9. ஏபி டிவில்லியர்ஸ் கடைபிடிக்கும் பிரத்யேக ஸ்டைல் எது தெரியுமா?

டிவில்லியர்ஸ் கவனமாக, அடையாளத்துக்காக ஒவ்வொரு பேட்டின் கைப்பிடியிலும் 1,2,3,4 என எண்களை குறிப்பிட்டிருப்பார்.  
9. ஏபி டிவில்லியர்ஸ் கடைபிடிக்கும் பிரத்யேக ஸ்டைல் எது தெரியுமா?

ஏபி டிவில்லியர்ஸ் பொதுவாக எப்போதும் தன்னுடன் நான்கைந்து பேட்டுகளை வைத்திருப்பார். ஒவ்வொரு போட்டித் துவங்கும் முன்பாகவும், அவைகளை ஒவ்வொன்றாக பரிசோதித்து சரியான பேட்டினை தேர்வு செய்வது அவரது வழக்கம். ஒரு பேட் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கிறதென்றால், அதனை உடையும் வரையில் தொடர்ச்சியாக பயன்படுத்துவது அவரது ஸ்டைல். அதே போல, மிகச் சிறந்த தன்மைகளை கொண்ட பேட்டினை வலைப் பயிற்சிகளின் போது தொடவே மாட்டார்.

ஒரு பேட் மிக நீண்ட காலம் பயன் தரக் கூடியதாகவும் இருக்கலாம் அல்லது ஒரே வாரத்தில் உடைந்து சிதைவுக்குள்ளாவதும் நிகழலாம். டிவில்லியர்ஸ் கவனமாக, அடையாளத்துக்காக ஒவ்வொரு பேட்டின் கைப்பிடியிலும் 1,2,3,4 என எண்களை குறிப்பிட்டிருப்பார்.  

போலவே, கூக்காபுரா நிறுவன பேட்டுகளைதான் தனது 16 வயது வயதிலிருந்தே டிவில்லியர்ஸ் பயன்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலிய நிறுவனத்தின் உற்பத்தியான அதனை டிவில்லியர்ஸிடம் பாதுகாப்பாக சேர்க்கும் பொறுப்பினை கிரிஸ் ப்ரயனாட் என்பவர் ஏற்றிருந்தார். பேட் மட்டுமல்லாது, கை கிளவுஸ்கள், கால் பேடுகள், தொடை பேடுகள் என அனைத்தையும் டிவில்லியர்ஸிடம் சேர்க்கும் பொறுப்பு கிரிஸ் ப்ரயனாட் உடையதுதான். மிக உயரிய பண்புகளை கொண்ட அந்த மனிதரின் மீது டிவில்லியர்ஸுக்கு அதீத நம்பிக்கையும், அன்பும் இருந்து வந்தது.

டிவில்லியர்ஸ் ஒவ்வொரு முறை கிரிக்கெட் விளையாட களமிறங்கும் போதும், அவரது இடுப்பு பகுதியில் சிறிய கைக்குட்டை ஒன்று சொருகி இருக்கும். அவரது சுறுசுறுப்பான இயல்புக்கு அந்த கைக்குட்டை மேலும் கூடுதலான வசீகரத்தன்மையை அளிக்கும். ஆனால், எளிதாக உடல் வியர்க்கக் கூடிய இயல்பை கொண்டிருந்த டிவில்லியர்ஸ் கைக்குட்டை இல்லையென்றால், களத்தில் நிதானமாக விளையாட முடியாத சூழல் உண்டாகிவிடும். அந்த சிறிய கைக்குட்டை அவரது மனநிலையை சமன்படுத்தும் மிகப் பெரிய பாத்திரத்தை ஏற்றிருந்தது.

பொதுவாக, தோள்பட்டையில் பேட் (Pad) அணிய விரும்ப மாட்டார். பந்து வீச்சாளரின் முன் தன்னை அது பலவீனமானவனாக காண்பிக்கிறது என்பதாலேயே அதனை பயன்படுத்துவதில்லை என கூறும் டிவில்லியர்ஸ், ஸ்பின் பவுலிங்கின் போது கூட ஹெல்மட்டை கழற்றும் வழக்கமில்லாதவர்.

