அத்தியாயம் - 1

ஒரு குடும்பம், சமுதாயம், நாடு நலம் பெறவேண்டுமானால் ஒவ்வொரு தனிமனிதனும் நற்குணம் பெறவேண்டும்.
அத்தியாயம் - 1

இந்த பூமியின் மீதும், பூமிக்கு மேலும், பூமிக்கு கீழும் இருக்கும் எந்த சக்தியை காட்டிலும் மிக பெரிய சக்தி துடிப்பு மிக்க இளைஞர்களது ஆற்றல்தான் என்று நம்பியவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அப்பேற்பட்ட இளைஞர்கள்தான் இளம் தமிழனின் யுகப்புரட்சி ஜல்லிகட்டு புரட்சியை அமைதியான, ஆற்றல் மிகுந்த புரட்சியாக நம் கலாசார பெருமையை, பண்பாட்டை மீட்டெடுக்க, 7 நாட்கள், இந்த உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்தி காண்பித்தார்கள். இது நம் வாழ்வில் நாம் கண்ட, நாம் நடத்தி காண்பித்த யுகபுரட்சி.

உலகம் முழுவதும் எப்போதெல்லாம் அடக்குமுறையும், சர்வாதிகாரமும், ஆணவமும், ஊழலும், அநியாயமும் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் இளைஞர் சக்தி ஒன்று திரண்டெழுந்து மன்னராட்சியை, சர்வாதிகார சாம்ராஜ்யங்களை வீழ்த்தியிருக்கிறது, புது சாம்ராஜ்யங்களை, ஜனநாயகத்தை தோற்றுவித்து நிலைநிறுத்தியிருக்கிறது, சித்தாந்தங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. புதிய சிந்தனைகள் வடிவம் பெற்றிருக்கிறது. அனைத்தும் ஒரு பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு வடிவங்களாக பரிணமித்திருக்கிறது.

இந்த சரித்திரம் ரத்தம் தோய்ந்த சரித்திரமாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறது, மாபெரும் உயிரிழப்புகளை சாட்சியாக்கிய புரட்சியாகியிருக்கிறது. கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சா முறையில் ஆட்சி மாற்றம் இந்திய சுதந்திரபோராட்டத்தின் மூலம் கிடைத்தாலும், அதற்காக நம் முன்னோர்கள் கொடுத்த ரத்தம், உயிர் அதிகம். உலகில் தோன்றிய இந்த புரட்சிகள் சர்வாதிகாரிகளை, ஜாதியவாதிகளை, இனவாதிகளை, மதவாதிகளை, ஊழல் மன்னர்களை, கேளிக்கை விற்பன்னர்களை, மக்கள் விரோதிகளை, ஆதிக்க எண்ணம் கொண்டவர்களை, அக்கிரமக்காரர்களை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் நாட்டையும், மக்களை நேசிக்கும் நல்ல தலைவர்களையும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களையும் உருவாக்க தவறவில்லை. சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மக்களை சமூக, பொருளாதார மேடுபள்ளங்களில் இருந்து மீட்டு எடுக்கவும், இளைஞர்களை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்தி அவர்களின் அறிவுத்திறனை பயன்படுத்தி நாட்டை வளப்படுத்தி, அதே சமயம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் பயன்பட்டால்தான் அது அந்த நாட்டை வளப்படுத்தும்.

சாதனைகளும், வேதனைகளும் படைப்பது மனிதனின் குணத்தின் வெளிப்பாடாகத்தான் அமைந்திருக்கிறது. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள், ஆனால் நல் குணம் வாய்க்கப்பெற்ற ஒருவனால் மட்டுமே, அந்த குரங்கு மனத்தை கட்டுப்படுத்தி வரன்முறை செய்து, தான் மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ்பவனாக மாறுகிறான். அவனால்தான் இந்த சமுதாயம் பயனடைகிறது.

