18. உங்கள் குலதெய்வத்தின் அருள் வேண்டுமா?  

நம் தேவைகள் அனைத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது குலதெய்வ வழிபாடு என்பதை மறந்து விடாதீர்கள் என்று சென்ற வாரத்தில் பார்த்தோம்.
18. உங்கள் குலதெய்வத்தின் அருள் வேண்டுமா?  

நம் தேவைகள் அனைத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது குலதெய்வ வழிபாடு என்பதை மறந்து விடாதீர்கள் என்று சென்ற வாரத்தில் பார்த்தோம்.

ஆனால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு குலதெய்வமும் ஆகும்.

திசைகள் நான்கு. அதற்குள்தான் எட்டு எட்டுப் பதினாறு திசைகளும் அடங்கியிருக்கின்றன. .

மாதா பிதா குரு தெய்வம் என்ற நால்வருக்குள்தான் குலதெய்வமோ, உற்றாரோ, உறவினரோ, நண்பர்களோ, பட்டமோ, படிப்போ, பதவியோ எதுவானாலும் அடங்கும்.

ஒரு மனிதனுக்கு இந்த நால்வரைத் தாண்டி யாரும் வந்து உதவிட முடியாது. அது ஒரு சத்தியம். அது ஒரு காப்பு. அது ஒரு கட்டுப்பாடு!

அந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து கருணை காட்டி அரவணைப்பதுதான் குலதெய்வம். 

மாதா,பிதா,குரு,தெய்வத்தின்  ஒன்று கூடிய வடிவம்தான் குலதெய்வம்.

குலதெய்வ வழிபாடின்றி எந்தத் தெய்வ வழிபாடும் உதவ முடியாது என்பது ஐதீகம்!

ஏனென்றால் பரம்பொருள் என்ற பெரிய தெய்வத்தையே அழைத்து வந்து நம்மிடம் சேர்ப்பிப்பது நம்முடையக் குலதெய்வக் கடவுளே!

நமக்காக நம் தேவைகளைத் தேடிக் கொண்டு அலையும் தாய் போன்றது நம் குலதெய்வம்.

*

தாயின் தேடுதல்

என் தாயும் ஒருநாள் என் தேவைக்காக அலைந்தாள்.  அவளால் என் தேவையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் காலம் கடந்து நான் தேடியதை எனக்குக் காட்டியது என் குலதெய்வம் என்றால் மிகையாகாது!

நான் சிறுவனாக இருந்தபோது-

வசதியான குடும்பம் என்பதால் எனக்கு நிறைய பிளாஸ்டிக், ரப்பர், இரும்பு பொம்மைகளை வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.

அப்போது எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் எங்கள் தெருவழியாகச் சென்ற ஒரு ஏழைத் தாயின் இடுப்பிலிருந்த குழந்தை கையில்  ஒரு அழகான மண் குதிரைப் பொம்மையை வைத்திருந்தது.

அதன் வடிவமே என்னைக் கவர்ந்தது! அய்யனார் கோயில்களில் நிற்பது போன்று செம்மண் நிறத்தில் மண்ணால் ஆன பொம்மைக் குதிரை அது!  அதன் மேல் வெள்ளை மற்றும் சிவப்பு வர்ணங்கள் பூசப்பட்டிருந்தன. குதிரையின் வாய்ப் பகுதி திறந்து பற்கள் தெரிந்தன. அதன் பிடரியும் வாலும் வீராவேசத்துடன் நிமிர்ந்து இருந்தன! கழுத்தில் மணிமாலை அணிந்திருந்தது. காதுகள் இரண்டும் துருத்திக் கொண்டிருந்தன. நான்கு கால்களையும் அகற்றியபடி நின்று கொண்டிருந்தது!

இவற்றை இன்றைக்கு இவ்வளவு அழகாக விளக்குகிறேன். ஆனால் அன்றைக்கு என் தாயாரிடம் எனக்கு விளக்கத் தெரியவில்லை. அது ஒரு மண் பொம்மை என்பதைக் கூடக் கண்டறியத் தெரியாத குழந்தைப் பருவம் எனக்கு.

பார்த்த மாத்திரத்திலேயே அந்தப் பொம்மை என் பிஞ்சு மனத்தை என்னவோ செய்தது! அதை வாங்கி அதன் கலை நயத்தைப் பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டது என் உள் மனது.

