு அமைப்பில் (கொலீஜியம்) மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகுர் கூறியுள்ளார்.
மேலும், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, கடந்த மாதம் 12-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் வெளியிடாதது அதிருப்தியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நீதிபதிகள் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்த மதன் பி.லோகுர், கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில், நீதிபதிகள் பிரதீப் நந்திராஜோக், ராஜேந்திர மேனன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெற்றார். 
அதன் பிறகு, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியான சஞ்சீவ் கன்னாவும், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான தினேஷ் மகேஸ்வரியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இதனால், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், இந்திய நீதித்துறையின் நிலை என்ற தலைப்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதன் பி.லோகுர் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற நீதிபதிகள் தேர்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நான் ஓய்வுபெற்ற பிறகு கூடுதலாக எந்தெந்த ஆவணங்கள் தேர்வுக் குழுவுக்கு வந்தன என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதற்காக, நீதிபதிகள் தேர்வுக் குழு அமைப்பு தோற்றுவிட்டதாக நான் கருதவில்லை. நீதித் துறையில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் போக்கு இல்லை. நீதிபதிகள் தேர்வுக் குழுக் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்களும், எதிர்க் கருத்துகளை முன்வைப்பதும் நடைபெறும். அவை அனைத்தும் ரகசியம் காக்கப்பட வேண்டியவை.
ஒருவரை நீதிபதியாக நியமிக்குமாறு பரிந்துரைத்த பிறகு குறிப்பிட்ட கால வரம்புக்குள் அவர் நியமனம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால் தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருத முடியும்.
நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு தேர்வுக் குழு பரிந்துரை செய்த பிறகு, அதுதொடர்பாக அரசு எந்த முடிவையும் தெரிவிக்காமல் மாதக்கணக்கில் காலம் தாழ்த்தி வந்தது. நீதிபதிகள் நியமனத்தில் அரசோ, நீதித் துறையோ காலம் தாழ்த்த முடியாது.
அண்மையில் நிகழ்ச்சியொன்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவ்வாறு சந்திப்பதில் தவறேதுமில்லை. எனினும், நீதிபதிகள் அரசியல் வளையத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும். 
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நான், தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்பட 4 நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தினோம். அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தது. அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டது. நீதித்துறை மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com