அலைபாயும் மனதை குணம் மாற்றுகிறது. செம்மைப்படுத்துகிறது, சமநிலைபடுத்துகிறது. ஆனால் அந்த குணத்தை இந்த குரங்கு மனதால் மாற்ற முடியாது. மனமாற்றம் மாற்றத்திற்குட்பட்டது, குணமாற்றம் மாறாத தன்மையுடையது. தாய், தந்தையரை பார்த்து, சுற்றத்தை பார்த்து, சூழ்நிலையை பார்த்து, தனக்குள் நல்லது கெட்டதை ஆராய்ந்து, அறிந்து உருவாகும் குணம் ஒரு வடிவம் பெற்று விட்டால், அந்த குணமாற்றத்தை யாராலும் மாற்ற முடியாது. நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் பின்பு என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று சொல்வது நமது வாழ்வில் நமது குணத்தின் ஆழமான வெளிப்பாடு மற்றும் அதன் தாக்கம் தான்.

பெஸ்டாலஜி என்ற கிரேக்க ஆசிரியர் சொல்கிறார், ‘உன் குழந்தையை 7 ஆண்டுகள் என்னிடம் கொடு, அதன் பின்பு கடவுளாயினும், சாத்தானாகிலும் உன் குழந்தையை மாற்ற முடியாது, அது தான் எனது படிப்பினையின் சக்தி’ என்கிறார். அதாவது 14 வயதிற்குள் தாய், தந்தை, ஆசிரியரை பார்த்து, படித்து, அறிந்து, வியந்து, உள்வாங்கி வளரும் குழந்தைக்கு அமையும் குணம்தான் அந்த குழந்தையின் அடுத்த 60 ஆண்டுகளுக்காக விதைக்கப்பட்ட விதை. எத்தகைய குணம் விதைக்கப்பட்டதோ அத்தகைய பலனைத்தான் அந்த குழந்தையிடம் வளர்ந்த பின் எதிர்பார்க்க முடியும். அதுதான் அவர்களது பல்வேறு வாழ்க்கை நிலைகளில் அவர்களது செயல்களின் வெளிப்பாடாக அமையும்.

எனவே தான் ‘ஒருவனின் பிறப்பு வேண்டுமானால் ஒரு நிகழ்வாக இருக்கலாம், அவனது வாழ்க்கை ஒரு சரித்திரமாக வேண்டும்’ என்றார் அப்துல்கலாம். சரித்திர சாதனை படைக்க அடிப்படை தேவை நற்குணம். நற்குணம் என்பது உள்ளத்தில் அடிப்படையாக அமைந்துள்ள நல்லெண்ணத்தால் வருவது, அதனால் தான் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கீழ்கண்ட வரிகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவார்:

உள்ளத்தில் நல்லெண்ணம் இருந்தால்

உன் உருவத்தில் அழகு மிளிரும்,

உருவம் அழகில் மிளிர்ந்தால்

குடும்பத்தில் சாந்தி நிலவும்,

குடும்பத்தில் சாந்தி நிலவினால்

நாட்டில் நேர்முறை நல்லாட்சி மலரும்,

நாட்டில் நல்லாட்சி மலர்ந்தால்

உலகத்தில் அமைதி நிலவும்.

உலகத்தின் அமைதிக்கு அடிப்படை உள்ளத்தில் நல்லெண்ணம். உள்ளத்தில் நல்லெண்ணம்தான் நற்குணமாக மாறுகிறது. அந்த நற்குணம் எல்லோருக்கும் உருவாகும் சூழ்நிலையை மனித வாழ்க்கை உறுதிப்படுத்தவில்லை. பல்வேறு சூழ்நிலைகளால், பிறக்கும் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள், தாய், தந்தையின் குடும்ப பிரிவால், அவர்களின் தகாத செயல்களால், இயற்கையின் வன்கரத்தால், விபத்துக்களால், தாயோ, தந்தையினது மரணத்தால், தவறான பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் சென்று சேரும் சூழல்தான் அந்த குழந்தைகளின் குணத்தை நிர்ணயிக்கிறது. அப்படியே ஒரு கடினமான சூழலில் வளரும் நிலைமை இருந்தாலும், தரமான கல்வி கற்கும் வாய்ப்பு அதை மாற்ற வேண்டும் என்பதுதான் சரியான கல்வியாக இருக்கும். நமது பள்ளிகளில் ஆசிரியர்கள் நற்கல்வியையும், ஒழுக்கத்தையும், நற்குணத்தையும் அனைத்து வகையான குழந்தைகளின் மனத்தில் எவ்வித வேறுபாடுமின்றி நல்விதையாக விதைத்து, நல்லுதாரணமாக வாழ்ந்து காட்டி, நல்வழிகாட்டி, மணவர்களிம் எவ்வித வேறுபாடுமின்றி நல்குணத்தை உருவாக்கவேண்டும் என்பது தான் நமது முன்னோர்கள், நல்லாசிரியர்கள் நமக்கு விட்டுசென்ற கல்வி கற்று கொடுக்கும் முறையின் தத்துவம்.

