ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற பரிசீலனை

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தேசிய தாழ்த்தப்பட்டோர்  ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் முன்னிலை வகித்தார்.  பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தைப் பொருத்தவரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வழக்குகளுக்குத் தீர்வு தொகையாக ரூ.8,25,000 வழங்கப்படுகிறது. இதைத் தவிர, இதர சலுகைகள் சில இடங்களில் கொடுக்கப்பட்டும்,  சில இடங்களில் இவற்றை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதர சலுகைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களுடைய வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிக்கேற்ப 3 மாதத்துக்குள் அரசு வேலை வழங்க வேண்டும் என்பது அரசு ஆணையின்படி உள்ளது.

வாரிசுதாரர்களுக்கு கல்வி,  வீடு,  நிலம் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்பதும் புது விதியில் உள்ளது.  சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 7 இறப்பு சம்பவங்கள் உள்ளன.  

இந்த 7 சம்பவங்களுக்கும் ரூ. 8,25,000 தீர்வுத் தொகையானது வழங்கப்பட்டு விட்டது. சிலவற்றில் 3 சம்பவங்கள் 2016-க்குப் பிறகு நடந்திருப்பதால்,  புது விதியின் அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை வேண்டி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விதியைத் தவிர்த்து,  கையால் கழிவுகளை அள்ளும் விதியின்படி சேலம் மாவட்டத்தைப் பொருத்த வரையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 

ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் நகர்ப்புறகளில் வசிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளையும் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com