உடனே அந்தப் பொம்மையை வாங்கியாக வேண்டும். என் தாயாரிடம் ஓடிப் போய் அந்தப் பொம்மையைப் பற்றிச் சொல்லி எனக்கும் ஒன்று வாங்கித் தருமாறு அடம் பிடித்தேன்.

தாயாருக்கு அது என்ன பொம்மை என்று தெரியவில்லை. தெருவில் போய் வரும் பெண்களை எல்லாம் பார்த்துக் கேட்டார். ஒருவருக்கும் தெரியவில்லை.

என்னைக் கடைத் தெருவுக்குத் தூக்கிச் சென்று எத்தனையோ பிளாஸ்டிக் பொம்மைகளைக் காட்டினார். எதுவுமே அது போன்று இல்லை!

“இல்லாத பொம்மையைக் கேட்டா எங்கடா போவேன்-” என்று சொல்லி என்   முதுகில் இரண்டு தட்டுத் தட்டி வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். 

கடைத் தெரு வரைப் போன தாய், கோயில் தெருவுக்கும் போயிருந்தால் அந்தப் பொம்மைகளைப் பார்த்திருப்பாள்!

“முன்னப்பின்ன செத்திருந்தால்தானே  சுடுகாடு தெரியும்” என்ற பழமொழி உண்டு.

கோயில் குளம் என்று போயிருந்தால்தானே பொம்மைக் கடைகள் தெரிந்திருக்கும்.  திருவிழாக்களுக்கே போகக்கூடாது என்ற நாத்திகத் தகப்பனாரின் உத்தரவால் வீட்டோடு முடங்கிக் கிடந்தார் என் தாயார்.

நாங்களும்தான்!

இரவெல்லாம் அழுது கொண்டே படுத்திருந்தேன். வீடு, வாசல், கார் வசதிகள் எல்லாம் இருந்தன. ஆனால் தெருவில் பார்த்த ஒரு ஏழைக் குழந்தை வைத்திருந்த மண் பொம்மை மட்டும் என் மனக்கண்ணைவிட்டு அகலவில்லை. அது கைகளுக்கும் கிடைக்கவில்லை!

திருவிழாவும்  முடிந்தது. 

வருடங்கள் உருண்டன.

வளர்ந்து இளைஞனானேன்.

ஆனாலும் அந்த குதிரைப் பொம்மை என் ஆழ் மனதில் உட்கார்ந்து கொண்டு “பொம்மலாட்டம்” நடத்தியது.

பொம்மைக் குதிரை உண்மைக் குதிரையாகி  உள்ளத்துள்ளே அடங்காமல் துள்ள ஆரம்பித்தது.

*

இதற்கிடையில் எனக்குச் சிறகு முளைத்தது.

அதனால் திருவிழாக்களுக்குச் சுதந்திரமாகப் போக ஆரம்பித்தேன்.

நண்பர்களோடு போய்க் கொண்டிருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.

என்ன ஆச்சரியம்!

என் மனதை அரித்துக் கொண்டிருந்த மண் குதிரை!

குழந்தையாக இருந்த போது கண்டு ஆசைப்பட்ட அதே மண் குதிரைப் பொம்மை!

ஒரு வியாபாரி சாக்கினை விரித்து அதன்  மேல் வரிசையாக அந்த மண் குதிரைகளை நிறத்தி வைத்திருந்தார்.

குழந்தைப் பருவத்தில் பார்த்துவிட்டு, பார்க்கமுடியாமல் ஏங்கி ஏங்கித் தவித்து, கேட்டுக் கேட்டுத் துடித்து, அழுது அழுது அடம் பிடித்துக் கடைசிவரைக் கிõணக் கிடைக்காமலே போன  திருவிழாப் பொம்மை, இப்போது என் எதிரில்!

ஆனால் நானோ வளர்ந்த இளைஞன்!

பொங்கி வழிந்தப் பேரின்பம் என் கண்களைக் குளமாக்கியது.

கடையின் முன்னால் சிறுபிள்ளை போலக் குத்திட்டு அமர்ந்து குதிரைப் பொம்மைகளைத் தொட்டுத் தடவிப் பார்த்தேன். மெல்லத் தூக்கி முத்தமிட்டேன். செம்மண் சாந்தும் சுண்ணாம்புச் சாந்தும் பூசப்பட்டுத் துலங்கிய நாட்டுக் குதிரையின் மண் வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தேன்!

