மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான்
மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: மோடிக்கு இம்ரான் கான் கடிதம்


இஸ்லாமாபாத்: மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார். 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

இதனிடையே பாகிஸ்தானின் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற இம்ரான் கான், பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவரை பாகிஸ்தான் படையினர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, எல்லை நெடுகிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். 

இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா பொதுசபை கூட்டத்தில் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும் பங்கேற்க உள்ளனர். அப்போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இம்ரான் கான் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 

கடந்த 2015-ஆம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com