லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்

ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்


ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) துணை ராணுவப் படையின் முன்னாள் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின், மகேந்திர சிங், இந்திரஜித் பிரசாத் கெளதம் ஆகியோர் லோக் பால் அமைப்பின் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பிரதீப் குமார் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாடி ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளர். 
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு தெரிவு செய்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
லோக்பால் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள், பதவியேற்கும் நாளில் இருந்து அவர்களது நியமனம் நடைமுறைக்கு வரும். 
66 வயதாகும் நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2017 ஜூன் 29 முதல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லோக்பால் தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்தார். அவர் பங்கேற்காத கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு நியமனங்கள் நடைபெற்றுள்ளது அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
முன்னதாக, லோக்பால் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது, பிப்ரவரி மாத இறுதிக்குள் லோக்பால் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு விரைவில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, லோக்பால் நியமனப் பணிகள் வேகமெடுத்தன.
 லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரை ஆகும். லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். லோக்பால் உறுப்பினருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு உரிய ஊதியம் உண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com