சுகத்தில் கண்களை மூடிவிட்டேன்.

வேணுமாப்பா? என்றார் வியாபாரி.

எவ்வளவு?

நாலணா!

அப்படியென்றால் நான் குழந்தையாக இருந்தபோது ஐந்து நயாப் பைசாதான் இருந்திருக்கும்!

ஐம்பது ரூபாய்க்குப் பொம்மை வாங்கித் தந்த பெற்றோரால் ஐந்து பைசாவுக்கு ஆசைப்பட்ட பொம்மை வாங்கித் தரமுடியவில்லை!

அதுதான் விதி!

அதுவும் விதி!!

திருவிழாக்களில் மட்டும்தான் அந்தப் பொம்மை கிடைக்கும் என்ற உண்மை அப்போது  எனக்கும் தெரியாது. என் தாயாருக்கும் தெரியாது.

நான் ஆசைப்பட்டதை வாங்கித் தராமலே போன தாயாரிடம் போய் இனி அதைக்  காட்டவும் முடியாது.

இப்போது அவர் இல்லை!

வாங்கி விடலாமே என்று  காசை எடுத்தபோது நண்பர்கள் ஓ..வென்று சிரித்தார்கள்.

“நீ என்னச் சின்னப் பிள்ளையாடா எழுந்து வாடா” என்று என் காலரைப் பிடித்து இழுத்துத் திருவிழாக் கூட்டத்துக்குள் தள்ளிக் கொண்டு போனார்கள்.

அந்தக் காலத்தில் அழகான பெண்களைத்  திருவிழாக் கூட்டத்தில்தான் பார்க்க முடியும். “தள்ளுமுள்ளு”ஏற்படும்போது  மட்டுமே  தவிர்க்க முடியாமல் அவர்களைத் தீண்டிப் பார்த்துக்கொள்ள முடியும்.

“மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது” என்பார்கள்.

நண்பர்கள் “பெண் குதிரை”களை நம்பிக் குஷியோடு கூட்டத்திற்குள் புகுந்தார்கள்.  நானோ “கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மண் குதிரை”ச் சோகத்தோடு அவர்களுக்குப் பின் சென்றேன்!

உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த மண்பொம்மை மர்மத்தை காலம் கடந்து  எனக்குத் திருவிழாவில் காட்டியது என் குலதெய்வமாகத்தானே இருக்க முடியும்!

எப்படியோ என் மனக்குறை அன்றோடு போயிற்று!

*

மாணிக்க வாசகருக்கு “பரிகளை நரிகளாக்கி தன்னைக் காட்டிய சிவன், எனக்கும் மண் குதிரைகளைத் திருவிழாவில் காட்டி மனக்குறைகளைப் போக்கினான்!

தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வருவதே மனிதப் பிறப்பின் மகத்துவம். மனிதனாக இருப்பவன் இறை மனிதனாக மாற வேண்டும் என்பதே குறிக்கோள்.

தோன்றித் தோன்றி மறைந்து போகும் சிற்றின்பத்திலிருந்து  மாறாத மறையாத பேரின்பம் தருவது இறையின்பம். அதுவே பெருநிலை. அந்த  நிலையை மனிதன் இந்தப் பிறவியிலேயே எட்டிவிட்டால் பின்னர் பிறப்பும் இல்லை.

அப்படிப்பட்ட இறை மனிதர்களாக வாழ்ந்தவர்களே  குலதெய்வங்களாகப் போற்றப்பட்டார்கள்.  நம்முடைய மூதாதையர்க்கு  மூதாதையர்களில்  யாரோ  இறை மனிதனாக வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் தமக்கும் பிறருக்கும் நன்மைகள் செய்து இறைத்துவம் பெற்றிருப்பார்கள்.

அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே அவர்களுக்குப் பின் வந்தோர்  நினைவு மண்டபம் எழுப்பி வழிபட்டிருப்பார்கள்.

இப்படித் தலை முறை தலைமுறையாக வழிபடுவோரே  குல தெய்வ பூசைகளைத் தவறாது கடைப்பிடித்து வருகிறார்கள்.

முன்னோரது ஆத்மாக்களே  குலதெய்வங்களாகி வணங்குவோருக்கு வரங்களை த் தருகின்றன..

இந்தக் குலதெய்வ வழிபாடு அமெரிக்க  அரேபிய மதங்களில் இல்லை!