‘ஏனெனில், மைதானத்தில் பந்து எவ்விதமாக எதிர்வினை புரியும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. மிக குறைவான வேகம் கொண்ட பந்து கூட சட்டென எகிறி என் முகத்தை சேதப்படுத்தி விடும் வாய்ப்பு இருக்கிறது. உண்மையில், ஹெல்மெட் அணியாமல் பேட்டிங் செய்யும் வீரர்களை பார்க்கும் போது, அது அவர்களது துணிச்சலின் வெளிப்பாடு என்ற எண்ணத்தை விட, அது மிக மிக முட்டாள்தனமான செயல் என்றே நான் நினைத்துக்கொள்வேன்’ என்று டிவில்லியர்ஸ் இதனை குறிப்பிடுகிறார்.

டிவில்லியர்ஸ் தனது உடல் நலத்தின் மீது அதிக அக்கறை செலுத்தக் கூடியவர் தான் என்றாலும், சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்ததில் அவரால் தனது உடலை நலத்தை கவனித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. பலமுறை மறுநாள் போட்டியை வைத்துக் கொண்டு முந்தைய இரவில் தூக்கமின்மையால் அவர் தவித்திருக்கிறார். ஒரு சில போட்டிகளில், பேட்டிங்கின் இடைவெளியில் விடப்படுகின்ற உணவு மற்றும் தேனீர் தருணங்களில் லேசாக கண்ணயர்ந்து தூங்கிவிடும் வழக்கமும் டிவில்லியர்ஸுக்கு உண்டு.

தனது 20-வது வயதில் தென் ஆப்பிரிக்க அணிக்காக முதல் டெஸ்ட்டை விளையாடிய டிவில்லியர்ஸ் 34 வயதுக்குள் முழுமையாக ஆற்றலை இழந்து விட்டதாக, ஓய்வு அறிவித்த தினத்தில் கூறியது இத்தகைய காரணங்களால் தான்.

சர்வதேச அளவில், மிகக் குறைந்த பந்துகளில் 50, 100, 150 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை டிவில்லியர்ஸிடம்தான் இருக்கிறது. 2015 உலக கோப்பை தொடரின் பின்பாக, தர வரிசை பட்டியலில் முதல் இடத்தையும் டிவில்லியர்ஸ் பெற்றிருந்தார். உண்மையில், தனக்கு சோர்வாக இருக்கிறது அவர் அறிவித்திருந்தாலும், அவர் ஃபார்ம் இன்னமும் உச்சத்தில்தான் இருந்துக் கொண்டிருக்கிறது.

பல போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால், ரசிகர்களிடத்தில் நினைவலைகளை உருவாக்கி இருக்கும் டிவில்லியர்ஸ் தனது மிகச் சிறந்த இன்னிங்க்ஸ் என கருதுவது, பாகிஸ்தானுக்கு எதிராக 2010-ல் விளையாடிய இரண்டாவது டெஸ் போட்டியைத்தான். அபு தாபியில், நவம்பர் 21-ம் தேதி அந்த போட்டி நடந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் டிவில்லியர்ஸின் வாழ்க்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

அவரது தாயாரின் பிறந்த தினம் அது. டிவில்லியர்ஸின் துடிப்பான இயல்புக்கும், எதிலும் முனைப்புடன் ஈடுபடும் ஆற்றலுக்கும் முக்கிய காரணமாக விளங்குபவர் அவரது தாயார்தான். சிறுவயதில் பலவிதமான விளையாட்டுகளில் டிவில்லியர்ஸ் ஈடுப்பட்டிருந்த போதும், அவரை உற்சாகமூட்டி அவரது திறன்கள் வளர காரணமாக இருந்தவர் அவர்தான்.

