கோவா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றதையடுத்து அம்மாநில சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  
கோவா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு


கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றதையடுத்து அம்மாநில சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  

கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதையடுத்து, அம்மாநிலத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது குறித்து பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, அம்மாநிலத்தின் சபாநாயகரான பிரமோத் சாவந்த் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணிக்கு அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். 

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவை முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு, பாஜக உறுப்பினர் பிரான்சிஸ் டி'சௌஸா மறைவு மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே ஆகியோரது ராஜிநாமாவை தொடர்ந்து 36 ஆக குறைந்தது. 

இதில், பாஜக 12 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான கோவா முன்னேற்றக் கட்சி (ஜிஎஃப்பி) மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) தலா 3 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேர் உள்ளனர். எனவே, இந்த கூட்டணியின் மூலம், பாஜக தலைமையிலான ஆட்சி மொத்தம் 21 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 

காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக 14 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதுபோக, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் உள்ளார். 

இந்த நிலையில், புதிய முதல்வராக பதவியேற்ற பிரமோத் சாவந்த் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு அம்மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாகவும் பிரமோத் சாவந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.      

இந்நிலையில், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா அம்மாநில சட்டப்பேரவையை நாளை காலை 11.30 மணிக்கு கூட்டியுள்ளார். 

இந்த கூட்டத்தின் போது, முதல்வர் பிரமோத் சாவந்த் கோரிக்கையின்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி உரிமை கோரியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com