இது ஒரு தோத்திர மரபு. இது ஒரு சாத்திர மரபு. இதை மதங்களின் பெயரால் மாற்றவோ  மறுக்கவோ முடியாது. இதற்குள்தான் மானிடத்தின் மகத்துவங்கள் மறைந்துள்ளன.

தேடிச் சென்று வழிபடுவோருக்கு குலதெய்வங்களின் வழியே பரம்பொருளான பெருங்கடவுள் தனது  கருவூலங்களைத் திறந்து வைக்கிறது!

இந்த வரம் குலதெய்வத்தை அறியாதவர்களுக்கோ, அறிந்தும்  தவறவிட்டவர்களுக்கோ கிடையாது.

அதனால்தான் அவர்கள் உடல் மனம் மற்றும் உலகத் தொடர்புகள் சார்ந்த பல்வேறு இடர்ப்பாடுகள் சோதனைகளுக்குப் பலியாகிறார்கள்!

இன்னும் சொல்லப் போனால் குலதெய்வங்கள் நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக  வாழ்ந்த பெரியோர்களின் வழிபாடுகளேயன்றி வேறில்லை. 

எல்லோருமே வளம்நலம் பெறவேண்டும் என்ற பரோபகாரச் சிந்தனையே குலதெய்வ வழிபாட்டின் அடிநாதம்.

வாழையடி வாழையாக  வழிபடுவோர்  தமக்கும் மற்றவர்களுக்கும் பயன் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அதனால்தான் அவ்வழிபாடுகளில்  அன்னதானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தத்தமது குடும்பத்தினர் என்றில்லாமல், அக்கம்பக்கத்தினர்,  வழிப்போக்கர்கள்  அனைவைரையும் அழைத்து அன்னம் பாலிப்பது இவ்வழிபாடுகளின் தலையாய நோக்கமாகும்.

நம் இந்து மதம் அனைத்து மதங்களையும் போற்றும் மதம்.எவரையும் மதமாற்றம் செய்ய விரும்பாத மதம். காரணம் இதற்கு மதம் என்ற வரைமுறை எல்லைக் கோடுகள் ஏதும் இல்லை. இருந்தால்தானே மாற்றுவதற்கும், மாறுவதற்கும்? 

அண்டை நாட்டு மதங்கள் தத்தமது மதங்களை வளர்க்க விரும்புகின்றன. வர்ணமும், விதிமுறைகளும் வேதங்களும் வைத்துள்ளன.

நாம் அனைவரையும் மதிப்போம். நமக்குத் தேவை மனித உறவு. அன்பு.

இதுதான் மதமில்லாத மதம். இறைவன் ஒருபோதும் மதங்களுக்குக் கட்டுப்படாதவன். அவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுபவன்.

அதனால் அன்றே சொன்னார் நம் திருமூலர் “அன்பே சிவம்” என்று!

*

சிறந்த இறை நெறி எது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று  கேட்டார் ஒரு நண்பர்.

வாழ்க்கை என்பது அனுபவத் தொகுப்பு.

அவரவர் அனுவங்கள் அவரவர் வினை வழி விளைவுகள்.

மனிதனுக்கு அனுபவங்கள்தான் உண்மைப் பொருளை விளக்கி அவனை தெளிவடையச் செய்கிறது.

துன்ப  அனுபவங்கள் ஒருநாள் இன்பமான விளைவுகளைத் தருகின்றன.

பெரும் துன்ப அனுபவங்கள் ஒருநாள்   பேரின்ப விளைவுகளைத் தருகின்றன.

கடற்கரையில் நின்று கொண்டு சொன்னால்  எவரெஸ்ட் சிகரம்  எட்டாயிரத்து எட்டு நூற்று நாற்பத்து எட்டு மீட்டர்கள் உயரம் கொண்டது என்கிறோம்.

அச்சிகரத்தின் உச்சியில் நின்று கொண்டு சொன்னால் இங்கிருந்து கடல் மட்டம் எட்டாயிரத்து எட்டு நூற்று நாற்பத்து எட்டு மீட்டர்கள் கீழே இருக்கிறது என்கிறோம்.

உயரத்தைப் பேரின்பம் என்றால் பள்ளத்தை பெருந்துன்பம் எனலாம்.

சிவ நெறியே சிறந்த நெறி என்று சொல்வதற்கு அனுபவங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்! மற்றவர்களால் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com