அன்றைய போட்டியில், டிவில்லியர்ஸ் தாய் தனக்கு செய்துக் கொடுத்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்த வேண்டுமென முடிவெடுக்கிறார். போட்டித் தொடங்குகிறது. பந்துகளை நாலாபுறமும் விளாசித் தள்ளுகிறார். ரன்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. விரைவாக தனது இரண்டாவது இரட்டை சதத்தை அன்று நிறைவு செய்கிறார். அதோடு, அதுநாள் வரையிலும் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் என்றிருந்த ஸ்மித்தின் 277 ரன்களை கடந்து, புதிய சாதனையை நிகழ்த்துகிறார்.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரன்களை குவித்தவர் என்கின்ற சாதனை டிவில்லியர்ஸுக்கு வந்து சேர்கிறது. இத்தனைக்கும் அன்றைய போட்டியில் அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்மித். விரைந்து போட்டியை டிக்ளேர் செய்யாவிட்டால் எதிரணியினருக்கு சாதகமாக போட்டி போய்விடலாம் என்கின்ற நிலையிலும், தனது சாதனையை டிவில்லியர்ஸ் கடந்துச் செல்ல அனுமதித்தபடி அமைதியுடன் இருந்தார். டிவில்லியர்ஸ் தனது தாயாருக்கு மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசினை அன்றைக்கு அளித்திருந்தார். பின்னாளில், மற்றொரு அசுரத்தனமான தென் ஆப்பிரிக்க ஆட்டக்காரரான ஆம்லாவால் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்றாலும், அன்றைய தினத்தை டிவில்லியர்ஸால் ஒருபோதும் மறக்க முடியாது.     

டிவில்லியர்ஸ் பேட்டிங் அசாதாரணத்தன்மை கொண்டது. அவரைப் போல பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ளக் கூடிய வீரர் சமகாலத்தில் எந்தவொரு கிரிக்கெட் அணியிலும் இல்லை. பந்துகளை விளாசுவதில் பன்முகத்தன்மை கொண்டிருப்பார். இதுதான் அவரது பிரத்யேகமாக ஷாட் என எதையும் அடையாளமாக சொல்ல முடியாதபடி, புதிது புதிதான பேட்டிங் உத்திகளை டிவில்லியர்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் படைத்தபடியே இருந்தார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானான ரிக்கி பாண்டிக், ‘டிவில்லியர்ஸ் ஒரு லெஜெண்ட்’ என்று வியந்தோதுகிறார்.

டிவில்லியர்ஸின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றான உலக கோப்பை போட்டித் தொடர் 2015ல் நடைப்பெற்றது. அந்த  தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பு டிவில்லியர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. டிவில்லியர்ஸ் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அந்த போட்டித் தொடரை எதிர்ப்பார்த்திருந்தார்.

1999-ம் வருடத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டித் தொடரின், அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் வெற்றிப் பெற தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவையாய் இருந்தது. புகழ் பெற்ற இடதுகை ஆட்டக்காரரான லான்ஸ் க்ளூசினர் களத்தில் நிற்கிறார். எதிர் முனையில் ஆலன் டொனால்ட் இருக்கிறார். முதல் இரண்டு பந்துகளில் க்ளூசினர் பவுண்டரிகளை விலாசிவிட்டார் என்றாலும், அடுத்த பந்தை ரன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார். இதனால் பதற்றம் அதிகரித்தபடியே இருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச்சுக்கு நெருக்கத்தில் வட்டமாக நின்றிருக்கிறார்கள்.

நான்காவது பந்தை க்ளூசினர் விலாசுகிறார். ஆனால், பீல்டர் அதனை தடுத்து விடுகிறார். க்ளூசினர் மறுமுனை ஓடிவிட, டொனால்ட் அங்கேயே நின்று விட்டார். அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. வீட்டு தொலைக்காட்சியில் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ் தனது படுக்கை அறைக்குள் நுழைந்து எவரும் அறியாதபடி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். அன்றையிலிருந்தே டிவில்லியர்ஸுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தென் ஆப்பிரிக்க ரசிகர்களும் தகுதி வாய்ந்த தங்களது தேசம் ஒரு நாள் நிச்சயம் உலக கோப்பையை வென்றே தீரும் என்ற கனவுகளை வளர்த்து கொண்டனர்.

2015 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியை டிவில்லியர்ஸ் தலைமையேற்று முன்னகர்த்தினார். அதீத நம்பிக்கை டிவில்லியர்ஸுக்கு இருந்தது. உலகின் மிகச் சிறந்த அணியான தாங்கள், பல ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கனவை நிஜமாக்கப் போகிறோம் என்று திடமாக நம்பினார். ஒரு சிறிய குறிப்பு புத்தகம் ஒன்றை உருவாக்கி, அதில் ஒவ்வொரு போட்டி முடிவடைந்த உடனும், தங்களது எண்ணத்தை வீரர்கள் பதிவு செய்ய வேண்டுமென சொல்லியிருந்தார். டிவில்லியர்ஸின் உலக கோப்பை கனவு, தோல்வி என்கின்ற எண்ணத்திற்கே இடமளிக்காமல் இருந்தது.

