மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தியது பாகிஸ்தான்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.


மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல்வழியாக ஊடுருவி பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் எஃப்ஐஏ அமைப்பு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதன்மீது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒரு வாரம் நிறுத்திக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. சாட்சிகள் 19 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அரசு வழக்குரைஞர் சம்மன் அனுப்ப ஏதுவாக இந்த அனுமதியை வழங்கியது. விசாரணையின்போது எஃப்ஐஏ சார்பில் வழக்குரைஞர் அக்ரம் குரேஷி ஆஜரானார். அப்போது நீதிபதி அமீர் ஃபரூக், சாட்சிகள் பலர் இன்னமும் ஆஜர்படுத்தப்படாதது குறித்து கேள்வியெழுப்பினர். இதற்கு அக்ரம் குரேஷி பதிலளிக்கையில், சாட்சிகள் பலரை தேடி கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றார்.
நீதிபதி அமீர் ஃபரூக், விசாரணை நீதிமன்றத்தில் அடுத்து வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் எனக் கேட்டார். இதற்கு புதன்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தெரிவித்து, அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார். இதையேற்றுக் கொண்டு, தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு ஒரு வாரகாலம் இடைக்காலத் தடை விதித்து நீதிபதி அமீர் ஃபரூக் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com