நற்குணத்தோடு, நம்பிக்கையோடு, தோல்வி மனப்பான்மைக்கு தோல்வியை கொடுக்கும் தைரியத்தோடு, கனவுகளை லட்சியமாக்கும் தனித்திறனோடு ஒரு குழந்தை வளர வேண்டும் என்பது தான் நமது கல்வியின் அடிப்படை பண்பாக இருக்க வேண்டும். ஒரு கால கட்டத்தில், கல்வியின் பண்பு மாறும் போது, நமது சமூகத்தின் பண்பும் மாறும். சமூகம் மாறினால் நாடும் மாறும். நாடு தனது நல்வழி பாதையில் இருந்து மாறினால், அந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், தான் வாழும் சமூகத்தின் போக்கில் போய் தனது சுயநலத்தை அறுவடை செய்தால் ஒரு நாடு சீக்கிரம் வீழ்ச்சியைதான் சந்திக்கும். ஒரு நல்ல தலைவனால் தான் தன்னை இழந்து, ஒரு கெட்டுப்போன சமூகத்தை மாற்ற முடியும். கெட்ட தலைவனால், தான் சார்ந்த சமூகத்தை வைத்து தனது பிழைப்பைதான் நடத்த முடியும், அவனால் அவன் சார்ந்த சமூகத்திற்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது.

நற்குணம் கொண்ட வலிமைமிக்க தலைவர்கள் கிடைக்கப்பெற்றதால், ஒரு நாடு வளர்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கிறது. துர்குணம் கொண்ட நயவஞ்சக தலைவர்களை பெற்றதால், ஒரு நாடு அழிவின் உச்சத்தை தொட்டிருக்கிறது. தலைவன் எவ்வாறு உருவாகிறான், அவன் ஒரு தனிமனிதனிலிருந்துதான் உருவாகிறான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் குணம் வாய்க்கப்பெற்றால், அவன் நற்குணவான் அல்ல, அவனால் ஒரு நல்ல தலைவனாக பரிணமிக்க முடியாது. சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலனை தனது நலனாக கருதி, நேர்மையோடு, மக்களுக்கு இதய சுத்தியோடு, தொலைநோக்கு பார்வையோடு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்பவனால்தான் நாட்டிற்கு நன்மை விளையும், சமூக பொருளாதார மேடு பள்ளம் இல்லா சமூகம் உருவாகும். எனவே உச்சம் தொட்டவர்களால் நன்மையும் விளைந்திருக்கிறது, தீமையும் விளைந்திருக்கிறது, அது அவர்களது அடிப்படை குணத்தை பொருத்தே அமையும். எனவே ஒரு குடும்பம், சமுதாயம், நாடு நலம் பெறவேண்டுமானால் ஒவ்வொரு தனிமனிதனும் நற்குணம் பெறவேண்டும்.

எனவே நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய தருணம் இது. நம்மை நாமே தீர்க்க அலசி ஆராய்ந்து பார்த்து, கையில் உளியை எடுப்போம், நம்மை ஆக்கிரமித்திருக்கும் தேவையற்ற சிதிலங்களை தகர்த்தெரிந்து நம் ஒவ்வொருக்குள்ளும் மறைந்திருக்கும் அற்புதமான சிலையை வெளிக்கொணர்வோம். போனது போகட்டும், மிச்சமெல்லாம் உச்சம் தொடுவோமா?

தொடரும்..

(கட்டுரையாளர், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com