லீக் ஆட்டங்களில் ஒரு சில தோல்விகள் உண்டானது என்றாலும், கால் இறுதியை கடந்து, அரை இறுதிக்கு முன்னேறி இருந்தார்கள். சர்வதேச உலக கோப்பை வரலாற்றிலேயே நாக் அவுட் சுற்றில் தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்ற முதல் போட்டி அதுதான். ஆனால், தென் ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் இந்த தொடரிலும் தொடர்ந்தது. அரை இறுதியில் நியூசிலாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியுற்றது. டிவில்லியர்ஸ் மனமுடைந்து மைதானத்திலேயே கண் கலங்கி அழுதார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள். கிரிக்கெட் வரலாற்றின் உணர்வுபூர்வமாக தருணங்களில் ஒன்றாக அந்த போட்டியின் முடிவு மாறியிருந்தது. அன்றைய தினத்திலேயே டிவில்லியர்ஸின் பல வருட கனவு கலைந்து போனது. தோல்விக்கு பொறுப்பேற்று, தனது கேப்டன் பதவியை துறந்துவிட்டாலும், அணியில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்ச ஃபார்மில் அக்காலத்தில்தான் இருந்தார் என்றாலும், மனதளவில் அப்போதே டிவில்லியர்ஸ் சோர்வுக்குள்ளாகி இருந்தார். இத்தனை வருடங்களில் தான் வெகுவாக இழந்திருந்த குடும்பம் சார்ந்த எண்ணங்கள் அவரது மனதை வதைத்தபடியே இருந்தது. இப்போது அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. நீண்ட தினங்களாகவே தனது ஓய்வு குறித்த எண்ணத்தில் டிவில்லியர்ஸ் ஆழ்ந்திருந்தாலும், தனது ஆட்டத் திறன் வெகுவாக போற்றப்படுகிறது எனும் காரணத்தாலும், தென் ஆப்பிரிக்கா அணி நல்ல நிலையில் இருக்கும்போது, அதிலிருந்து விலக வேண்டும் என்பதால், அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

மே 23, 2018 அதற்கு சரியான நேரமாக அவருக்கு பட்டிருக்கிறது. தனது ஓய்வு முடிவை ஐ.பி.எல் தொடரின் இறுதியில் டிவில்லியர்ஸ் அறிவித்தார்.

டிவில்லியர்ஸ் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா அணி மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டே எப்படி இருக்கப் போகிறது என்ற பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஏனெனில், விவியன் ரிச்சர்ட்ஸின் கூற்றின் படி, கிரிக்கெட் ஆட்ட முறைமையை அடுத்த படி நிலைக்கு உயர்த்திச் சென்றவர் டிவில்லியர்ஸ்.

ஆனால், ஓய்வு என்பது ஒவ்வொரு வீரருக்கும் நிகழக் கூடியதுதான். காலம் முன்னேற முன்னேற புதிதாக ஒரு கிரிக்கெட் வீரர் அவரது இடத்தை இட்டு நிரப்பி விடுவார். சச்சின் இல்லாத இந்தியா என்பதை கற்பனை கூட செய்து  பார்க்க முடியாது என்கின்ற நிலை நிலவியது. ஆனால், சச்சினுக்கு பிறகு, தோனி பெரும் புகழடைந்து இன்று கோலி இந்தியாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா போன்ற அணிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சிறந்த விளையாட்டாளர்கள் கிடைத்தபடியே தானிருக்கிறார். எதிர் வரவிருக்கும் உலக கோப்பை தொடரில், எப்போதும் போல கோப்பையை வெல்லும் முனைப்பு தென் ஆப்பிரிக்க வீரர்களிடம் அதிகமிருக்கும்.

ஆனால், அந்த அணியில் டிவில்லியர்ஸ் இருக்க மாட்டார். தன் போன்ற தென் ஆப்பிரிக்க மக்களின் கனவினை சுமந்துக் கொண்டிருக்கும் இளைய விளையாட்டு வீரர்களின் போட்டியினை தனது காதல் மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் அமர்ந்து, சிறு வயதுகளில் ஆர்வத்துடன் உலக கோப்பை போட்டிகளை பார்த்ததைப் போலவே டிவில்லியர்ஸ் எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்.

சிக்ஸர் பறக்கம்……      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com